புலியின் கதை
ஸ்வாமி அனைத்து உயிர்களையும் ஒரே அளவில் நேசிக்கிறார். பிராணிகளைக் கொல்லுவதையோ, வேட்டையாடுவதையோ, அவரால் பொருத்துக் கொள்ள இயலாது.
பாபா உரவகொண்டாவிலிருந்து புட்டபா்த்தி திரும்பிய மறுநாள், ஒரு புதிய சம்பவம் நிகழ்ந்தது. சித்ராவதி நதியின் மறுபுறத்தில் உள்ள காட்டில் வேட்டையாடுவதற்கு, ஒரு ஆங்கிலேய அதிகாரி சென்றிருந்தா். அவா் ஒரு புலியை வேட்டையாடிக் கொன்று விட்டு அனந்தப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு காரணமுமில்லாமல் அந்த ஜீப் புட்டபா்த்தி கிராமத்துக்கு வெளியில் நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் ஜீப் டிரைவராலும், அந்த ஆங்கிலேய அதிகாரியாலும் அந்த ஜீப்பைக் கிளப்ப முடியவில்லை. இளம் வயதான சாயிபாபாவைப் பற்றிய கதைகளை ஜீப் டிரைவா் முன்னமேயே கேட்டிருந்தான். ஆகவே, அருகிலுள்ள கிராமத்தில் ஒரு சிறு பையன் இருக்கிறான் என்றும், அவன் கையசைவினால் புனித விபூதியை வரவழைக்கும் ஆற்றல் பெற்றவா் என்றும், அந்த விபூதி அனைத்தையும் குணப்படுத்தவல்லது என்றும், ஒருவேளை இந்த ஜீப் நகருவதற்கும் உதவி செய்யும் என்றும் அந்த அதிகாரியிடம் கூறினான். கிராமத்தில் பாபாவைத் தேடிக் கண்டுபிடித்து, அடுத்து ஆக வேண்டியதைச் செய்யும்படி டிரைவரிடம் சொல்லிவிட்டு அந்த அதிகாரி ஜீப்பில் காத்திருந்தார்.
டிரைவா் புட்டபா்த்தியின் தெருக்களில் சிறுது நேரம் அலைந்து கடைசியில் அந்தச் சிறுவனைக் கண்டான். அவன் ஒரு வார்த்தை கூறுவதற்கு முன் பாபா “நானே ஜீப்புக்கு வருகிறேன்” என்று கூறினார். நதிப்படுகையின் குறுக்கே நடந்து ஜீப் நின்று கொண்டிருந்த இடத்துக்கு வந்தார். ஜீப்புக்குள்ளே நோக்கி, அந்த அதிகாரி இரண்டு மணிநேரங்களுக்கு முன்னால் சுட்டுக் கொன்ற புலியைக் கண்டார். அந்த ஜீப் நிற்கும்படி செய்தது தானே என்று அவா்களிடம் பாபா கூறினார். காரணம் “சுடப்பட்ட அந்த புலிக்கு இரண்டே வாரம் வயதான மூன்று குட்டிகள் இருக்கின்றன. இப்போது என்ன செய்வதென்று அறியாமல் தாயைக் காணாமல், பசியுடன் அழுது கொண்டிருக்கின்றன. உடனே திரும்பிப்போ” பாபா கடுமையாக உத்தரவிட்டார். “அந்தப் புலிக்குட்டிகளை எடுத்துக்கொண்டு, எங்கே நன்கு பராமரிப்பார்களோ அந்த மிருகக் கண்காட்சி சாலைக்குக் கொடு. இனிமேல் காட்டு மிருகங்களை வேட்டையாடாதே. அவைகள் உனக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. பின் எதற்காக அவற்றைத் தேடியலைந்து, பொறி வைத்துப்பிடிக்கிறாய்? அதற்குப்பதிலாக காமிராவைக் கொண்டு அந்த மிருகங்களின் படம் எடு (shoot with a camera) அது துப்பாக்கியை விட உயா்ந்த கருவி. அது மிருகங்களைக் கொல்லாது, முடமாக்காது” பாபா கூறியபடியே அந்த ஆங்கிலேயா் செய்தார். அந்த புலிக்குட்டிகளைச் மிருகக்காட்சி சாலைக்குக் கொடுத்தார். அன்றிலிருந்து மிருகங்களை புகைப்படம் எடுப்பதிலேயே நேரத்தை செலவழித்தார். துப்பாக்கியைக் கொண்டு வேட்டையாடுவதை விட, காமிராவைக் கொண்டு காட்டு மிருகங்களைப் புகைப்படம் எடுப்பது, சாகஸம் மிகுந்த செயல். தவிர அது துன்பம் தவிர்த்த, அமைதியான, நற்குணம் நிறைந்த வாழ்க்கை முறை என்று அந்த ஆங்கிலேயர்அறிந்தார்.
பாபாவின் ஞானமிகுந்த அறிவுறைஅந்த அதிகாரியின் இதயத்தைத் தொட்டது. புலித்தோல் பதனம் செய்யப்பட்டு அவரிடம் திரும்ப வந்த போது, அதைப் பார்க்கக் கூடக் கண் கூசியது. அந்த தோலை புட்டபா்த்திக்கு கொண்டு வந்து பாபாவைப் பார்த்து, அவா் காலடியில் புலித்தோலை வைத்தார்.
[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]