சமயோசிதம்
ஒரு வீடு தீப்பற்றிக் கொண்டது. ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று மரத்தில் மோதியது. குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்துவிட்டது போன்ற செய்திகளை நாம் அவ்வப்போது கேட்கிறோம். அது போன்ற ஒரு விபத்து நேரிட்டால் அதைக் கேள்விப்படுபவர் அனைவரும் அந்த இடத்துக்கு விரைந்து ஓடுவர். அங்கு நடைபெற்றிருக்கும் கோர நிகழ்ச்சியைப் பார்த்ததும் அவர்களில் பலர் அச்சமிகுதியால் செய்வதறியாது செயலற்று நிற்பர்.
அந்தத் திகைப்பில் அவர்களால், கூர்ந்த அறிவோடு பொறுமையாக அந்த சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கவும் முடியாது. விபத்தினால் இழக்கவிருக்கும் உயிரையோ பொருளையோ மீட்க விரைந்து செயலாற்றவும் தெரியாது. திகைத்து நிற்பர். அத்தகைய நெருக்கடியான நேரங்களில், தகுந்தபடி விரைந்து செயலாற்றும் வகையில், கலங்காத ஆழ்ந்த சிந்தனைத்திறனும் உடனடியான ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய உறுதியான நெஞ்சமும் கொண்டிருத்தலே “சூழ் நிலைக்கேற்பச் செயலாற்றும் மன நிலை” என்று கூறப்படுகிறது. இத்தகைய மன நிலை பெற்றவர்கள் விபத்து நேர்ந்த காலங்களில் மட்டும் அல்லாமல், பஞ்சம், வெள்ளம், போர் போன்ற சூழ் நிலைகளிலும் மக்களுக்கு உதவியாக இருப்பார்கள். எப்படி அவர்கள் இன்னல் நேரிட்டவர்களுக்கு உதவவும், சேவை புரியவும் முன் வருகிறார்கள்? சிலருக்கு மட்டும் ஏன் இத்தகைய உறுதியான மன நிலை வாய்த்திருக்கிறது? அதற்குக் காரணம், சிறு வயதிலிருந்தே அவர்கள் தங்கள் மனதைக் குறிப்பிட்ட அளவு ஒழுங்குக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப் படுத்தி வைத்திருப்பது தான் எங்கு எப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டாலும் அவர்கள் தங்கள் மனதை அலைக்கழித்துக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். மாறாக கூர்ந்த அறிவோடு பொறுமையாக சிந்தித்து உடனே தேவைப்பட்டதைச் செயலாற்றத் துவங்குவார்கள். சுறுசுறுப்பான சிறுவன் ஒருவனின் கதையை இங்கு உதாரணமாகக் கூறலாம். தன்னிலும் இளையவர்களை இத்தகைய திடமான மன நிலையில் தங்களை வளர்த்துக் கொள்ளுமாறு எப்படி அவன் ஊக்குவித்தான் என்பதை இங்கு காணலாம்.
அலகாபாத்தில், ஒரு பெரிய தோட்டத்தில் சில சிறுவர்கள் பந்தும் மட்டையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் மட்டையை வீசித் தன் பலம் கொண்டமட்டும் பந்தை அடித்தான். அது ஒரு சிறிய கனமற்ற பந்தாகையால் அடியின் வேகத்தில் மிக உயரச்சென்று கீழிறங்கி வந்து ஒரு ஆலமரத்தின் பொந்தில் விழுந்துவிட்டது. அதை எடுக்க ஒவ்வொரு சிறுவனாக முயன்றனர் பொந்து ஆழமாக இருந்ததாலும் சிறுவர்களின் கை அதுவரை எட்டாததாலும் அவர்களால் பந்தை எடுக்க முடியவில்லை. வழியில் சென்ற கனிந்த அன்பினர் ஒருவர் கூட முயன்று பார்த்துத் தோல்வியடைந்தார். எல்லோரும் சேர்ந்து பந்தை அடித்தவனை ஏன் அவ்வளவு வேகமாக அடித்தாய்? என்று திட்டத்துவங்கி விட்டனர். எல்லோரும் ஒரு முகமாகத் திட்டவே அவன் அஞ்சி அழத்தொடங்கினான்.
அப்போது, தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த அறிவிற் சிறந்த சிறுவன் ஒருவன் தன்னைப் போன்ற ஒரு சிறுவன் அழுவதைப் பார்த்துப் பொறுக்காதவனாக அருகே வந்து காரணம் என்ன என்று வினவினான். அவர்கள் நடந்ததைக் கூறினர். “அந்த மாமாவும் பந்தை எடுக்க முயன்றார், அவராலும் முடியவில்லை” என்றான், அழுது கொண்டிருந்த சிறுவன். “கவலைப்படாதே” என்று அந்த நுண்ணறிவு உள்ள சிறுவன் அழுதவனை முதுகில் தட்டிக்கொடுத்தான்.” நான் உனக்கு அந்த பந்தை வெளியே எடுத்துத் தருகிறேன். அதற்காக, ஒரு வாளி நிறையத் தண்ணீர் கொண்டு வா” என்றான்.
அவர்களில் ஒருவன் ஓடிச்சென்று, தோட்டக்காரனின் உதவியோடு ஒரு வாளி நீரை எடுத்து வந்தான். அறிவிற் சிறந்த அந்த சிறுவன், தண்ணீரை அந்த மரப்பொந்தில் ஊற்றலானான். மிக விரைவில் அந்த பொந்தில் தண்ணீர் நிறைந்து அதில் பந்து மிதந்து மேலே வந்தது. உடனே ஒரு சிறுவன், அந்தப் பந்தைப் பற்றிக்கொண்டு மகிழ்ச்சியாகக் குதித்து ஆகாயத்தில் வீசி எறிந்து, ஹிப், ஹிப், ஹுர்ரா!” என்று வெற்றிக்களிப்பில் கூவினான். மற்றவர்களும் இந்த உற்சாகத்தில் மலர்ந்த முகத்துடன் கலந்து கொண்டனர். அனைவரும், விளையாடும் இடத்திற்குத் திரும்பவும் ஓடிச்சென்று விளையாட்டைத் தொடர்ந்தனர். அந்த சுறுசுறுப்பான சிறுவன் யார் என்று நினைக்கிறீர்களா? அவன் தான் நம் அண்ணல் ஜவஹர்லால் நேரு.
கேள்விகள்:
- சூழ் நிலைக்கேற்பச் செயலாற்றும் மன நிலை என்றால் என்ன? அதை எப்படி ஒருவர் பெற முடியும்?
- நீ எப்போதாவது சிக்கலான நிலையில் அதுபோன்ற மன நிலையைக் காட்டியிருக்கிறாயா? அப்படியாயின் அது எந்த மாதிரி நிகழ்ச்சி? எப்படி நீ தக்க நடவடிக்கை எடுத்தாய்?
- ஒரு விபத்தின்போது நீ அங்கிருந்து, உன்னுடைய விரைந்து செயலாற்றும் மன நிலையைப் பயன்படுத்தித் துன்புற்றவர்களுக்கு எப்படி உதவினாய் என்பதை கற்பனை செய்து விளக்கு