வீணாக்காதே! அதிகம் விரும்பாதே!
ஓவ்வொரு பொருளும் ஒரு தனிப்பட்ட வகையில் பயன்பெறும், சிறந்த மதிப்பும் பெறும். நல்ல பாம்பின் நல்ல நஞ்சு கூட நல்ல வண்ணமாக மருந்தாக்கிப் பயன்படுத்தினால், பாம்பு கடித்து நஞ்சு ஏறி மரிப்பவர்களது உயிரை மீட்டுக் கொடுக்கும். இருந்த போதிலும், மக்கள் பொருட்கள், உணவுப் பண்டங்கள், பணம், காலம், வலிமை எல்லாவற்றையும் சரியான வழியில் இல்லாமல் வீணாக்குவதை அடிக்கடி நாம் காண்கிறோம்.
எல்லாப் பொருட்களையுமே வீணாகப் பாழாக்காமல் மிக்க எச்சரிக்கையோடும் சிறந்த அறிவோடும் பயன்படுத்தும் வழக்கம் ’சிக்கனம்’ என்று அழைக்கப்படுகிறது. பெரும் செல்வந்தனாக இருந்த போதிலும் அவன் வாழ்க்கையில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காது போனால், நாளடைவில் அவனது செல்வம் வற்றி ஏழ்மையை அடைவது திண்ணம். அதற்கு நேர்மாறாக, சிக்கனமாக உள்ள ஒருவன் அவ்வளவு பணக்காரனாக இராது போயினும், ஊதாரிச் செல்வந்தனைவிட அமைதியும் ஆனந்தமும் நிறைவான மனமும் கொண்டவனாக வாழ்வான்.
நம் தேசத் தந்தையார் மகாத்மா காந்தி அவர்கள் கடைப்பிடித்து வந்த சிக்கனம், அவருடன் வசித்தவர்களை அடிக்கடி வியப்பில் ஆழ்த்தி வந்தது. ஒரு நாள் காந்திஜியின் ஆசிரமத்தில் தங்கியிருந்த மீராபென் என்ற ஆங்கிலமாது, காந்திஜி அறை எங்கும் குனிந்து குனிந்துப் பார்த்து எதையோ தேடிக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். அவரது கவலை தோய்ந்த முகத்தைக் கண்டதும் மீராபென் அவரை அணுகி, “பாபுஜி! என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது பொருளைத் தொலைத்து விட்டீர்களா?” என்று பரிவோடு வினவினார். “ஆமாம், ஒரு பென்சிலைக் காணவில்லை” என்ற விடை பாபுஜியிடமிருந்து வந்தது. “அது புதிய பென்சிலா? எவ்வளவு நீளமிருக்கும்?” என்று மறுபடியும் வினவினார் மீராபென். அளவு தெரிந்தால் தானும் முனைந்து தேடிக் கண்டெடுத்துத் தரலாமே என்ற எண்ணத்துடன். “அது நான் இத்தனை நாள் பயன்படுத்தி வந்த பென்சில், உன் கட்டைவிரல் நீளம் தான் இருக்கும்,” என்று விடையளித்து விட்டுப் பின்னும் தேடலானார் பாபுஜி. அங்கிருந்த அனைவருக்கும் ஒரு சிறிய துண்டுப் பென்சிலுக்காக இவர் ஏன் இவ்வளவு தொல்லைப்படுகிறார் என்ற வியப்பே எழுந்தது.
அதற்குள் ஒருவர் ஒரு புது எழுதுகோலுடன் அங்கு வந்து பாபுஜிக்கு அதைத் தந்தார். உடனே பாபுஜி, “நான் புது எழுதுகோலைக் கேட்டதாக யார் உனக்குச் சொன்னது? நான் மூன்று வாரமாக எழுதி வந்த எழுதுகோல் தான் எனக்குத் தேவை” என்று சொல்லி அப்புதிய எழுதுகோலை வாங்க மறுத்துவிட்டார். பழைய எழுதுகோலைத் தேடும் படலம் தீவிரமாகச் செயல்பட்டது. இறுதியில், கடிதக்கட்டுக்களிடையே அந்த எழுதுகோல் கண்டெடுக்கப்பட்டது. முகத்தில் ஒளிவீசும் மகிழ்வுடன், ஒரு பெறும் குற்றம் செய்வதிலிருந்து தப்பிய நிறைவுடன், “ஆ”ஆ” என்று சிரித்து ஒளி நிறைந்து மகிழ்ந்தார், மகாத்மா.
ஒரு முறை பாபுஜி, மீராபென்னுடன் சுற்றுப்பயணம் சென்றார். இருவரும் ஒரு கிராமத்தை அடைந்தனர். உணவு உண்ணும் போது சிறிது தேன் அருந்துவது பாபுஜியின் வழக்கம். ஆனால் மீராபென் ஆசிரமத்திலிருந்து தேன்புட்டியை எடுத்துவர மறந்து விட்டார். அதனால் விரைந்து சென்று கடையிலிருந்து ஒருபுதிய தேன்புட்டி வாங்கி வந்து வைத்துவிட்டார். பாபுஜி சாப்பிட வந்தார். மேசை மீது புதிய தேன்புட்டி இருந்தது. “இதுவரைப் பயன்படுத்தி வந்த தேன் புட்டி எங்கே?” என்று வினவினார். “அதை எடுத்து வர மறந்து விட்டேன் பாபுஜி!” என்று மெல்லப் பகன்றார் மீராபென். “அதற்காக வேறொன்று புதிதாக வாங்கி விட்டாயா?” என்று சற்றுக் கோபம் கலந்த குரலில் கேட்டு விட்டு, “நாம் செலவிடும் பணம் பொது மக்களுடையது. நாம் அதை வீணாகச் செலவழிக்கக் கூடாது. எனவே, பழைய தேன் தீரும் வரை நான் புதுத் தேனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று உறுதியாகக் கூறினார். பாபுஜி சொன்ன வண்ணமே செய்தும் காட்டினார். அந்தச் சுற்றுப்பயணம் முழுவதும் தேன் அருந்தாமலே இருந்து, ஆசிரமம் திரும்பிய பின்னரே பழைய தேன்புட்டியிலிருந்து தேனை அருந்தினார்.
என்னே அவரது நெஞ்ச உறுதியும் நிகரிலாச் சிக்கன வாழ்வும்!
கேள்விகள்:
- சிக்கனம் என்பது என்ன?நாம் ஏன் அதைக் கடைப்பிடிக்கவேண்டும்?
- உனக்கு ரூ.100 வெகுமதியாகக் கிடைத்தால் அந்தப் பணத்தை நீ என்ன செய்வாய்?
- பணம், காலம், வலிமை மூன்றையும் மக்கள் பல வழிகளில் வீணாக்குவது குறித்து ஒவ்வொன்றிலும் நான்குவழிகள், மற்றும் அதைத் தடுத்து நிறுத்துவது எவ்வாறு என்பது குறித்தும் கூறு.