பதறிய காரியம் சிதறும்
ஒரு முறை ஒரு கோட்டையிலிருந்து மற்றொரு கோட்டைக்குப் போய்க் கொண்டிருந்த மன்னன் சிவாஜி,வழியைத் தவற விட்டுவிட்டான். ஒரு மலையின் உச்சியிலிருந்து சுற்றிலும் பார்த்தான் அண்மையில் ஒரு சிறு கிராமம் கூட அவன் கண்களுக்குத் தென்படவில்லை. இரவில் கரிய இருள் வேகமாகக் குவிந்து வந்தது. மலையிலிருந்து அவன் கீழே இறங்கி வரத் தொடங்கிய போது, ஒரு விண்மீனைப் போலப் பளபளத்து ஒளி வீசிய ஒரு மங்கலான விளக்கொளியைக் கண்டான். ஒளி வந்த திசையில் நடந்து சென்று ஒரு குடிசையை அடைந்தான்.
அந்த குடிசை, ஒரு வயதான பெண்மணியினுடையது. அவள் அவனை ஒரு மராட்டியப் போர் வீரன் என்று எண்ணி அன்போடு வரவேற்றாள். களைப்புற்று, பசியோடு இருப்பதைக் கண்ணுற்ற அவள், கை கால் முகம் கழுவ அவனுக்கு வெதுவெதுப்பான வெந்நீர் தந்தாள். படுத்து ஓய்வெடுக்க ஒரு பாயை விரித்தாள். போதுமான ஓய்வேடுத்ததும் ஒரு தட்டில் சுடச்சுடக் கிச்சடி (வலிமை தரவல்ல ஒரு தானியத்தால் செய்த உணவுப் பண்டம்) கொண்டு வந்து அவன் முன் வைத்துச் சாப்பிடும்படி உபசரித்தாள்.
சிவாஜிக்கு நல்ல பசி.அதனால் விரைவாக ஒரு கவளம் எடுத்து உண்ண ஆவலோடு தட்டின் நடுவில் வேகமாகக் கையை வைத்தான். மிக்க சூடாக இருந்த உணவு அவன் கையைச் சுட்டுவிட்டது. கையை வெளியே எடுத்து உதறினான். கையில் ஒட்டியிருந்த உணவு எங்கும் சிதறியது.
அந்த மூதாட்டி நடந்தது அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.“நீயும் உன் தலைவன் சிவாஜியைப் போலவே பொறுமையற்றவனாகவும், அவசரமாகச் செயலாற்றுபவனாகவும் இருக்கிறாய்.! அதனால் தான் விரல்களைச் சுட்டுக்கொண்டு, உன் உணவிலும் கொஞ்சம் இறைத்துப் பாழாக்கிவிட்டாய்.” என்று குறிப்பிட்டாள்.
சிவாஜி அவளது குற்றச்சாட்டைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததோடு, பெரும் வியப்பும் அடைந்தான். “என் தலைவர் சிவாஜியை ஏன் பொறுமையற்றவர் என்றும் அவசரமாக செயலாற்றுபவர் என்றும் நினைக்கிறாய்?” என்று கேட்டான்.
அதற்கு அந்த மூதாட்டி வெகுளித்தனமாகத் தன் மனத்தில் இருந்ததைக் கூறினாள். “இங்கே பார் மகனே! சிவாஜி தன் எதிரிகளின் சிறிய கோட்டைகளை அசட்டையாக விட்டு விட்டுப் பெரிய கோட்டைகளையே கைப்பற்ற முயல்கிறான் அல்லவா! நிதானமாக உண்ணாமல், அவசரமாகச் செயல்பட்டு விரல்களைச் சுட்டுக்கொண்டு உணவையும் சிதறவிட்ட உன்னைப் போலவே, பகைவனை வீழ்த்தி விட வேண்டும் என்ற சிவாஜியின் பொறுமையற்ற தன்மை அவனுக்கு மிகுந்த கவலையைத் தருவதோடு அவனது வீரர்கள் பலரையும் இழக்கச் செய்கிறது. நீ முதலில் ஓரத்தில் சற்று ஆறியிருக்கும் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு கொண்டே வந்து, நடுவில் இருக்கும் குவியலுக்கு வந்திருக்கவேண்டும். அதே போல சிவாஜியும் சிறிய சிறிய கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டே வந்து, தன் நிலைமையைச் சுற்றிலும் உறுதியாக வலிமைபெறச் செய்து கொள்ளவேண்டும் அது பெரிய கோட்டைகளை அவன் எளிதாக, விரைவாகப் பற்றிவிடத் துணை புரியும். படை வீரர்களுக்கும் அதிக சேதமிராது.” என்று நீண்ட அறிவுரை வழங்கினாள் அந்த மூதாட்டி.
சிவாஜி அந்த மூதாட்டியின் அறிவார்ந்த சொற்களில் இருந்த ஆழ்ந்த கருத்துக்களை விரைவில் எளிதாகப் புரிந்துகொண்டான். ஒருவன் தான் மேற்கொண்ட காரியம் வெற்றியுடன் முடிவுற வேகமும் அவசரமுமான செயல்களை ஒதுக்கி, ஆழ்ந்து சிந்தித்து நிதானமாகச் செயலாற்றவேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டான்.
“ஆழச் சிந்தித்துப்பார்; தெளிவாகத் திட்டமிடு;பிறகே படிப்படியாக முன்னேறு.” இதுவே பின்னர் அவனது குறிக்கோள் ஆகியது.அவனது கனவான ஒரு பெரிய மராட்டிய அரசை உருவாக்க இங்ஙனமாக உணர்ந்து செயலாற்றியே வெற்றி பெற்றான் சிவாஜி.
கேள்விகள்:
- விரைவு ஏன் தீங்கை விளைவிக்கிறது?
- அந்த மூதாட்டி அவனைக் குற்றம் சாட்டியபோது ஏன் சிவாஜி கோபம் கொள்ளவில்லை?
- விரைவு தீங்கை விளைவிக்கும் என்பதைப் பற்றி உன்னுடைய அல்லது மற்றவருடைய அனுபவத்தை விளக்கி எழுது.