எச்செயலும் இழிவானதல்ல
இந்தியர்கள் தங்கள் நாட்டின் தந்தையாக மகாத்மா காந்திஜியை மதித்துப் போற்றுகின்றனர். அதே போல் அமெரிக்கர்கள் ஜார்ஜ் வாஷிங்டனைத் தங்கள் நாட்டுத் தந்தையாக நினைத்து மதிக்கின்றனர். உயர்வான உள்ளத்தைப் பெற்றிருந்த அவர் எதற்கும் அஞ்சாத வீரரும் ஆவார். அவரது ஒரே ஆசை, தம் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை புரிவதேயாகும்
அமெரிக்க விடுதலைப் போராட்டத்தின் போது ஜார்ஜ் படைத் தளபதியானார். ஒரு நாள் படையினரின் கூடாரங்களில் எல்லாம், சரிவர இருக்கிறதா என்று கவனிக்க ஒரு குதிரை மீதேறிச் சென்றார். பாசறையின் இறுதியில் இரு புதுகட்டடம் எழும்பிக் கொண்டிருந்தது. படைத்தலைவன் ஒருவன் அங்கு நின்று கொண்டு நீண்ட பெரிய இரும்புத் தூலம் ஒன்றைக் கட்டடத்தின் மேற்பகுதிக்குத் தூக்குமாறு, ஆறு வீரர்களுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தான். அந்த தூலம் மிக்க கனமானதாக இருந்தது. தலைவனது கட்டளைக்கிணங்க, ஆறுவீரர்கள் சேர்ந்தும் கூட அதைத்தூக்கப் பெரும் பாடு பட்டனர். ஆனால் அந்தத் தலைவனோ அவர்கள் கஷ்டத்தை கவனித்துப் பொருட் படுத்தியவனாகவே தெரியவில்லை. அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு உதவவும் முன் வராமல் எட்டத்தில் இருந்தபடியே “ஊம்,ஊம். தூக்குங்கள், தூக்குங்கள்” என்று உரக்கக் கத்திக்கொண்டிருந்தான்.
ஜார்ஜினால் இந்தத் துயரக் காட்சியைக் காணவே இயலாது போயிற்று. தலைவன் அருகே சென்று,” இரும்பு உத்தரம் மிக்க கனமானது. நீயும் அவர்களுக்கு ஏன் உதவி புரியக்கூடாது?” என்று கேட்டார். கேட்ட விரைவில் விடையும் வந்துற்றது. “ஓ! அது போர் வீரர் செய்ய வேண்டிய வேலை. நான் ஒரு படைத் தலைவன் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று அக்கறையோடு உரைத்தான் அவன். “அப்படியா! எனக்குத் தெரியாது. மிக்க வருந்துகிறேன்!” என்று சுருக்கமாகக் கூறிவிட்டுக் குதிரையினின்றும் கீழிறங்கினார் ஜார்ஜ். அந்த வீரர்களோடு சேர்ந்து உத்தரத்தை கட்டடத்தின் உச்சிக்குத் தூக்குவதில் அவர்களுக்கு உதவி செய்தார். உத்தரம் நிலையில் எடுத்துச் சென்று நிறுத்தப் பெற்றது.
பிறகு அந்தத் தலைவன் பக்கம் திரும்பி “படைத்தலைவா!அடுத்த முறை இதே போல ஏதாவது தூக்க நேர்ந்து, போதுமான வீரர்களும் இல்லாமற் போனால் என்னைக் கூப்பிட்டனுப்புங்கள். முழுப்படைக்குமே தலைவனான தளபதி நான், மிக்க மகிழ்வுடன் வந்து அவர்களுக்கு உதவி செய்கிறேன்” என்று அமைதியாகக் கூறிவிட்டுச்சென்றார்.
தலைவன் அவரது சொற்களைக் கேட்டு அதிர்ச்சியினால் வாயடைத்து நின்றான். தன் நிலைபெற்று ஓடிச்சென்று ஏதாவது சமாதானமாக அவன் கூறும் முன்னரே அவர் குதிரை மீதேறி வேகமாகத் தம் கூடாரத்தை நோக்கிச் சென்று விட்டார். செருக்கு மிக்க அந்தத் தலைவனுக்கு ஜார்ஜ் ஒரு சரியான பாடம் கற்பித்தார்.
செயல்களும் கடமைகளும் எப்படிப்பட்டவனாக இருந்த போதிலும் உலக மக்கள் அனைவரும் சமமானவர்கள் தாமே! அதனால் ஒவ்வொருவரும் மரியாதையுடனும் அன்புடனும் நடத்தப்பெற வேண்டும். ஒருவனை உயர்த்துவதோ தாழ்த்துவதோ அவனுடைய நல்ல அல்லது தீய பண்புகள்தாம். அவன் செய்யும் வேலை அன்று.
கேள்விகள்:
- படைத்தலைவன் செய்த தவறு என்ன?
- ஜார்ஜ் வாஷிங்டன் கூறியதைக் கேட்டவுடன் ஏன் தலைவன் அதிர்ச்சியடைந்தான்?
- தலைவனுடைய இடத்தில் நீ இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?
- ஒரு மனிதனை உயர்ந்தவனாக்கும் சில நல்ல இயல்புகளைக்கூறு. அவனை இழிந்தவனாக்கும் சில தீய இயல்புகளையும் கூறு.