Saint Kabir
முஸ்லீம்களுக்கு அன்று ஒரு புனிதமான நாள். கபீரின் மாமா ஒரு அறுசுவை விருந்து தயாரித்து உறவினர், நண்பர்கள் அனைவரையும் விருந்துண்ண அழைத்திருந்தார். ஆனால் கபீரை மட்டும், அழைக்கவில்லை. மாமா வீட்டில் மாபெரும் விருந்து ஆயத்தமாகிறது அவருடைய பெற்றோர் கூட அங்கு சென்றுள்ளனர் என்பதை கபீர் அறிந்திருக்கவில்லை. பெற்றோரை வீடெங்கும்தேடிவிட்டு தற்செயலாக மாமா வீட்டிற்குச்சென்றார் கபீர். அங்கு முஸ்லீம்கள் பெரு வாரியாகத் திரண்டிருப்பதைப் பார்த்தார். மௌல்விகள் காஜிக்கள் மற்றும் பல பெரும் தனக்காரர்கள் எல்லோரும் அங்கு குழுமியிருந்தனர்.
கபீர் அந்த வீட்டை நெருங்கியபோது ஒரு இளங்கன்று ஒரு கம்பத்தில் கட்டப் பெற்றிருப்பதை பார்த்தார். அந்தக் கம்பம் பூமாலைகளாலும் இலைகொத்துகளாலும் அழகுற அலங்கரிக்க பட்டிருந்தது. கன்றின் கழுத்திலும் ஒரு பூமாலை தொங்கியது. பன்னிரண்டு முஸ்லீம்கள் அந்தக் கன்றுக்குட்டியைச் சூழ்ந்து நின்று கொண்டு மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தனர். சூரிய ஒளியில் பளபளத்த கூரிய கத்தி ஒன்றை அவர்களின் ஒருவன் வைத்திருந்தான், கன்றுக்குட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது.
ஒரே பார்வையில் கபீர் அனைத்தையும் அறிந்து கொண்டார். அந்த மனிதர்கள் இளங் கன்றை கடவுளுக்குப் பலியிடப்போவதாகப் புரிந்துகொண்டார். உடனே அந்த மனிதரிடையே ஆவேசமாக மோதிக் கொண்டு புகுந்தார். “ஓ! புனிதமானவர்களே, தயவு செய்து நிறுத்துங்கள் பேதைக் கன்றினைக் கொன்று விடாதீர்கள்” என்று கத்தினார்.
அவர்கள் கோபமாக அவர் புறம் திரும்பினர்.“யார் இந்த முரட்டுப்பையன்?” என்று கேட்டார் ஒரு வயோதிக முஸ்லிம். பிறகு கபீர் பக்கம் திரும்பி, “நீ பேசாமல் இருக்க மாட்டாயா? இது அல்லாவுக்காக என்று தெரியாதா?மேன்மைமிக்க தீர்க்கதரிசியான முகம்மதுக்கு எதிராக ஏன் பேசுகிறாய்?” என்று கோபம் பொங்கக் கேட்டார்
“இல்லை! இல்லை! ஆனால் நான் உங்களிடம்தான் ஒரு சாதாரணக் கேள்வி கேட்கிறேன். உங்களை, உங்கள் வீட்டுபெண்களை, உங்கள் குழந்தைகளையெல்லாம் யார் படைத்தது? அல்லாதான் படைத்தார் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று கேட்டார் கபீர். உடனே அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது
“நீ முட்டாள்தனமான் கேள்விகளை கேட்கிறாய்”! முஸ்லிம் பதில் சொன்னார்
“கன்றையும் மற்ற விலங்கினங்களையும் யார் படைத்தருளியது?” கபீர் மேலும் கேட்டார்
“இதிலென்ன சந்தேகம்! அல்லாதான்” முஸ்லிம் பதில் கூறினார்.
“அப்போது அதை ஏன் கொல்கிறீர்கள்” என்று கபீர் கேட்டார்.
கடவுள் தாம் இந்த அழகிய உலகத்தையும் அவற்றிலுள்ள பொருள்களையும் படைத்தார். மனிதனையும் அவர் தாம் பிறப்பித்தார். அவனை, அந்த பொருட்களின் நடுவில் வாழ வைத்தார். மனிதன் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்” என்று மற்றோர் முஸ்லிம் விளக்கம் கூறினார்.
“ஆம். நீங்கள் கூறுவது சரிதான். நாம் அவற்றை நல்ல முறையில் பயன்படுத்துவோம்! ஆனால் எதற்காக அவற்றை அழிக்க வேண்டும்? தயவுசெய்து குரானைப் படித்துப் பாருங்கள். கடவுள் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கூர்ந்து படியுங்கள். இந்த எளிய கன்றை ஏன் கொல்ல விரும்புகிறிர்கள்? அது உங்களுக்கு என்ன தீங்கு இழைத்தது. தயவு செய்து அதை விட்டுவிடுங்கள்” என்று மன்றாடினார் கபீர்.
அவரது கூற்றை சில முஸ்லிம்கள் தவறு என்று வாதாடினர்.
“பசுவிலிருந்து பால் கறக்கிறோம். அந்த பாலைப் பருகுவது சரியான செயலா?” எதிர்த்து வாதாடும் நோக்கத்தோடு ஒரு வயதான முஸ்லிம் கேட்டார்
“நம் குழந்தைகள் தாயிடமிருந்து பால் குடிப்பது போலவே, நாம் விலங்குகளையும் தாயாக மதித்து அவற்றின் பாலைப் பருகுகிறோம். ஆனால் அதற்காக அவற்றை நாம் கொல்லக்கூடாது” என்று விடையிறுத்தார் கபீர்
முஸ்லிம்கள் சற்று நேரம் வாளாயிருந்தனர். ஒருவரோடொருவர் பார்த்துக் கொண்டனர். சிலர் கபீரின் ஞான அறிவை மெச்சினர். அவர்கள் அனைவருமே நல்லவர்கள் தான். உணவுக்காக என்று அவ் விலங்கினங்களைக் கொல்வது தவறு என்று அவர்கள் அதுவரை உணரவில்லை. கபீர் அவர்களுக்கு அஹிம்ஸையைப் பற்றி போதித்தார். இறுதியாக கன்றைக் கொல்வதுகூடாது என்று அனைவரும் ஒருமுகமாக ஒப்புக்கொண்டனர். விருந்தினர் பலர், ஒரு நல்ல விருந்தை இழந்துவிட்ட வருத்தத்துடன் இடத்தை விட்டகன்றனர். பாவம் அதற்காக கபீரைப் பலர் குற்றம் சாட்டினர். ஆனால் அவருடைய பெற்றோர் அறிஞர்களிடையே அவர் பெற்ற வெற்றியைக் குறித்து மிகவும் மகிழ்ந்தனர்.
கேள்விகள்:
- மாவின் வீட்டுக்கு[ப்போனதும் கபீர் கண்டதை விளக்கிக்கூறு?
- புனிதமாக நின்றவர்களிடம் அவர் முதலில் கூறிய சொற்கள் என்ன?
- அதற்கு அவர்களுடைய விடை என்ன?
- அஹிம்ஸையின் கோட்பாடுகளைக் கபீர் முஸ்லிம்களுக்கு தந்ததை சுருக்கமாக கூறு?