பீஷ்ம பிரதிக்ஞை
பாண்டவர்களும் அவர்களது தாயாதிகளான கௌரவர்களும் வாழ்ந்த ஆதிகாலத்தில் நிகழ்ந்தவை இந்த நிகழ்ச்சிகள். அப்போது மேன்மைமிக்க இந்தியா, மஹா பாரதம் என்று அழைக்கப பெற்றது. இந்திய அன்னை அரும் பெரும் வீரர்களின் பெருமை மிக்கத் தாயாக விளங்கினாள். வீரர்களின் தீரச் செயல்களும் மிகச் சிறப்பு வாய்ந்தனவாக இருந்தன. அந்த நாட்களில் இரு தரத்தினருக்குமே ஒப்பரற்ற ஒரு தனி தலைவர் இருந்தார். எல்லோராலும் ‘பிதாமகர்’ என்று போற்றப் பெற்ற அவரே பீஷ்மர் ஆவார். எல்லோரும் அவரிடம் மிக்க அன்பும் மரியாதையும் நிறைந்து கொண்டிருந்தனர். அவர் ஓர் அரசர் அல்லர். எனினும் அதற்கு மேலான நிலையில் இருந்து அரசர்களை உருவாக்கியவர். அவர்களை வழி நடத்திச் சென்றவர். அப்போது நிகழ்ந்து வந்த பலவித குழப்பங்கள், கிளர்ச்சிகளில் அவரது நெடிதுயர்ந்த தோற்றம், போர்க் குதிரைமீது கம்பீரமாக வீற்றிருக்கும் பீஷ்மர் ஓர் அரசராக இருக்கவில்லை. ஆனால் அரசாளும் உரிமையோடு பிறந்து, தாமே முன்வந்து முழுமனதோடு, அரச உரிமையை விட்டுக் கொடுத்து விட்டார்.
அது நிகழ்ந்ததே ஒரு விந்தையானதாகும். அவர் இளைஞனாக இருந்தபோது, பட்டத்து இளவரசனும், சந்தனு மன்னனின் ஒரு தனித் திரு மகனுமான அவர், மிக்க ஆடம்பரமாக வளர்க்கப் பெற்றார். அப்போது ஒரு புதுமையான நிகழ்ச்சி நிகழ்ந்தது. அந்த நாட்டு அரசரான அவருடைய தந்தையார் வேட்டைக்குச் சென்றபோது ஒரு சாதாரண மீனவனின் மகள்மீது, அவளது எழிலில் மயங்கி அன்பு கொண்டு விட்டார்.
அந்த மீனவனோ இறுமாப்பும் செருக்கும் வாய்த்ததோடு கெட்டிக்காரனாகவும் இருந்தான். தன் மகள் ஓர் உரிமையும் இல்லாது ஓர் அரசனின் சாதாரண மனைவியாக ஆவதை ஏற்கனவே அவன் மறுத்து விட்டான். அங்ஙனம் அவள் மணந்து கொண்டால், மதிப்பற்ற நிலையையும், அவமானத்தையும் தானே தருவித்துக் கொண்டதாக அமையும். என்பது அவன் கருத்து. அது உண்மைதானே! அரண்மனையில், அவள் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தாலும், அங்கு அவள் எந்த நிலையில் நடத்தப் பெறுவாள்? யாரும் அவளை அரசியாக மதித்துப் போற்றமாட்டார்களே! ஏனெனில், அவளது மக்களில் யாரும் அடுத்தபடி பட்டத்துக்கு உரியவரில்லரே! அதனால் பீஷ்மருக்கு பதில், அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு இளவரசு பட்டம் தந்தால்தான், அவள் அரசனை மணக்க முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான் அந்த மீனவன். எளிய திருமண நிகழ்ச்சியைக் கூட பொறுப்பற்ற தன்மையில், போதுமான பாதுகாப்பு இன்றி செய்து முடித்துவிட அவனால் முடியவில்லை. அந்தக் காலத்தில் எல்லோரும், தீவரமாக சிந்தித்துச் செயலாற்றுவதில் சிறந்த வீரர்களாக இருந்தனர்.
மீனவனால் போடப்பட்ட சட்டதிட்டங்கள், ஏற்றுக் கொள்ள இயலாதனவாக இருந்தன. அந்த மீனவப் பெண்ணின் தந்தை சொன்ன உட்கருத்தை நன்கு புரிந்து கொண்ட சந்தனு மன்னன் தன் விருப்பத்தைக் கைவிட்டு விட்டார். ஆனால் எழிலோவியமாக தன் எதிரில் நின்ற, வனப்புமிக்க வனிதையை அவனால் எளதில் மறக்கவே இயலவில்லை. அவனது நெஞ்சத்தில் உழன்ற வேதனை வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்தது. அரசகுமாரனும் தந்தையின் துயரம் படிந்த முகத்தைக் கவனித்தான். பலவாறு முயன்று துயரத்தின் காரணத்தை ஒருவாறு தெரிந்துக்கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தான். ஆனால் எத்தகைய விளைவு அது! நிலைமை புரிந்தவுடன், தந்தை தனக்குள்ளேயே வேதனையோடு நைவதற்கு மாற்றம் காண விரும்பியவனாய் தன் தேரை வரவழைத்து, அந்த மீனவனைக் காணப் புறபட்டான். அங்கு சென்றவுடன் திருமணத்திற்கு மீனவன் இணங்காததற்கு, மிகப் பக்குவமாக விசாரித்து காரணத்தை அறிந்துக்கொண்டான். மீனவனும் மிக சாமர்த்தியமாக, வருங்காலத்தில் நாட்டை ஆளும் உரிமைபெற்ற மக்களுக்குத் தாயாகும் நிலையை என் மகள் பெற்றால், அவள் அரச குடும்பத்தில் குலமகளாவதில் தனக்கு ஏதும் தயக்கம் கிடையாது என்று குறிப்பாக உணர்த்தினான்.
பிறகு ஏன் இந்த கவலை! சிக்கல் எளிதாக தீர்ந்து விட்டது! உன் மகள் சத்யவதியின் குழந்தைகளுக்காக அரச உரிமையை திடமாக விட்டுக் கொடுத்து விடுகிறேன், என்று உறுதியான குரலில் அரசக் குமாரன் தெரிவித்தான்.
“ஆம் ஐயா! வாக்குறுதி தருவதும், அதை ஒழுங்காகக் காப்பாற்றுவதும் மாட்சிமை மிக்கத் தாங்களால் இயலும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் தங்களுக்கு ஒரு நாள் திருமணமாகி, குழந்தைகள் பிறந்தால் அவர்களது செய்தி என்ன? தாங்கள் விட்டுக் கொடுத்துவிட்டீர்கள் என்பதால் மட்டும் தாங்கள் கருத்திற்கு இணங்கி அரசுரிமையை விட்டுவிட அவர்கள் மனம் ஒப்புவார்களா?” என்று பக்குவமாகத் தன் திட்டத்தை விவரித்தான்.
இளவரசன் மீனவனின் சொற்களில் புதைந்திருந்த உண்மையைப் புரிந்து கொண்டான். உலகத்தையும் அவற்றின் இன்பங்களையும்விட தந்தையின் மகிழச்சியே தனக்கு அருமையானது என்ற எண்ணத்துடன், திடமான ஒரு முடிவுக்கு உடனே வந்து சபதம் ஒன்று ஏற்கவே தீர்மானித்தான். கூடியிருந்தோரைப் பார்த்து, “நான் சூளுரைக்கிறேன்! கூர்ந்து கேளுங்கள்! நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை அரசுரிமையைக் கைப்பற்றப் போவதில்லை. அதனால் நான் குழந்தையைப் பெறப்போவதுமில்லை. எனவே உங்கள் மகளை என் தந்தையாரிடம் அழைத்துப் போக இப்போது அனுமதி தருவீர்களா?” என்று ஓங்கி உயர்த்திய குரலில் சூளுரைத்தான் இளவரசன்.
மீனவப்பெண் சத்தியவதியை அலங்கரித்து அழைத்து வந்தனர். இளவரசன் அவளைத் தாயாகவே ஏற்று வணங்கி தன்னுடைய தேரில் அமர்த்தினான். தானே இரத சாரதியாக அமர்ந்து குதிரைகளைச் செலுத்தி, அரண்மனையின் முன்பு கொண்டு நிறுத்தினான். தன் மனம் கவர்ந்த பெண் தன்முன் வந்து நிற்பதைக் கண்ணுற்றதும் சந்தனு மன்னனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. யாருடைய நலனுக்காக அவன் அவளை வேண்டாமென்று வெளியில் தெரியாது ஒதுக்கினானோ, அவனே, அந்த மகனே முயன்று அவளை அழைத்து வந்துள்ளான், என்பது தெரிந்ததும் நெஞ்சம் நெகிழ்ந்து போனான் அவன். ஆனால் சத்தியவதி எப்படி, எந்த சூழ்நிலையோடு அங்கு கொண்டு வரப் பெற்றாள் என்று விவரமாகத் தெரிந்ததும், தனயனின் தன்னலமற்ற தியாக உணர்வைக் கண்டு, தன் செயலுக்கு வெட்கித் தலை குனிந்து உருகிப் போய்விட்டான். உடனே மகனை சான்றோனாக உயர்த்தி “செயற்கரிய செயலைச் செய்த பீஷ்மா” என்று வாயார விளித்து மகிழ்ந்தான். எல்லோரும் வியக்கத்தக்க வகையில் மகனை வாழ்த்தியருளினான். “என் அருமை மகனே! நீடூழி வாழ்வாயாக! எவ்வளவு நாட்கள் உயிர் வாழ விரும்புகிறாயோ, அதுவரை யாராலும் உனக்கு தீங்கு விளைவித்து உன் உயிரைப பறிக்க முடியாது. உன்னுடைய அனுமதி இன்றி மரணம் என்பது தானாக உன்னை வந்து பற்றாது.” என்று வரம் கொடுத்து வாழ்த்தியருளினான். அன்னையோ தந்தையோ வாழ்த்துவது ஒருவனுக்கு நல்வினையை நல்கும். நெடுநாட்களுக்குப் பின்னர் குருஷேத்திர போர்க்களத்தில் மரணப் படுக்கையில் அவர் இருந்தபோது அரசனது வலிமையான சொற்கள் செயல் பெற்று மெய்ப்பித்தன.
அதிலிருந்து இளவரசனது வாழ்க்கை, அரசர் போலவும், துறவி போலவுமாக கலந்து அமைந்திருந்தது. உயர்ந்த உள்ளத்துடன் ஒரு பிரபு போல எல்லாவற்றையும் செயலாற்றி வந்தார் அவர். ஆனால் பெருமை மிக்க சில ஆன்மீகப் பெருவீரர்கள் போல, அவர் தம் நலனுக்கு என்று எந்த செயலையுமே ஆற்றியதில்லை. பொது மகிழ்ச்சிக்காகவும், அரசியல் பாதுகாப்புக்க்காகவுமே அவரது செயல்கள் செறிந்திருந்தன. அரசர்களுக்கு முடிசூட்டி, அவர்களுக்கு ஆவன சேவை செய்து வந்து, இராஜ்ஜியங்களைப் பாதுகாப்பதே தம் பணியாக அவர் கொண்டிருந்தார்.
அரசி சத்தியவதிக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அவளது கணவன் இறந்த சில நாட்களுக்கெல்லாம் இரு மைந்தருள் ஒருவன் இளமையிலேயே இறந்து விட்டான். அதனால் அரச பரம்பரை நசித்து விடுமோ என்று சத்தியவதி மிகவும் அஞ்சினாள். அதனால் எளிய மீனவப் பெண்ணாக இல்லாமல், அன்னை இராணியாக அவள் முயன்று, பீஷ்மர் உரைத்த சூளுரையை பலமுறை வற்புறுத்தி, நீக்கும்படி கண்ணீர் மல்க கேட்டாள். பிறகு அவர் ஒரு பெண்ணை மனம் புரியவும் இயலுமாவென்று கெஞ்சினாள்.
ஆனால் எந்தவகையான பேச்சும், பீஷமரைத் தம் சூளுரையினின்றும் பிறழ வைக்க இயலவில்லை. மாறாக ஒரு துறவி உடை அணிந்துகொண்டு, அடுத்துள்ள நாட்டில் நடைப்பெற்ற சுயம் வரத்திற்குச் சென்றார் அவர். அங்கு, தம்மை எள்ளி நகையாடியவர்களை அறைகூவி போருக்கு அழைத்தார். ஒவ்வொரு நாட்டினரையும் தனித்தனியே வென்று சுயம்வர இளவரசிகள் இருவரையும் கைப்பற்றி எடுத்து வந்தார். அவர்களை சத்தியவதியின் மகனுக்கு மணமுடித்து வைத்தார் . அரசிளங்குமரிகள் இருவரும், பேராண்மை மிக்க மாபெரும் வீரரான அவரது தீரச் செயல்களை பெருமையோடு வியந்து போற்றியவாறு வாயடைத்து திகைத்தனர். அதற்கேற்ப அவரது உறுதி அஞ்சத் தக்கதாகத்தான் இருந்தது. அவரோடு ஒப்பிட்டடுப் பார்த்தால் சுயம்வரத்திற்கு வந்த ஒவ்வொருவரும் சாதாரணமாக இருந்தனர். அவரது போர்க் கவசமும் படைக்கலனும், சூரிய ஒளியில் பழம்பெருமையோடு உயர்ந்த நகை போன்று பளபளத்து ஒளிர்ந்தது.
குருஷேத்திர போர் முடியும்வரை பீஷ்மர் பலபல ஆண்டுகள் நிலவி வந்தார். தமது எண்ணமெல்லாம் கிருஷ்ணர் மேல் பொருந்தியவாறு அவர் மரணமடைந்தார். அதனால் ஆதியந்தம் அற்ற பரமனோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். “ பீஷ்மர் அஞ்சத்தக்க வீரர்” என்ற புகழை இந்தியா அன்போடு நினைத்துப் போற்றும்படி உயர்ந்து விளங்கினார். யாராலும் நிந்திக்கப் பெறாத, அஞ்சா நெஞ்சம் பெற்ற வீரராக, தாமே விரும்பி ஏற்ற மரணத்தைப் போலவே, வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டி, தாம் சிறப்புற வாழ்ந்தது போலவே, சிறந்த மரணமும், பெற்று அவர் இந்தியாவின் மாசற்ற பிரபுவாக திகழ்ந்தார்.