நவராத்திரி உட்கருத்து
ஹிந்துக்கள் நீண்ட நாட்கள் கொண்டாடும் பண்டிகை நவராத்திரி. ஒன்பது பகல்களும், ஒன்பது இரவுகளும் இவ்விழா கொண்டாடப்படுவதால், நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. நவராத்திரி பராசக்திக்கு நன்றி பாராட்டும் பண்டிகை ஆகும். நன்றி மறவாமை தெய்வீகக் குணம். நன்றி மறப்பது அசுர குணம்.
அச்வின (புரட்டாசி) மாதம், சுக்ல பக்ஷம் (வளர்பிறை), பிரதமை (முதல் திதி)யில் நவராத்திரி விழா தொடங்குகிறது. முதல் மூன்று நாட்கள், மஹா காளி (துர்கா) வழிபாட்டிலும், நடு மூன்று நாட்கள், மஹாலட்சுமி வழிபாட்டிலும், இறுதி மூன்று நாட்கள் மஹா சரஸ்வதி பூஜையிலும் நாம் பங்கு பெறுகிறோம்.
தேவி வழிபாட்டின் முக்கியத்துவம்
உலக மாதாவான ஆதிசக்தி,
தாமசிகமாக வெளிப்படும்பொழுது, மஹா காளி.
ராஜசிகமாக வெளிப்படும்பொழுது, மஹாலட்சுமி.
சாத்வீகமாக வெளிப்படும்பொழுது, மஹாசரஸ்வதி.
காளி, தீமைகளை அழிப்பவள். தீய குணங்களை அழிக்கிறாள். லட்சுமி, நற்குணங்கள் என்னும் செல்வத்தை அதிகரிக்கிறாள். சரஸ்வதி, ஞான நெறிக்கு இட்டுச் செல்கிறாள். இதன் உட்பொருள்: தீய குணங்கள் மறைந்து, நற்குணங்கள் ஓங்கிய பின்பே, ஞானத்தை அடைய முடியும்.
மூன்று சக்திகள் ஒருங்கிணைப்பினால், மகிஷாசுரன் என்ற தீயசக்தி அழிந்தது. அவை :
காளி – இச்சா சக்தி – மனஉறுதி (ரண்ப்ப் டர்ஜ்ங்ழ்)
லக்ஷ்மி – கிரியா சக்தி – செயல்புரிய ஆற்றல் (டர்ஜ்ங்ழ் ர்ச் ஹஸ்ரீற்ண்ர்ய்)
சரஸ்வதி – ஞானா சக்தி – பகுத்தறிவு ஆற்றல் (டர்ஜ்ங்ழ் ர்ச் க்ண்ள்ஸ்ரீழ்ண்ம்ண்ய்ஹற்ண்ர்ய்)
இதன் உட்பொருள்: இம் மூன்று சக்திகளையும் ஒருங்கிணைத்து, உனது தீய குணங்களுக்கு முற்றுப்புள்ளி வை.
இரவுகள் என்பதன் முக்கியத்துவம்
பகலில் – பகவானுக்கு பூஜை, இரவில் – பகவதிக்கு பூஜை. இராவணனைக் கொல்வதற்கான சக்தியைப் பெற ஸ்ரீராமர் பராசக்தியை ஒன்பது இரவுகள் வழிபட்டார். தேவியை ஒன்பது இரவுகளும் வழிபடுபவர்களுக்கு, வறுமை, பயம், துக்கம் ஆகியவை நீக்கப்படுகின்றன.
இரவு நேரத்தில் அசுர பலம் பெருகுவதால், ஆதிசக்தி எழுச்சியுற்று, தீய சக்திகளை ஒடுக்கி, நம்மைக் காக்கிறாள். பராசக்தி ஒவ்வொருவரிடத்திலும் குண்டலினி சக்தி (ஆன்மீக சக்தி) யாக மூலதாரச் சக்கரத்தில் இருக்கிறாள். தியானம் மூலம் குண்டலினி சக்தி எழுப்பப்பட்டு, படிப்படியாக உயருமானால், மனதில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.
வடநாட்டில் இராவணன் என்ற அசுரனை ராமபிரான் வெற்றி கொண்ட நிகழ்ச்சியை விஜயதசமி என்று பத்தாவது நாள் கொண்டாடுகிறார்கள். இராம லீலைகளை நடித்துக்காட்டி, தசரா கொண்டாடப்படுகிறது. தென்இந்தியாவில் நவராத்திரியின் பொழுது, பத்து நாட்கள் கொலுவைக்கிறார்கள். சுற்றுப்புறத்தில் உள்ள பெண்களை கொலுவிற்கு அழைத்து, கூட்டுவழிபாடு, சத்சங்கம் ஆகியவற்றின் மூலம் மனதை இறைசக்தியை நோக்கி திருப்பும் புனிதப்பணியில் ஈடுபடுகின்றனர்.
கூட்டுவழிபாடு, வேற்றுமையுணர்வை நீக்கி, ஒற்றுமையை வளர்க்கிறது. ஏகத்துவம் மலர்கிறது. வீட்டிற்கு வருபவர் விரோதியாக இருந்தாலும், தேவியாக பாவித்து, மரியாதை செய்யும் அன்பும் பண்பும் மலர்கின்றன. சத்சங்கத்தினால், உலகப்பற்று குறைந்து இறைப்பற்று அதிகரிக்கிறது. சாத்வீக குணம் மேலோங்குகிறது.
கொலுவில், கீழ்ப்படிகளில் விலங்கு பொம்மைகளும், நடுப்படிகளில், மனிதப் பொம்மைகளும், மேல்படிகளில் தெய்வ பொம்மைகளும் வைத்திருப்பார்கள். இதன் உட்பொருள்: ஆத்ம சாதனா மூலம், விலங்குத் தன்மையை விடுத்து, மனிதத் தன்மையை முழுமையாக்கி, இறுதியில் தெய்வீக நிலையை அடைய வேண்டும்.
ஆயுத பூஜை: நவராத்திரியின் இறுதி நாள் ஆயுத பூஜை நாளாகும். பல்வேறு தொழில் புரிபவர்கள் தத்தம் கருவிகளையும், உபகரணங்களையும், தெய்வமாக பாவித்து பூஜை செய்கிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை இது குறிக்கிறது.