மன்னன் என்பவன் யார்?
உலகம் போற்றும் பேரரசன் அலெக்சாண்டர் ஒரு முறை வெப்பம் மிகுந்த ஆப்பிரிக்கக் கண்டத்திற்குச் செல்ல நேரிட்டது,அவனும் அவனது வீரர்களும் தங்குவதற்கு தக்கதோர் இடமும் வயிற்றுபசிக்கு உணவும் தேடி இங்கும் அங்கும் அலைந்தனர் ஆப்பிரிக்காவின் பொரிக்கும் வெயிலில் வெந்தவர்களாய் அடர்ந்து நிழல் தரும் ஒரு பெரிய மரமாவது தென்படுமா என்று அல்லலுற்றனர் அப்போது அவர்கள் எதிரே ஒரு சிவப்பிந்தியன் விரைந்து வந்தான். தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு, அவன், அவர்களைக் கேட்டுக்கொண்டான் அவர்களை அவன் தன் தலைவனிடம் அழைத்துச் சென்றான்.
அவனது தலைவனும் அவனது கூட்டத்தினரும் கறுப்பு நிறமும் அழகற்ற தோற்றமும் பெற்றவர்களாக இருந்தனர். அலெக்சாண்டரையும் அவனது வீரர்களையும் அன்போடு வரவேற்றான். அந்த தலைவன் “அண்மையில் ஒரு பெரிய வாழைத்தோட்டம் இருக்கிறது, நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் அங்கு தங்கிக்கொள்ளலாம் என்னுடைய ஆட்கள் உங்களுக்குத் தேவையானவற்றைக் கவனித்துக் கொள்வார்கள்” என்று நட்புரிமையோடு கூறினான்
மறு நாள் சிவப்பிந்தியத் தலைவன் அலெக்சாண்டரை கவுரவிக்க,ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். அலெக்சாண்டர் முன்னர் ஒரு தங்கத்தாம்பாளம் வைக்கப் பெற்றது. அதில் இடப்பெற்ற பழங்களும் தங்கத்தினால் ஆனவையே!! “மாபெரும் வீரரே! அருந்துங்கள்” என்று தலைவன் உபசரித்தான்.
அலெக்சாண்டருக்கு தங்கத்தினாலான பழங்களை எப்படி அருந்துவது என்று மலைப்பு! மெதுவாக “நீங்கள் இங்கு தங்கப்பழங்கள் தான் உண்பீர்களா?” என்று வியப்பை அடைந்தவனாகக் கேட்டான்
இல்லை!இல்லை! நாங்கள் புத்தம்புதிதாக பறித்த பழங்கள்தான். சாப்பிடுவோம். அதுமட்டுமல்ல; பால் தேன்,மாவு தானியங்கள் எல்லாமே புதிதாக விளைந்தனவற்றை தான் அருந்துவோம். ஆனால் தாங்கள் ஒரு மாபெரும் வெற்றி வீரர் தங்கள் கருத்தெல்லாம் பொன் சேகரிப்பதிலேயே உள்ளது. அதனால் தங்களுக்கு பொன்னாலான பழங்களையே அருந்தத் தந்தோம்.” என்றான் அந்த சிவப்பிந்தியத்தலைவன் வெள்ளையுள்ளத்துடன்.
ஆப்பிரிக்கத்தலைவனது பேச்சில் எத்துணை ஆழமான பொருள் பொதிந்துள்ளது என்று அறிந்து வியந்தான் அலெக்சாண்டர், அதனால் பணிவோடு “ஐயா நான் இங்கு பொன் சேகரிக்க வர வில்லை.ஆப்பிரிக்க மக்களிடம் பழகி அவர்களைப்பற்றி அறியவும் அவர்களது பண்டங்கள் பழக்க வழக்கங்கள் நடவடிக்கைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும்,தான் நான் வந்துள்ளேன்” என்று கூறினான் அலெக்சாண்டர்.
ஓ,அப்படியா! மிகவும் நல்லது.தாங்கள் அச்சமற்று இங்கு தங்கலாம் உங்களை எங்கள் விருந்தினராகப் பெற நாங்கள் மிகவும் மகிழ்கிறோம். என்று மகிழ்ந்துரைத்தான் அந்த ஆப்பிரிக்கத் தலைவன்
அப்போது இரண்டு பேர் மும்முரமாக விவாதித்துக்கொண்டு அவர்கள் முன்னிலையில் வந்தனர். தலைவன் அவர்களிடம், “என்ன நேர்ந்தது?”என்று வினவினான்.
“ஐயா! அண்மையில் நான் என்னுடைய நிலத்தை இவருக்கு விற்றுவிட்டேன். இவர் நேற்று நிலத்தை உழும்போது ஒரு புதையல் கிடைத்ததாம். அதை இவர் என்னிடம் எடுத்துவந்து நிலத்தை மட்டும்தான் வாங்கியதாகவும், அதனுள் இருந்த புதையலைச் சேர்த்து வாங்கவில்லை என்று சொல்லி என்னிடம் அதை தர முயன்றார். ஆனால் நானோ அந்த புதையல் நான் விற்று விட்டு நீங்கள் வாங்கி விட்ட நிலத்தில் இருந்ததால், அது நிலத்தின் ஒரு பாகமே, நிலத்தைச் சார்ந்ததே என்று கூறி வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டேன். தயவு செய்து தக்க நீதி வழங்குங்கள் ஐயா” என்று அவர்களிருவரில் ஒருவன் சொன்னான். அப்போது அடுத்தவன்,” இல்லை, இல்லை, எனக்குச் சொந்தமில்லாததை நான் எப்படி ஏற்றுக்கொள்வேன். அந்த புதையலை அவனிடம் சேர்ப்பிக்க வழி செய்யுங்கள் ஐயா” என்று பதட்டமாக விரைந்து சொன்னான். அலெக்சாண்டர், இதற்கு தலைவன் எந்தவிதமான நீதி வழங்கப்போகிறான் என்று ஆவலோடு காத்திருந்தான். தலைவன் ” என் நண்பர்களே இருவரும் என்னை கவனியுங்கள்! உங்களில் ஒருவனுக்கு திருமண வயதில் ஒரு பெண்ணும், மற்றொருவனுக்கு அப்பெண்ணுக்கேற்ற பிள்ளையும் இருக்கின்றனர். எனவே உன் பெண்ணை அவனுடைய பிள்ளைக்கு மணமுடித்து வைத்து அவர்கள் நல்வாழ்விற்காக அவர்களிடம் புதையலையும் தந்து விடுங்கள் என்று அமைதியாக தீர்ப்பு கூறிவிட்டான்
அப்பெரியார்கள் இருவரும் நிறைவும் மகிழ்வும் பெற்றவர்களாய், தலைவனது கருத்துப்படியே நடப்பதாக வாக்களித்துவிட்டு வெளியேறினர். சற்றுப் பொறுத்து, தலைவன் அலெக்சாண்டரிடம் இத்தகைய வழக்கில் அரசனான அலெக்சாண்டர் எந்தவிதமாக தீர்ப்பு வழங்கியிருப்பான் என்று கேட்டான். அதற்கு அலெக்சாண்டர்” எங்கள் நாட்டில் இங்ஙனம் நடந்திருந்தால் அரசனே அந்த புதையலை எடுத்துக்கொண்டு,செய்தி வெளிவராதிருக்க அவர்களிருவரையும் சிறையில் அடைத்துவீட்டிருப்போம்” என்றான்
எத்துணை குரூரம்? எத்தகைய ஒழுக்கக்கேடான செயல்? தன் மக்களின் பொருள்களை அபகரித்துக் கொள்ள அரசனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அப்போது அவன் அரசனே அல்லன் அவன் ஒரு கொள்ளைகாரனே! அரசன் எனப்பெருபவன் தன் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மாறாக அவர்களை தொல்லைபப்டுத்தக்கூடாது!
கேள்விகள்:
- ஆப்பிரிக்கத்தலைவன் ஏன் தங்கத்தினாலான பழங்களை தந்தான்?
- தலைவனிடம் எடுத்துவரப்பட்ட வழக்கு என்ன?
- அவன் வழங்கிய தீர்ப்பு என்ன?
- அலெக்சாண்டர் தலைவனிடம் என்ன கூறினான்?
- உண்மையான அரசன் எனப்பெறுபவன் யார்?