மூன்று உயர்ந்த செயல்கள்
தன்னைக் காண வருபவ்ர்களிடம் ஓர் அரசன் விந்தையான மூன்றுகேள்விகளைக் கேட்டு வந்தான். முதலாவது கேள்வி: மனிதர்களில் மிகச்சிறந்தவன் யார்? இரண்டாவது: மிகச்சிறந்த நேரம் எது? மூன்றாவதாவது: எல்லா செயல்களிலும் மிகச்சிறந்த செயல் எது? என்பதாகும். அரசன் இந்த மூன்று கேள்விகளுக்கும் விடையறிவதில் மிக்க ஆவலாக இருந்தான்
ஒரு நாள் அவன் காட்டிற்குச்சென்று புல்வெளிகளும் மலைப்பகுதிகளுமாக நடந்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்களில் ஓர் ஆச்ரமம் தென் பட்டது. அதில் தங்கி ஓய்வெடுக்க எண்ணியவனாய் அதை அணுகினான் அரசன். அங்குற்றபோது ஒரு சாது செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். தன் குடிலை நோக்கி வந்த அரசனை சாது பார்த்தார். உள்ளே அவனை அன்புடன் வரவேற்று சில கனிந்த பழங்களையும் குளிர்ந்த நீரையும் அருந்தத் தந்து உபசரித்தார்.
அதற்குள் உடல் முழுவதும் காயம் பட்டிருந்த ஒருவனை மற்றொரு சாது ஆச்ரமத்துக்கு அழைத்து வந்தார்.புதிதாக வந்தவனைக் கண்டவுடன் முதல் சாது அவனிடம் விரைந்து சென்று அவனது புண்களைக் கழுவி மருந்திட்டு புண்ணை விரைவில் ஆற்றிடவல்ல சில மூலிகைகளையும் பறித்து வந்து விழுங்கத் தந்தார். மற்றும் அவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஆறுதல் படுத்தும் வகையில் அவனோடு இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.
அரசன் தன் நன்றியைத் தெரிவித்து விட்டு அவரிடம் விடை பெற எண்ணினான். சாது, அவனுக்கு ஆசி கூறி வாழ்த்தி விடை கொடுத்தார். ஆனால் அரசன் தன் மூன்று கேள்விகளைப் பர்றியே குழம்பியவனாய், சாதுவாவது தக்க விடையளித்து, சிக்கல் தீர்த்து நிறைவைத் தர மாட்டாரா என்று ஏங்கினான். அவரிடம் கேள்விகளையும் சொன்னான்.
சாது இந்த கேள்விகளுக்கான விடை, அரசன் ஆச்ரமத்தில் அன்று நிகழ்ந்தனவற்றைக் கண்ணுற்று வந்ததிலேயே அடங்கியிருக்கின்றனவே என்று கூறினார். அரசன் ஆச்ரமத்துக்கு வந்தபோது சாது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அது அவருடைய கடமையாகும். அந்த நேரத்தில் அரசனைப் பார்த்தவுடன், சாது தன் கடமை யையும் விட்டுவிட்டு, அரசனிடம் வந்து அவனுக்கு பழமும், நீரும் தந்து உபசரித்தார். அரசன் அவரது விருந்தினனாக வரவே அவனைப் பேணுவது சரியான பண்பாடாக அமைந்திருந்தது. அரசனது பசி தாகத்தைப் போக்கிச் சோர்வையும் நீக்கிய பிறகு, உடல் நிறைந்த காயங்களுடன் மற்றொருவன் ஆச்ரமத்துக்கு வந்தான். அப்போது அரசனுக்கு ஆற்றி வந்த பணியைவிடுத்து வந்தவனுக்கு பணிவிடை செய்யலானார் அந்த சாது.
“தக்க தருணத்தில் தன்னலமற்ற சேவையை நீ செய்வதற்குரிய அரிய வாய்ப்பை உன் சேவையை, உன் சேவையை இன்றியமையாத நிலையில் நாடிவந்து எனக்கு எவன் நல்குகிறானோ அவனே அந்த நேரத்தில் சிறந்த மனிதனாவான்.
அவன் மன நிறைவு பெறும் வண்ணம் அவனுக்கு சேவை புரிவதால் நீ அப்போது ஆற்றும் பணியே சிறந்த பணியாகும்
நீ நற்செயல்கள் புரிய பயன்படும் இப்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்காலமே புனிதமான சிறந்த காலமாகும்” இவையே அரசன் கேள்விகளுக்குப் பொருத்தமான விடைகளாக அமைந்தன
கேள்விகள்:
- அரசன் கேட்ட மூன்று கேள்விகள் என்னென்ன?
- சாதுவின் ஆஸ்ரமத்தில் அவன் என்ன பார்த்தான்?
- சாது எங்ஙனம் அரசனின் கேள்விகளுக்கு விடை பகன்றார்?