துன்புறும்போது ஒருவர் மற்றவர்க்கு எப்படி உதவுவது?
ஒரு நாள் மாலை, சாலையில் ஒரு குருடன் போய்க்கொண்டிருந்தான். அவன் தன் கையில் வைத்திருந்த தம்பூராவை மீட்டிக்கொண்டு அதனுடன் ஒத்து பாடியபடியே நடந்தான். அவன் ஒரு காலத்தில் மிகச்சிறந்த பாடகனாகவும் வீணை வாசிப்பவனாகவும் இருந்தான்.இப்போது வயதும் மிகுந்து குருடனாகிப் போய்விடவே தன் இசையினால் அவன் பெற்று வந்த வருமானம் மிகவும் குறைந்து அன்றாட உணவிற்கு அவன் அல்லலுறும்படி நேரிட்டு விட்டது .
மெதுவாக நடந்துகொண்டிருந்த அவனது காலில் திடீரென எதுவோ இடறவே தடுமாறி சாலையில் விழுந்து விட்டான். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த சிறுவர்கள் மூவர் விரைந்து வந்து அவனைத் தூக்கி நிறுத்தினர். கீழே விழுந்துவிட்ட தம்பூராவையும் எடுத்து அவனிடம் தந்தனர். அவர்களில் ஒருவன் “ இந்தப் பெரியவரை நம் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் ” என்று கருத்து தெரிவித்தான்
அதற்கு இரண்டாமவன், “அங்ஙனம் செய்வது மிக எளிதானதுதான்.ஆனால் பெரியவரின் வறுமையை எப்படி போக்க முடியும்?” என்று கேட்டான்
மூன்றாமவன், “நாம் ஏதாவது தியாகம் செய்து நிலையான சேவையாக ஏதாவது இவருக்குச் செய்ய வேண்டும்” என்று கூறினான்
உடனே முதல் சிறுவன் கிழவரைப்பார்த்து, “ உற்சாகமாக இருங்கள் பெரியவரே! உங்கள் துயர் தீர்க்க நாங்கள் எங்ஙனமாவது உதவப்போகிறோம்.” என்றான். இரண்டாமவன் தம்பூராவை எடுத்து சுருதி சேர்த்து மீட்டத் துவங்கினான். மூன்றாமவன் ஒலிக்குஏற்ப இணைந்து பாடத் தொடங்கினான் சற்று நேரத்தில் வழியில் சென்ற மக்கள் இசையினால் ஈர்க்கப்பெற்று அங்கு குழுமி விட்டனர். மூன்றாமவனின் பாட்டு அவ்வளவு இனிமையாக இருந்து அவர்களது நெஞ்சத்தை நெகிழ வைத்தது. அதனால் தங்களிடம் முதல் சிறுவன் எடுத்து வந்து நீட்டிய குவளையில் எல்லோரும் மனமுவந்து காசு போட்டனர். ஒரு மணி நேரம் சென்றது. கூடியிருந்தவர் கலைந்து சென்றபிறகு குவளையிலிருந்த காசை எண்ணினர் சிறுவர்கள். அந்த கணிசமான தொகையை ஓர் உறையிலிட்டு அந்தக் கிழவரிடம் தந்தனர்.
சிறுவர்களது தூய சேவையைக்கண்டு கண்களில் நீர் சோர இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தான் அந்த முதியோன். “என் அருமை குழந்தைகளா! நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன்? உங்கள் பெயர்களையாவது என்னிடம் சொல்லுங்கள்” என்று நெகிழ்ந்துகேட்டான்
“என் பெயர் நாணயம்”
“என் பெயர் நம்பிக்கை”
“என் பெயர் அன்பு”
என்று மூவரும் அவரவர் பெயரைக் கூறினர். பின்னர் “தாத்தா! நாங்கள் விடை பெற்றுக் கொள்ளலாமா?” என்று பணிவோடு கேட்டு விடை பெற்று அகன்றனர்.
அந்த கிழவன் அந்த சூழ்நிலையில் அங்கு நடந்தனவற்றின் பொருளை நன்கு புரிந்து கொண்டான். கூடவே தான் ஒரு பெருந்தவறு செய்திருப்பதையும் உணர்ந்தான். நாணயமற்று நம்பிக்கையிழந்து தன்னிடமும் பிறரிடமும் அன்பு வற்றிப்போக நடந்து கொண்டானே அவன்.
எவ்வளவு அருமையாக அந்தச் சிறுவர்கள் கிழவனுக்கு அவற்றை போதித்து விட்டனர்?
கேள்விகள்:
- ஏன் கிழவனை சிறுவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை? அல்லது உடனே பணம் தரவில்லை?
- அவர்கள் போட்ட திட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன்?
- ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய மூன்று முக்கிய இயல்புகள் என்ன?