தெய்வீகத்தின்(Divinity) வெளிப்பாடு
1940 –ம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று, உரவக்கொண்டா நகரத்து மக்கள் ஒரு பெரும் கருப்புத் தேள் சத்யாவை கொட்டியது என்று கேட்டு அதிர்ச்சியடைந்தனர். தேளோ,பாம்போ காணப்படவில்லை என்றாலும் சத்யா நினைவிழந்து, கீழே வீழ்ந்து உடல் விரைத்தது. சேஷமராஜு வைத்தியர் ஒருவரை அழைத்து வந்தார். இரண்டொரு நாளில் சத்யா படுக்கையை விட்டு எழுந்தார். ஆனால் அவரது நடத்தை அசாதாரணமாக காணப்பட்டது. சேஷமராஜு உடனே புட்டபர்த்தியிலிருந்த பெற்றோருக்கு விஷயங்களை தெரிவித்து வந்து, சத்யாவின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி சொல்லியனுப்பினார்.
இன்று ஸ்வாமி நினைவிழந்து கீழே வீழ்ந்ததாக தோன்றினால் எங்கோ இருக்கும் ஒரு பக்தனை காப்பதற்கு உடலை விட்டுச்சென்றார் என்று நாம் அறிவோம். கடினமான பொறுப்புள்ள வேலை முடியாதிருக்க பிழைக்க இயலாத, நோயினால் துன்பப்படும் பக்தனை காப்பாற்ற அந்த நோயினை ஸ்வாமிதானே ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் இப்போது நாம் அறிவோம்.
ஆனால் அக்காலத்தில் சத்யாவுடன் இருந்த மக்கள் இவற்றையெல்லாம் அறிந்திருக்கவில்லை. ஆகவே இது நடந்தபோது அதிர்ச்சியும் கிலேசமும் அடைந்தனர். பெற்றோர்கள் ஒருவாரம் கழித்து அங்கு வந்து சேர்ந்த்தனர். அக்காலத்தில் செய்தி போக்குவரத்து மிகவும் மந்தமாக இருந்தது. அவர்கள் கண்டதும் கேட்டதும் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தின. சில சமயங்களில் சத்யா மௌனமாகவும், அமைதியாகவும் இருந்தார். ஆனால் திடீரென்று பாடல்களையும், கவிதைகளையும் பாடினார். நீண்ட வடமொழி சுலோகங்களைக் கூறினார். வேதாந்த தத்துவங்களை விளக்கிக் கூறினார்.
ஒரு நாள் சத்யா ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது திடீரென்று “பக்கத்து வீட்டுக்காரர் சமஸ்கிருத புத்தகத்தை தவறாகப் படிக்கிறார். தப்பும் தவறுமாக விளக்கம் சொல்கிறார். சென்று அவரை கூட்டிகொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டார். சிறிய பையன் ஒருவன் இவ்வாறு கூறுவதைக் கேட்டு அந்த மனிதர் எரிச்சல் மிகுந்து “நான் சொல்லும் அர்த்தம் சரியா தவறா என்று அந்த பயலுக்கு என்ன தெரியும்? அங்கிருந்து கொண்டே நான் சொல்வதை எப்படிக் கேட்டான்? அவனது சொந்த வேலயைப் பார்க்க சொல் என்று எரிச்சலுடன் கூறினார்.
ஆனால் சத்யா விடாமல் அவரைகூட்டிகொண்டு வருமாறு நச்சரித்தார். அவரது பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த மனிதர் வந்தார். பெற்றோர்கள் அவரிடம் “நீங்கள் வந்து பணிவாக இருக்கவேண்டுமென்று புத்திமதி கூறுங்கள் என்று கூற அவர்களை திருப்தி செய்ய சாஸ்திரியார் சத்யா வீட்டுக்கு வந்தார். சத்யா அவரிடம் முன்பு படித்த பகுதியை படியுங்கள் என்று கேட்டார். பிறகு எந்த இடத்தில் அவர் தவறு செய்தார் என்பதை சுட்டிக் காட்டினார். இதிகாசங்களில் பல கேள்விகள் கேட்டு சாஸ்திரியாரை மயங்க வைத்தார். அவர் சத்யாவின் காலடியில் வீழ்ந்து வணங்கி, முதல்முறை கூப்பிட்ட பொழுதே கட்டளையை மதிக்காததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
சத்யாவை மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் காண்பித்தார்கள். பயனொன்றும் ஏற்படவில்லை. சத்யா பாடல்களைப் பாடினார்: கடவுளைப் பற்றிப் பேசினார். யாரும் முன்பு சென்றிராத யாத்ரிக ஸ்தலங்களை வருணித்தார். வாழ்வே ஒரு நாடகம் என்று கூறினார். இவ்வாறுதொடர்ந்து நடந்தது, சத்யா மென்மையாக, “ உஙகளுக்கேன் இந்த மனக்கவலை? செய்வதற்கு ஒன்றுமேயில்லை” என்று உறுதி கூறிய பின்னரும் பெற்றோர்கள் மனம் தளர்ந்து சத்யாவைத் தம்முடனே புட்டபர்த்திக்கு கூட்டிச் சென்றனர்.
அறியாமை காரணமாக வியாதியோ அல்லது தமக்கு புரியாத உற்பாதமோ ஏற்பட்டால், கிராமத்தினர் பயபீதி அடைந்து மூட நம்பிக்கை வாயிலாகத்தான் செயல் படுவார்கள். மனதை அரிக்கும் கவலைகொண்ட பெற்றோரிடம் யாரோ ஒருவர், பிராமணப்பள்ளியில் இருந்த மந்திரவாதி சத்யாவை குணப்படுத்துவார் என்று கூறினார். சத்யா அங்கு கூட்டிச் செல்லப்பட்டார். அந்த புகழ் பெற்ற மாந்திரீகவாதி பல முறைகளை கையாண்டார். சத்யாவின் தலை மொட்டை அடிக்கப்பட்டது. கூரான கருவி கொண்டு சிலுவை குறிகள் போன்று மண்டை கீறப் பட்டது. அந்த புண்களில், எலுமிச்சை,பூண்டு,இன்னும் பல பழங்களின் சாறுகள் ஊற்றப்பட்டன. சத்யா இவை அனைத்தையும் பொறுமையுடன் வலி தெரிவிக்காது ஏற்றுக் கொண்டதைக் கண்டு பெற்றோர்கள் ஆச்சர்யமடைந்தனர். சத்யா ஒரு சொட்டு கண்ணீரும் விடவில்லை. சிறிதும் முகம் மாறவில்லை. முடிவில் மாந்திரிகவாதி மிகுந்த கோபம் அடைந்து கண்ணுக்கு ஒரு கலவைப் பொருளை அப்பினார். அது கண்ணுக்கு மிகுந்த எரிச்சலை மூட்டியது. சத்யாவின் தலையும் முகமும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு வீங்கின. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. உடல் நடுங்கியது. பெற்றோரும் சத்யாவின் மூத்த சகோதரியும் மனத்துன்பத்தால் கன்ணீர் விட்டனர். ஆனால் சத்யா அமைதியாக இருந்தார்.
அறையை விட்டு வெளியே செல்லும்படியும் சைகை காண்பித்தார். மாந்திரிகவாதியின் கண்ணில் படாமல் வெளியே வந்து, தான் அறிந்த மருந்தை கொண்டு வருமாறு பெற்றோரிடம் கூறினார். அதனை கொண்டு வந்து கண்ணில் அப்பியதும் கண்வீக்கம் குறைந்தது. பெற்றோரும் நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள்.
இந்த சித்ரவதையின் போதெல்லாம் சத்யா புன்னகையுடனே இருந்தார். வலி உணர்வே இல்லை. ஏனெனில் தன்னை உடலுடன் சம்பந்தபடுத்திக் கொள்ளவேயில்லை, பின்னர் அவர் பெற்றோரை நோக்கி “ இப்போதாவது நான் சாயிபாபா என்று நீங்கள் நம்புகிறீர்களா? எனது தெய்வத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்று தான் நான் இவையெல்லாம் நிகழ்வதற்கு அனுமதித்தேன். திடீரென்று ஒரு நாள் நான் சாயிபாபா என்று அறிவித்துக்கொண்டால் உங்கள் பாதிப்பு எவ்வாறு இருக்கும்? துன்பம், வலி, மகிழ்ச்சி இவை ஒருபோதும் என்னை பாதிக்காது” என்று கூறினார்.
ஆனால் சத்யா படும் துன்பம் கண்டு பெற்றோர் மனம் தாளவில்லை, ஆகவே சினம் கொண்ட அந்த மருத்துவரை மிகுந்த பணம் கொடுத்து சமாதானப் படுத்திய பிறகு, அவர்கள் சத்யாவை புட்டபர்த்திக்குக் கூட்டிச் சென்றனர்.
ஒரு வக்கீல் நண்பர் ராஜுவீட்டினரை சந்திக்க வந்தார். இந்த சூழ் நிலையைப் பற்றி நன்றாக யோசித்து வெங்கப்பராஜுவிடம் கூறினார். இது தீவிரமான சூழ் நிலை. ராஜுவை கோவிலுக்கு கூட்டிச் செல்லுங்கள். அதைத் தவிர வேறு வழியில்லை. இதைகேட்டு சத்யா கூறினார் “விளையாட்டாக இல்லை? நான் தான் அந்த கோவிலில் குடியிருப்பவன். என்னையே என்னிடம் கூட்டிச் செல்ல விரும்புகிறாய் இல்லையா?” வக்கீல் அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்றார்.
1940-ஆம் மே மாதம் 23 ந்தேதியன்று சத்யா வீட்டிலுள்ள் அனைவரையும் அழைத்து தனது வெறும் கையசைவினால் வரப்பெற்ற மலர்களையும் கற்கண்டையும் கொடுத்தார். இதைக்கண்ட அண்டை வீட்டினர் ஓடி வர அவர்களுக்கும் பால் சாதம் , மலர்கள், கற்கண்டு இவற்றை அவர் தம் கையசைவினால் வரவழைத்துக் கொடுத்தார். சத்யா அன்று உற்சாகமாகக் காணப்பட்டார். சிலர் வெங்கப்பராஜுவுக்கு உடனே வந்து இந்த மாறுதலை காணும்படி சொல்லியனுப்பினார்கள். வெங்கப்பராஜு கூட்டத்தினிடையே முண்டியடித்துக் கொண்டு வந்த போது, அங்கிருந்தவர்கள் அவரை கை கால்,முகம் கழுவிக் கொண்டு பின்னர் வரதாயியிடம் (வரங்கள் தருபவர்) வரும்படி சொன்னார்கள் இது தந்தைக்கு மிகுந்த சினமூட்டியது. அவருக்கு சந்தேகமும் குழப்பமும் அதிகமாயின.
சினமும் திகைப்பும் ஒன்று சேர கையில் கம்பை எடுத்துக்கொண்டு வெங்கப்பராஜு சத்யாவை பயமுறுத்தினார். “யார் நீ” என்று கூச்சலிட்டார். உடனே பதில் வந்தது “ நான் சாயிபாபா”. தந்தை பிரமித்து வாய் மூடி மவுனமாக நின்றார். கம்பு கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. சத்யா தொடர்ந்து கூறினார் “நான் ஆபஸ்தம்ப சூத்திரத்தைச் சேர்ந்தவன். பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவன்.(ஷிர்டி சாயிபாபாவும் இது போலவே கூறியிருக்கிறார்) நான் உங்கள் துன்பங்ககளையெல்லாம் போக்க வந்திருக்கிறேன். உங்கள் மனதையும் வீடுகளையும் தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருங்கள்.
அவரது மூத்த சகோதரர் சேஷமராஜு ”நீயே சாயிபாபா என்று சொல்வதன் பொருளென்ன?” என்று அவரை நெருங்கிக் கேட்டார். அதற்கு சத்யா “ வெங்காவதூதர் உங்கள் குடும்பத்தில் நான் பிறக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்தார். ஆகவே நான் வந்தேன்” என்று மட்டும் கூறினார். “உனக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று தந்தை கேட்டார். “ஒவ்வொரு வியாழக் கிழமையும் என்னை வணங்குஙகள்” என்று பதில் உடனே கிடைத்தது.
சாயிபாபா என்ற சொல்லுக்கு தெய்வீக அன்னையும் பிதாவும் என்பது பொருள். அன்னை என்பது தன்னலமற்ற அன்பையும் தந்தை என்பது ஞானம் ஒழுக்கக்கட்டுபாடு ஆகியவற்றையும் குறிக்கும். இறைவன் இவ்வுலக அன்பு இயக்க விதி இவற்றைக் கொண்டே ஆள்கிறார்.
பிறகு ஒரு வியாழக்கிழமையன்று யாரோ ஒருவன் சத்யாவிடம் வந்து “ நீர் சாயிபாபா என்றால் இப்பொழுது அதை நிரூபித்துக்காட்ட வேண்டும்.” என்று சவால் விட்டான். “ சரி நான் நிரூபிக்கிறேன். முதலில் இந்த மல்லிகை பூக்களை என் கைகளில் வையுங்கள்” என்று கட்டளையிட்டார். சத்யா அவற்றை தரை மேல் விசிறி எறிந்து “பாருங்கள்” என்று கூறினார். என்ன அதிசயம்? கீழே விழும் போதே அவைகள் தெலுங்கு எழுத்திலே ‘சாயிபாபா’ என்று உருப்பெற்று அமைந்ததை எல்லோரும் கண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு விசேஷமுண்டு. அங்கு ஷீரடியை விட்டு செல்லு முன்பு பாபா தாஸ்கணுவிடம் தெரிவித்த கடைசி ஆசை தன்னை மலர்களால் மூடவேண்டுமென்பதுதான். இங்கு புட்டபர்த்தியில் தன்னை சாயிபாபா என்று தெரிவித்த பின் அவர் முதலாக கேட்டது தன் கையில் மலர்களை வைக்க வேண்டும் என்பதுதான், சேஷமராஜுவுக்கு இன்னும் சத்யாவின் தெய்வத்துவம் புரியவில்லை. அவர் சத்யாவை உயர் நிலைப்பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமென்ற திட்டத்தின்படி அவரை உரவக்கொண்டாவுக்குக் கூட்டிசென்றார். அங்கு சத்யாவின் புகழ் முன்பே பரவியிருந்தது.
வியாழக்கிழமை ஒவ்வொன்றும் உரவக்கொண்டாவில் விழாக்கோலம் பூண்டது. ஷீரடி சாயிபாபா படங்களையும் ஷிரடி சாயிபாபா அணிந்திருந்த அங்கியின் துணித் துண்டுகளையும் ஷிரடிசாயி பாபாவுக்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் பேரீச்சம்பழம் மலர்கள், வேறுவகைப் பழங்கள், கற்கண்டு, விபூதி, இது போன்றவற்றையெல்லாம் அங்குள்ளவர்களுக்கு வரவழைத்துகொடுத்து அவர்களையெல்லாம் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
ஹொசப்பேட்டையிலிருந்த (Hospet) சில பிரமுகர்கள் அவர்கள் நகரத்துக்கு விஜயம் செய்யுமாறு சத்யாவுக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள். பழைய விஜயநகர ஸாம்ராஜயத்தின் தலைநகரான, இப்போது இடிபாடுகள் நிறைந்த ஹம்பி (Hampi)க்கு சில மைல்கள் தொலைவில் தான் ஹொசபேட்டை இருந்தது. சேஷமராஜுவும் இந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட ஊருக்குச் செல்ல சம்மதித்தார். சுற்றுலாவுடன் இணைந்த நீண்ட பயணம் சத்யாவுக்கு நல்ல மாறுதலாக இருக்கும் என்று நம்பினார். அக்டோபரில் தஸரா விடுமுறைகளும் இதற்குத் தகுந்தாற் போல அமைந்தன.
அந்தக்குழு சிதைபட்ட ஹம்பி(Hampi) நகரத்துக்கு வந்தது. அங்கிருந்த விரூபாக்ஷர் கோவிலில் தரிசனம் செய்வது தான் அந்த பயணத்தின் முக்கிய அம்சம். அனைவரும் கோவிலுக்குள் சென்ற போது சத்யா மட்டும் கோவில் கோபுரத்தின் உயரத்திலும், கோவில் கதவின் பெருமையிலும் தன் மனதைப் பறிகொடுத்தவர் போல அங்கேயே நின்று கொண்டிருந்தார். மற்றவர்கள் யாரும் அவரை கோவிலுக்குள் வரும்படி வற்புறுத்தவில்லை.
சிறிது நேரம் கழித்து கோவில் அர்ச்சகர் அங்குள்ள லிங்கத்துக்கு கற்பூர ஆரத்தி காட்டினார். (லிங்கம், வடிவத்தை கடந்ததிலிருந்து வடிவம் வெளிவருவதையும் வடிவம், வடிவத்தைக் கடந்து அதனுள் லயமாவதையும் குறிக்கும் அடையாளச் சின்னம்). கற்பூர ஜோதியின் வெளிச்சம் லிங்கத்தின் மேல் விழுந்தபோது அனைவரும் பேராச்சரியம் அடையும் வகையில் லிங்கம் இருந்த இடத்தில் சத்யா நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். சிரித்த முகத்தோடு வழிபாட்டை சத்யா ஏற்றுக் கொண்டிருந்த்தார். சேஷமராஜுவுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. உடனே வெளியே ஓடி வந்து பார்த்த போது சத்யா ஒரு சுவரின் மேல் சாய்ந்து கொண்டு அடிவானத்தைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டார்.
அன்று வியாழக்கிழமை அல்ல என்றாலும் அந்த குழுவினர் சத்யாவுக்கு விசேஷ பூஜைகள் செய்தனர். அவர் ஒரு தெய்வீக அவதாரந்தான் என்ற அவர்களது நம்பிக்கை வலுப்பட்டது.
மறுநாள் அந்தக் கூட்டத்தினர் ஹொசப்பேட்டைக்கு வந்து சேர்ந்தனர். ஹம்பியில் நிகழ்ந்த அற்புதம் பற்றிய செய்தி முன்பே அந்நகரத்தில் பரவி விட்டது. அன்று வியாழக்கிழமை. மக்கள் பெருங்கூட்டமாக சத்யாவின் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர். அவர் நாட்பட்ட க்ஷயரோகம் பீடித்த ஒரு நோயாளியை நீவிக் கொடுத்து குணப்படுத்தினார். பக்தர்களுக்குப் பல்வேறு பொருட்களை அந்தரத்திலிருந்து வரவழைத்துக் கொடுத்தார். மக்களின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. இரவில் வெகு நேரம் வரையில் பஜனைகள் பாடிக் கொண்டே இருந்தனர்.மறு நாள் அனைவரும் உரவக்கொண்டா திரும்பினர்.
[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]