நக்மஹாசயன்
அஹிம்சையின் நன்னெறிகளுக்கு நிலையான உதாரணமாக விளங்குவது நக்மஹாசயன் வரலாறாகும். “ஊறு விளைவிக்காமை உயர்தரப் பண்பாகும்.” இந்தக் கோட்பாட்டை அப்படியே இறுதிவரை கடைபிடித்தவன் நக்மஹாசயன்
நக்மஹாசயன் ஓர் உயிர்கூட துன்புறுவதைக் காண பொறுக்காதவன். நக்மஹாசயன் வீட்டுக்குப் பின்புறத்தை ஒட்டி ஒரு சிறு குளம் அமைந்திருந்தது. அதில் ஆண்டுதோறும் புரண்டு வரும் வெள்ளத்தினால் அடித்துக்கொண்டு வரப்பட்டு ஏராளமான மீன் கூட்டங்கள் குவிந்து விடுவது வழக்கம்.
ஒரு நாள் ஒரு குறிப்பிட்ட செம்படவன் அந்த குளத்தில் வந்து மீன் பிடித்தான். பிறகு உலக வழக்கப்படி நக்மஹாசயனுக்கு அவனுடைய பங்கு மீன்களைத்தர முன்வந்தான்.கூடைகளில் உயிருக்குமன்றாடிக் கொண்டு மீன்கள் துள்ளி அலைவதைக் கண்ட நக்மஹாசயன் பெரிதும் நொந்து போனான்.உடனே அந்த செம்படவன் கேட்ட தொகையை அப்படியே தந்துவிட்டு, அந்த மீன்கள் அத்தனையையும் வாங்கி குளத்தில் கொண்டு போய் விட்டு விட்டான்.
மற்றொரு நாள் வேறு ஒரு செம்படவன் அவன் வீட்டருகேயிருந்த ஒரு குட்டையில் மீன் பிடித்து அதை அவனிடம் விற்க வந்தான். இம்முறையும் நக்மஹாசயன் அனைத்தையும் விலை கொடுத்து வாங்கி அப்படியே குளத்தில் விட்டு விட்டான். நூதனமாக இருந்த அவனது நடத்தையைப் பார்த்த செம்படவன் திகைத்து நின்றான். சற்று நேரம் மீன்களுக்கான விலையையும், காலி செய்யபட்ட கூடையையும் வாங்கிக் கொண்ட மறு நொடி பைத்தியக்காரனைக்கண்டு ஓடுவது போல கால்கள் போகும் அளவு வேகத்தில் அவன் ஓடிவிட்டான். மறுபடியும் அவன் நக்மஹாசயன் எல்லையில் தன் வாழ்நாளில் வர முயலவேயில்லை
அஹிம்சை தர்மத்தைக் கடைபிடிப்பதில் நக்மஹாசயன் அவ்வளவு உறுதியாக இருந்தான் ஒரு கொடிய நச்சுத்தன்மையுடைய பாம்பைக் கொல்லக்கூட அவன் அனுமதிக்க மாட்டான். ஒருமுறை நஞ்சுமிக்க ஒரு நல்ல பாம்பு அவன் வீட்டுத்தோட்டத்தில் காணப்பட்டது. அங்கிருந்தவர் அனைவரையும் அது ஒரு கலக்குகலக்கி விட்டது. அவனது மனைவியேகூட அதைக்கொன்று விடவேண்டும் என்று வற்புறுத்தினாள். நக்மஹாசயன் மறுத்துவிட்டான்
“தீங்கு விளைவிக்கக்கூடிய காட்டுப்பாம்பு இதுவல்ல.மனிதனின்மனத்தில் இருக்கும் தீய எண்ணங்களாகிய விஷப் பாம்பே மனிதனைக் கொல்லவல்லது ”என்று விளக்கம் கூறினான் நக்மஹாசயன் பிறகு கை கூப்பியவாறு அந்த நாகத்திடம் போய், ”மானசதேவதையின் கண்ணுக்குப் புலனாகும் அவதாரம் தாங்கள்! தங்கள் இருப்பிடம் கானகம்! என்னுடைய எளிய குடிசையை விட்டுவிட்டு தங்கள் மேலான இருப்பிடத்திற்குப் போவது தங்கள் விருப்பமாக இருக்கட்டும்” என்று வேண்டினான். வியக்கத்தக்க வண்ணமாக அந்த நாகம் தன் படத்தை தாழ்த்திக் கொண்டு அவன் பணித்தபடியே காடு நோக்கி ஊர்ந்து சென்றுவிட்டது.
நக்மஹாசயன் அடிக்கடி, “வெளியுலகம் உன் மனத்தை எதிரொலிக்கும் திரைப்படமேயாகும். அந்த திரைப்படத்தை உலகத்துக்கு நீ தந்தாயானால் உலகத்திலிருந்து அதையே மீண்டும் பெறுகிறாய். அது ஒரு கண்ணாடியில் நீ உன்னையே பார்ப்பது போன்ற ப்ரதிபலிப்பாகும். கண்ணாடியில் நீ எப்படி உன் முகத்தைக்காட்டுகிறாயோ அதை அது அப்படியே பிரதிபலிக்கிறது அல்லவா? அது போலத்தான் நம் எண்ணங்களும் செயல்களும் மனத்தின் அடிப்படையில் அமைகின்றன” என்று அனைவருக்கும் அறிவுறுத்தினான்
கேள்விகள்:
- எல்லா உயிரினங்களிடமும் நக்மஹாசயனின் அன்பினை விளக்கிகூறு