ஏகலைவன்
ஆசிரியர் துரோணரது ஆஸ்ரமத்தில், திருதராஷ்டிரானது புதல்வர்கள், பாண்டு புத்திரர், மற்றும் பல நாட்டு இளவரசர்கள் ஒன்று சேர்ந்து, படைக்கலன்களைப் பயன் படுத்தும் கலைகளைக் கற்று வந்தனர். ஆசிரியர் கற்பிக்கும் திறனைக் கேள்வியுற்று வேறு சிலர், படைக்கலன்களை உபயோகிக்கும் முறைகளைக் கற்க விரும்பினார்கள். அதுபோது, இரண்யதானு என்பவன், அடுத்துள்ள ஒரு காட்டில் தலைவனாக இருந்தான். அவன் மகன் ஏகவலைவன். ஆசிரியர் துரோணரது மாணவனாகி, வில்லாண்மையில் தேர்ச்சி பெற ஏகலைவன் பெரிதும் விரும்பினான்.
உடனே தன விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நேரே ஆசிரியர் துரோணாச்சாரியிடம் சென்றான் ஏகலைவன். “மதிப்புமிக்க ஐயா! தங்களுக்குப் பணிவிடை செய்து, படைக்கலன்களைப் பயன்படுத்தும் கலைகளைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அன்பு கூர்ந்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பணிவோடு தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.
அதற்கு உடனே சற்றும் தயக்கமின்றி, “மகனே அரச குமாரர்களோடு வைத்து நான் இங்கு உனக்கு கலையறிவு எதுவும் போதிக்க இயலாது” என்று ஆசிரியர் கூறி விட்டார்.
இங்ஙனமாக அவனுக்கு கல்விக் கூடத்தில் கதவுகள் மூடப்பட்டன. முதலில் அதற்காக அவன் மிகுவாக வருந்தினான். முரட்டுத்தனமாக மறுக்கப்பட்டதை அவன் மனம் விரும்பவில்லை. ஆனால் அதற்காக அவன் தன ஆர்வத்தினின்றும் சற்றேனும் தளர்ந்து விடாத உறுதியாக இருந்தான். அதைச் செயல் படுத்தக் கானகத்தினுள் சென்றான். களி மண்ணால் ஆசிரியரைப் போலவே ஓர் உருவம் செய்தான். அந்த உருவத்தை ஆசிரியராகவே பாவித்து, அவர் எதிரில் நின்று வில்லாண்மையைப் பழகலானான். அவனது குருபக்தி மிகத் தீவிரமாக இருந்தது. அதனால் எளிதாக எல்லாவற்றையும் கற்று வந்து விரைவில் ஒரு சிறந்த வில்லாளன் ஆனான் அவன்.
ஒரு நாள் ஆசிரியர் அனுமதிப் பெற்று, பாண்டவரும், கெளரவரும், வேட்டைக்குச் சென்றனர். அந்த காடு எதிர்பாராத வகையில், ஏகலைவன் வசித்த காடாக இருந்தது. அரச குமாரர்கள் தம்முடன் ஒரு நாயை அழைத்துச் சென்றனர். எப்படியோ, அது அவர்களை விட்டு விலகி ஓடி விட்டது. அதைத் தேடி அனைவரும் அலைந்தனர்.கருப்பு நிறமுள்ள ஏகலைவனிடம் வந்த நாய், திடீரெனப் புதியவனான அவனைப் பார்த்ததால் பயங்கரமாகக் குரைத்தது. உடனே ஏகலைவன் ஏழு அம்புகள் விட்டு அந்த நாயின் வாயைக் குரைக்க ஒட்டாமல் தைத்து விட்டான். தைத்த வாயுடன் நாய் பாண்டவரிடம் வந்தது.
அதைக் கண்டதும் அவர்கள் வியந்தனர்! “யார் இவ்வளவு திறமை மிகுந்து, அம்புகளால் நாயின் வாயைத் தைத்தது? அவன் கட்டாயம் ஒரு சிறந்த வில்லாளனாக இருக்கவேண்டும்!” என்று போற்றினர். இங்ஙனமாக ஏகலைவனுக்குப் புகழுரைகளை வாங்கித் தந்ததோடு, பாண்டவரது வெறுப்பையும் பொறாமையையும் கூடச் செறிந்து தந்தது அவனது செயல். பின்னும் சில அடிகள் சென்றதும் பாண்டவர் ஏகலைவன் விற் பயிற்சி செய்து கொண்டிருப்பதைக் கண்ணுற்றனர். அவனை யார் என்று வினவினர்.
“இரண்யதானுவின் மகனான நான் துரோணாச்சாரியாரது மாணவன்.” என்று பெருமையோடு கூறிக் கொண்டான் ஏகலைவன். அதைக் கேட்டதும் இளவரசர்கள் வியந்து ஆசிரியரிடம் சென்று உரைத்தனர். அவர்களது பேச்சு ஆசிரியரை மலைத்து நிற்கச் செய்தது. “ஏகலைவன் என் மாணவன் அல்லவே, அவனை நான் இங்கு சேர்த்துக் கொள்ள அனுமதியே தரவில்லையே !” என்று வியப்புடன் கூறினார் அவர்.
கூரிய அறிவுள்ள அவரது மாணவனான தனஞ்ஜெயன், ஆசிரியர் தன்னைத் தம்முடைய அறிவிற் சிறந்த மாணவனாகப் போற்றி ஏற்ற பிறகு, இப்போது தன்னைவிட ஏகலைவன் மிகுதியாக எங்ஙனம் கற்றிருக்க முடியும் என்று வருத்தத்தோடு வாதாடினான். “ என்னோடு வாருங்கள் ஐயா! தாங்களே நேரில் வந்து பார்த்துத் தெளியுங்கள்,” என்று அவரைக் கூப்பிட்டான்.
ஆசிரியரைக் கண்டதும் ஏகலைவன் பணிந்து வணங்கி அவர் எது கேட்டாலும் தருவதாகவும், கட்டளையிடும்படியும் கூறினான். துரோணர், அவனது வலக்கைக் கட்டை விரலை குரு தட்சணையாகக் கேட்டார். கொஞ்சங்கூட தயங்காது அடுத்த கணமே, ஏகலைவன் தன் வலக்கைக் கட்டை விரலை துண்டித்துத் தந்து விட்டான். அதனால் பின்னர் அவன் வில்லெடுத்து அம்பு தொடுத்து எய்வது என்பது இயலாது போயிற்று. இந்தச் செயல் ஏகலைவனது தன்னலமற்ற தியாகம், அவன் தன் ஆசிரியரிடம் எத்தனை பக்தி வைத்திருந்தான் என்பதைக் குறிக்கிறதல்லவா?