பஜகோவிந்தம் முன்னுரை
ஒருநாள், சங்கரர் தனது பதினான்கு சீடர்களுடன் வாரணாசியின் தெருக்களில் நடந்து வந்தார். அவ்வமயம் வயது முதிர்ந்த பண்டிதர் பாணினியின் இலக்கண விதிகளை மனப்பாடம் செய்வதைக் கேட்டார். வயிறு நிரப்பும் அறிவை வளர்ப்பதில், வாழ்க்கையின் இறுதிப் பருவத்தை, வீணடிக்கும் முதியவரின் அறியாமையினைக் கண்டு மனம் வருந்தினார். இதற்கு பதிலாக, இறைவனைத் தியானம் செய்வதிலும், ஆன்மீகத் தெளிவுக்காகவும், சம்ஸாரத் தளை (பிறப்பு, இறப்பு சுழற்சி) யிலிருந்து விடுபடவும், பிரார்த்தனை செய்வதிலும் நேரத்தைப் பயன்படுத்தினால் எவ்வளவு நலமாக இருக்கும் என நினைத்தார். இது முதியவரின் மதிமயக்கம் மட்டும் அல்ல. மனித சமுதாயத்தில் பெரும்பாலோரின் மதிமயக்கமும் இதுவே என்றறிந்தார். மனிதனின் அவல நிலையினைக் கண்டு, கருணையால் மனம் நெகிழ, சந்தத் தொடரான “பஜகோவிந்தம்” என்று அழைக்கப்படும் 31 பாடல்கள் அவரிடமிருந்து வெளிவந்தன.
“ஓ மூடனே! அறிவில்லாதவனே! காலதேவன் கதவினைத் தட்டி உன்னை இழுத்துச் செல்லும்போது, இந்த இலக்கண விதிகள் (அதாவது உலகியல் கல்வி) உன் உதவிக்கு வரமாட்டா. இவ்வாறு உனது வாழ்வின் பொன்னான காலத்தைப் பயனற்ற முறையில் செலவழிப்பதற்குப் பதிலாகக் கோவிந்தனை நாடு அவரே உன்னை வாழ்வின் பிடியிலிருந்தும், சாவின் பிடியிலிருந்தும் விடுவிக்க வல்லவர்” என்று சங்கரர் பாடினார்.
1973ம் ஆண்டில் பிருந்தாவனத்தில் இந்தியப் பண்பாடும் ஆன்மீகமும் பற்றிய கோடைப் பயிற்சி முகாமில், பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பஜகோவிந்தம் என்ற தலைப்பில் தினமும் மாலையில் தமது அருளுரைகளை வழங்கினார். தனக்கே உரிய இனிய, ஒப்பற்ற, சந்தமிகுந்த முறையில் சுந்தரத் தெலுங்கினில் பஜகோவிந்தத்திலிருந்து 16 பாடல்களைப் பாடினார். ஆதிசங்கரரே மீண்டும் தோன்றி அப்பாடல்களை விரித்து உரைத்தது போன்று, அவரது அருளுரைகளில் விளக்கினார்.
அருளுரைகளுக்காகத் தேர்ந்தெடுத்த 16 பாடல்களும் அவற்றின் பொருள் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. (குருமார்கள் இவை பற்றிய விரிவான விளக்கங்களுக்கு, ‘பிருந்தாவனத்தில் கோடையில் அருள் மழை (1973)’ என்ற நூலினைப் பார்க்கவும்).