எளிய இதயமும் எளிய உடைகளும்
விலை உயர்ந்த பகட்டான ஆடைகளை அணிவதால் தான் நாம் போற்றி மதிக்கப் பெறுகிறோமா? அறிவிலிகள் தாம் அங்ஙனம் உயர்ந்த ஆடைகள் மற்றும் அழகழகான அணிகலன்களால் தாம் அவர்களிடம் மற்றவர்களுக்கு மரியாதையும் மதிப்பும் ஏற்படுகின்றன என்று நினைக்கிறார்கள்.
எப்போதும் துவைத்துச் சுத்தமான, சுருக்கங்களற்ற, பார்வைக்கும் சற்றுத் தகுதியான உடைகளையே உடுக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், மிக விலையுயர்ந்த, பகட்டான ஆடைகளை உடுத்தினால்தான் மற்றவர் மதிப்பர் என்ற எண்ணமே தவறானதாகும். நிறையப்பொருள் கொடுத்து ஆடம்பரமாக ஆடை அணிகலன்களை வாங்குவது பணத்தை வீணாக்கும் செயலாகவும் ஆகிறது. அந்தப் பணத்தினால் வேறு எத்தனையோ நன்மைகள் புரியலாம்.
உலகப் புகழ் பெற்ற பெரியோர்கள் பலர் எப்போதும் எளிய ஆடைகளை அணிந்து அடக்கமான பண்பு பெற்றவர்களாக இருந்துள்ளனர். உன்னித்துப் பார்த்தால், உடையிலும், ஒழுக்கத்திலும் அவர்கள் கொண்டிருந்த இத்தகைய எளிய பண்பே அவர்களை உயர்த்தியிருக்கிறது என்றும் அறியலாம்.அங்ஙனம் வாழ்ந்த இருவரது வரலாற்றை இங்கு காண்போம்.
I. மைக்கேல் பாரடே
மைக்கேல் பாரடே என்பவர் ஒரு மாபெரும் விஞ்ஞானி. மின் சக்தியை உண்டு பண்ணுகிற ‘டைனமோ’ எனப்பெறும் இயந்திரப் பொறியைக் கண்டுபிடித்தவரும் அவரே. அந்தக் கருவியின் மூலமாகத் தான் நாம் நம் வீடுகளில் ஒளிவீசும் மின் விளக்குகளையும், தொழிற்சாலைகளுக்கு மின் ஆற்றலையும் பெறுகிறோம். அவர் தம் பெருமையை எப்போதும் பறைசாற்றிக் கொண்டதேயில்லை. அவரது எளிய உடையும், அடக்கமான இயல்பும் பேரறிஞராக இருந்த அவரை மற்றவர்கள் பலமுறை கண்டுகொள்ள இயலாமல் செய்திருக்கிறது.
ஒரு முறை அரசாங்க அலுவலர் ஒருவர் பாரடேயைச் சந்தித்துப் பேச விரும்பினார். அவர் ராயல் விஞ்ஞானச் சங்கத்தின் அலுவலர் ஒருவரைக் கண்டு வினவினார். அவர், பாரடே தன் விஞ்ஞானச் சோதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த ஒரு பெரிய அறைக்கு வழி காட்டினார். காணவந்தவர் அறையை அடைந்து உள்ளே நுழைந்த போது, பழுப்பு நிறக் கால் அங்கியும் வௌ்ளை மேலங்கியும் அணிந்த வயதான ஒருவர் புட்டிகளைக் கழுவி கொண்டிருந்ததைக் கண்ணுற்றார். வந்தவர் அவரிடம், ”நீ இந்த நிறுவனத்தின் காவலாளா?” என்று கேட்டார். “ஆம்” என்று விடை சொன்ன வயதானவர், உயர்ந்த முறையில் உடுத்தியிருந்த அந்தப் பார்வையாளரை ஏறிட்டுப் பார்த்தார். “எத்தனை நாட்களாக இங்கு வேலை பார்க்கிறாய்?” என்று மேலும் கேட்டார் வந்தவர் ஆர்வமுடன். “நான்கு ஆண்டுகளாக” என்று பொறுமையுடன் பதிலளித்தார் கிழவர்.
“இவர்கள் கொடுக்கும் ஊதியத்தில் நீ மன நிறைவாக இருக்கிறாயா?” என்று மூன்றாவது கேள்வியைக் கேட்டார் வந்தவர். கிழவர் புன்சிரிப்புடன்,”உண்மையில் மன நிறைவோடுதான் இருக்கிறேன்,”என்றார்.
இறுதியாக, “உன் பெயர் என்னவென்று கூறவில்லையே!” என்று கேட்டார். “எல்லோரும் என்னை மைக்கேல் பாரடே என்று அழைப்பார்கள்,” என்று அந்தக் கிழவர் அமைதியாக விடையளித்ததைக் கேட்டதும் வந்தவருக்கு தூக்கி வாரிப் போட்டது. சற்று நேரம் செயலிழந்து நின்றார். பிறகு, தான் செய்து விட்ட பெருந்தவறுக்கு மிகவும் வருந்தியவராய், மன்னிக்கும் படி பாரடேயை வேண்டினார்.
“உலகப் புகழ் பெற்றுச் சிறப்பவர் எத்துணை எளியவராக உள்ளார்! அல்லது மனத்தளவில் மிக எளிமையாக உள்ளமையால்தான் இவ்வளவு சிறந்து விளங்குகிறாரா!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் பாரடேயைக் காண வந்த பெருமகன்.
II. மகாத்மா காந்தி
காந்திஜி ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க ஒரு பெரும் அளவில் திட்டமிட்டு நாடு முழுதும் கிளர்ந்து எழச்செய்தார். அவர் போகும் இடங்களிலெல்லாம், மக்கள் கூட்டத்தினரால் உரக்க எழுப்பப்படும். “மகாத்மா காந்திஜிக்கு ஜே!” என்னும் கோஷங்களால் போற்றப் பெற்றார் காந்திஜி.
ஒரு நாள் காலை ரிச்சர்ட் கிரக் என்ற ஒரு அமெரிக்கர் சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தார். அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற அரும் பாடுபடும் மிகச் சிறந்த தேச பக்தரான காந்திஜியை வியந்து போற்றுபவர் அவர். அவர் வந்த போது ஆசிரம அலுவலகம் திறக்கப்படவில்லை. கிரக் அருகிலிருந்தவரிடம், “காந்திஜியை எங்கு பார்க்க முடியும்?” என்று கேட்டார். காந்தி எல்லோரும் உணவருந்தும் சாப்பாட்டறையில் இருப்பதாக அறிவிக்கப் பெற்றார். “நான் அங்கு போய் அவரைப் பார்க்க முடியுமா?” என்று சற்றுத் தயக்கத்தோடு கிரக் கேட்டார். “தயக்கமின்றிப் பார்க்கலாம். அவர் அங்குத் தனிமையில்தான் இருக்கிறார்,” என்று விடை வந்தது.
காந்திஜி காலை உணவு அருந்தும் நேரத்தில் போய்த் தொல்லை தருகிறோமோ என்ற ஓர் அச்ச உணர்வுடன், தயங்கித் தயங்கிச் சாப்பிடும் அறைக்குள் சென்றார் கிரக். ஆனால் அவர் அங்கு கண்ட காட்சி என்ன? இந்தியாவின் புகழ் பெற்ற விடுதலைப் போராட்டக்காரர் காலை உணவிற்காகக் காய்கறிகளின் தோல்களைச் செதுக்கிக் கொண்டிருந்தார். முழங்கால் வரையில் தொங்கிய ஒரு வேட்டியும் தோளில் ஒரு சிறிய கம்பளித் துண்டும் மட்டுமே அவர் அணிந்திருந்தார்.
“உள்ளே வாருங்கள்! உள்ளே வாருங்கள்!” என்று ஒரு புன்னகையோடு காந்திஜி வந்தவரை வரவேற்றார். மேலும், “நான் இந்தச் சிறிய பணிகளைச் செய்து கொண்டே பேசுவதில் உங்களுக்குத் தடை ஒன்றும் இல்லையே!” என்று கனிவோடு வினவினார்.
அந்த அமெரிக்கர், தான் கண்டும் கேட்டும் இருந்தவைகளால் பேசவே இயலாமல் நெஞ்சம் நெகிழ்ந்து போயிருந்தார். காந்திஜியின் எளிமையான, அடக்கமான பண்பு ஒரு காந்தம் போல அவரைக் கவர்ந்திழுத்தது. மறுகணமே அவரும் காந்திஜியுடன் அமர்ந்து கொண்டு அவருடன் சேர்த்து காய்கறிகளின் தோல்களைச் செதுக்கலானார்.
இங்ஙனம் தான் மிகச் சிறந்த பெரியோர்கள் இனிய பண்பும் எளிய உடையுமாக உலவி வந்து, தம்மைப் பின் தொடர்ந்து வருபவர்களுக்கு உலகை இன்பமாக்கிக் காட்டினர்.
கேள்விகள்:
- நல்ல உடை, மோசமான உடை என்பது குறித்து உன் சொந்தச் சொற்களில் விவரித்துக்கூறு.
- இந்த இரண்டு நிகழ்ச்சிகளால் நீ என்ன கற்றுக்கொள்கிறாய்?
- யார் மகிழ்ச்சியான மனிதர் – எளிய அடக்கமான பண்பு பெற்றவரா அல்லது பகட்டும் தற்பெருமையும் நிறைந்தவரா? உன் விடைக்கான காரணங்களைக் கூறு.