எளிய தன்மை
சிறந்த பெரியார்கள் என்று போற்றப் பெற்றவர்கள் எல்லோருமே உடை, பேச்சு வாழும் முறைகள் அனைத்திலுமே எளிய தன்மையோடு விளங்கினார்கள். நம் சனாதன தர்மம் கூட எளிய வாழ்வு உன்னத எண்ணங்கள்” என்று வற்புறுத்துகிறது
காந்தி எங்ஙனம் உடுத்தியிருந்தார் ? பல பெரிய உலகத்தலைவர்கள் பேரரசர்கள் ஆட்சியிலுள்ள பெருந்தலைவர்கள், பிரபுக்கள், அவர்களது மனைவியர் யாராயிருந்த போதிலும் அவரை அந்த உடையில் தானே கண்டு அளவளாவினார்கள்
ஈச்வரசந்திர வித்யாசாகர் என்ற பெருமகனார்கூட எளிய வாழ்வையே விரும்பி ஏற்றிருந்தார். அவர் ஒரு கல்வி பேரறிஞராகவும் சமுதாயத்தின் சீர்திருத்தவாதியாகவும் இருந்ததால் அவர் பல பல கூட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் அழைக்கப்பெற்றார்.ஒரு முறை அவர் ஒரு விருந்தில் மதிப்பிற்குரிய தலைமை விருந்தினராக அழைக்கப் பெற்றார். தம்முடைய நாட்டின் பண்பாட்டிற்கு ஏற்ற உடுப்பில் அவருக்கு எப்போதுமே மிக்கப்பெருமை. எனவே அங்ஙனமே அந்த விருந்திற்கு அவர் உடுத்திச் சென்றார். விருந்து மாளிகை வாயிலில்,காவலாளி மிக நாகரீகமாக அவர் உடை அணிந்து வராததால் அவரை உள்ளே விட மறுத்துவிட்டான்.வித்யாசாகர் உடனே வீட்டிற்குத் திரும்பி சென்றார். சற்று பொறுத்து மேல் நாட்டு முறையில் “சூட்டும் டையுமாக “ கம்பீரமாக மாளிகை வாயிலில் வந்து நின்றார். அந்த புது உடையில் முன்பு தான் விரட்டி அடித்தவர் தாம் இவர் என்று காவலாளிக்கும் புரியவில்லை. “ஐயா உள்ளே போங்கள்!” என்று மிக மரியாதையுடன் வரவேற்று உள்ளே அனுப்பினான்.
எல்லோரும் விருந்துண்ண அமர்ந்தனர். வித்யாசாகர் தலைமை விருந்தினராதலால் எல்லோரும் விருந்தை துவக்கி வைக்க அவரையே பார்த்தனர். ஆனால் அவரோ தான் ஏதுமே சாப்பிடாமல் கரண்டியினால் உணவுப்பண்டங்களை எடுத்து எடுத்து தமது சட்டைக்கும் கோட்டுக்கும் ஊட்டிக் கொண்டிருத்தார். குழுமியிருந்தவர்களுக்கு அவரது செயல் வியப்பை அளித்தது. என்ன நேர்ந்தது அவருக்கு என்று மலைத்தனர் அனைவரும். அப்போது விருந்து கொடுத்த பெருமகனார் அவரிடம் வந்து ” ஐயா! தாங்கள் ஏன் உணவருந்தவில்லை? மாறுபாடான வழியில் ஏன் ஏதேதோ செய்கிறீர்கள்?” என்று வினவினார்.
அதற்கு வித்யாசாகர் “ நான் முதலில் வேட்டி உடுத்திக்கொண்டு விருந்துக்கு இங்கு வந்தேன், அப்போது அந்த உடையில் உள்ளே நுழையமுடியாமல் காவலாளியால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஆனால் ஐரோப்பியபாணியில் உடை மாற்றிக்கொண்டு வந்ததும் அவனால் பெரிதும் போற்றி வரவேற்கப்பெற்றேன். அதனால் இந்த மேலை நாட்டு உடைகள்தாம் இந்த விருந்திற்கு உரிமை பெற்றுள்ளன. நான் பெறவில்லை என்று எண்ணுகிறேன்” என்று விடையிறுத்தார் வித்யாசாகர்.
விருந்து தந்தவரும், மற்ற விருந்தினரும் நடந்ததை உணர்ந்து வருந்தினர். விருந்து தந்த பெருமகனார், வித்யாசாகரிடம் வந்து, அவரது கைகளைபற்றிக்கொண்டு “ ஐயா , நடந்துவிட்ட செயலுக்கு மிகவும் வருந்துகிறேன் பொறுத்திடுங்கள் ஐயா” என்று நெகிழ்ந்து கேட்டுக் கொண்டார்
கேள்விகள்:
- வாயில் காப்போனால் வித்யா சாகர் ஏன் உள்ளே போக அனுமதிக்கப்படவில்லை?
- அதன்பிறகு அவர் என்ன செய்தார்?
- விருந்தினர் ஏன் வியந்து நின்றார்?
- வித்யாசாகர் அளித்த விடை என்ன?