யோகக்ஷேமம் வஹாம்யஹம்
பேரறிஞரான ஒரு பண்டிதர் ஒரு முறை மதிப்புமிக்க மஹாராஜா ஒருவர் முன்னிலையில் கீதையிலிருந்து பொருள்களை சொற்பொழிவுகள் நிகழ்த்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் கீதையிலிருந்த கீழ்க்கண்ட ஸ்லோகத்திற்கு விளக்கம் சொல்ல வேண்டி வந்தது.
அனன்யா சிந்தயந்தோமாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்
பண்டிதர் மிக உற்சாகமாக அந்த பாடலின் கருத்தை பல பல வழிகளில் விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவ்வளவையும் கேட்டுக்கொண்டு அரசர் தலையை ஆட்டி, “இதன் பொருள் சரியானதல்ல” என்று மறுத்து விட்டார். பண்டிதர் கூறிய விளக்கங்கள் ஒவ்வொன்றிலும் குற்றம் கண்டுபிடித்து வாதாடினார் அரசர்.
பாவம் அந்த பண்டிதர்! பல அரச சபைகளில் மதிப்பும் மேன்மையும் பெற்றுச் சிறக்கச் செழித்தவர். பெருமை மிக்க பல பட்டங்களைப் பெற்றவர். அரசர், அத்தனை பெரிய சபையில் அவ்வளவு சபையினர் எதிரில் ஸ்லோகத்திற்குத் தான்கூறிய விளக்கம் ‘தவறு’ என்று கடிந்துரைத்தபோது கூரிய கத்தி ஒன்றினால் குத்தப்பட்டு விட்டது போல் துடித்துப்போனார். அவமானத்தினால் துன்புற்று துவண்டார்.
ஆனால் தம் துணிவை எல்லாம் மீண்டும் வரவழைத்துக் கொண்டு தாம் மேற்கொண்ட பணியைத் தொடர முயன்றார். தாம் கற்ற அறிவு அனைத்தையும் ஒன்று சேர்த்து தங்கு தடையின்றி சொற்பொழிவாற்ற மீளவும் வலிய முயற்சி செய்தார் “யோக” ‘க்ஷேமம்” என்ற சொற்களின் பொருட்களை பல மடங்காக விரித்து பல்வகைகளில் விளக்கலானார். ஆனால் அரசன் அப்போதும் ஒப்புக்கொள்ளவில்லை. “இந்தப் பாடலுக்கு சரியான பொருளைக் கண்டு பிடித்து அதை நன்கு புரிந்துகொண்டு நாளை மறுபடியும் வாருங்கள்” என்று கட்டளையிட்டு விட்டு அரசன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து உள்ளே சென்று விட்டான்.
பண்டிதரிடம் கொஞ்சம் நஞ்சம் இருந்த துணிவும் அரசனது செயலால் அடியோடு அகன்று விட்டது. அவரது மனம் கவலையால் கனத்தது. அவமானம் அவரைத்தடுமாறச் செய்தது வீட்டிற்குச் சென்று கீதை புத்தகத்தை ஒரு புறமாக வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தார்.
அவரது நிலையைக்கண்டு வியப்பும் பதைப்பும் ஒரு சேரப்பெற்ற பண்டிதரின் மனைவி அவர் அருகே வந்தாள். அரண்மனையிலிருந்து ஏன் இன்று இத்துணை துன்பமாக வந்துள்ளீர்கள்? என்னிடம் சொல்லுங்கள்! உண்மையில் அங்கு என்ன் நடந்தது? என்று பரிவோடு வினவினாள். கவலை மிகுந்தவளாய் கேள்விமேல் கேள்வியாக அவள் கேட்கவே பண்டிதர் அவளிடம் நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டியதாயிற்று. தம் தலைமீது சுமத்தப்பட்ட அவமானம், அரசன் ஒரு கட்டளையிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பியது போன்ற அனைத்தையும் விவரமாக மனைவியிடம் கூறினார்.
அவரது கூற்றுகளால் நடந்தது அனைத்தையும் அமைதியாகவும் மவுனமாகவும் கேட்டு மனைவி தெரிந்து கொண்டாள், நீண்ட நேரம் மிகத் தீவிரமாக அந்த நிகழ்ச்சியைக்குறித்து சிந்தித்தாள். பிறகு “ஆஹா! அது சரியானதுதான். அரசர் கூறியதுமிகவும் சரியே! தாங்கள் அந்த பாடலுக்குக் கொடுத்த விளக்கம் பொருத்தமானது அல்லவே! அரசர் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்? எனவே தவறு தங்களுடையதுதான் என்றாள்.
அதைக்கேட்டதும் வாலில் நன்றாக மிதிபட்ட நாகம் ஒன்று சீறி எழுவதுபோல் பண்டிதர் கோபத்தோடு கட்டிலை விட்டு வேகமாக எழுந்தார்
“முட்டாள் பெண்ணே! உனக்கு என்ன தெரியும் அந்த பாடலைப்பற்றி? உன்னைவிட நான் அறிவில் குறைந்தவன் என்று எண்ணினாயா? எப்போதும் சமையலும் பரிமாறலுமாக அடுப்படியில் அமிழ்ந்து கிடக்கும் நீ என்னைவிட அதிகம் படித்தவன் என்று பறைசாற்றுகிறாயா? வாயை மூடிக்கொண்டு என் எதிரில் நில்லாமல் போய்விடு” என்று இரைந்து கத்தினார்
ஆனால் அவள் அந்த இடத்தைவிட்டு அகலவில்லை. கால்கள் தரையில் அழுத்தி ஊன்ற உறுதியாக நின்றாள். பிறகு, “ஐயா! சாதாரண உண்மையை உரைக்கும் போது ஏன் இங்ஙனம் கோபத்தில் பறக்கிறீர்கள். அந்த ஸ்லோகத்தை மெதுவாகச் சொல்லி ஒரு முறை அதன் பொருளை நீங்களாகவே ஆழச் சிந்தித்துப்பாருங்கள். அப்போது நீங்களே சரியான விடையைப் பெறுவீர்கள்” என்று மென்மையான குரலில் அறிவுறுத்தி கணவரது மனத்தை அமைதிப் படுத்தினாள் அந்த மனைவி.
பண்டிதர் ஸ்லோகத்தில் ஒவ்வொரு சொல்லாக எடுத்துக்கொண்டு அதன் பொருளை அலசி அலசிப்பார்க்க முயன்றார், அனன்யா:, சிந்தயந்த:, மாம் என்று எச்சரிக்கையாகவும் மெதுவாகவும் துவங்கி அதற்குப் பல்வேறு அர்த்தங்களை வாய்விட்டுக் . கூறிப்பார்த்தார் அப்போது அந்த மனைவி குறுக்கிட்டு ”சொற்களின் பொருள்களை விரிவாக,விளக்கமாகக் கூறக் கற்றுக்கொள்வதால் என்ன பயன்? அரசரை தாங்கள் அணுகிய போது தங்களது எண்ணம் என்னவென்று கூறுங்கள். தாங்கள் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன?” பண்டிதருக்கு மீளவும் கோபம் மூண்டது ‘ நான் இந்த குடும்பத்தை நடத்த வேண்டாமா? இந்த வீட்டை நிர்வகிக்க வேண்டாமா? உனக்கும் மற்றவர்களுக்குமான உணவு, உடை மற்ற வசதிகளை நான் பின்னர் எங்ஙனம் சமாளிக்க முடியும்? இந்த நலன்களுக்காகத் தான் நான் அரசரிடம் சென்றேன். இல்லையெனில் அவரிடம் எனக்கு என்ன வேலை?’ என்று கோபத்தில் கொதித்தெழுந்து கூறினார் பண்டிதர்.
அப்போதும் அமைதியாக, “ இறைவர் கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தின் மூலம் என்ன உட்பொருளை வெளியிட்டிருக்கிறார் என்பதை மட்டும் தாங்கள் புரிந்து கொண்டிருந்தீர்களானால், அரசரிடம் போக வேண்டிய கட்டாயத்தேவை நேர்ந்திருக்கவே முடியாது. வேறு ஒரு நினைவும் இல்லாமல் ஒருவன், அவரையே வழிபட்டு வந்தால், அவரையே ஒருவன் சரணாகதியென அடைந்தால், இடைவிடாது எந்த நேரமும் ஒருவனின் மனம் அவர் சிந்தனையிலேயே அழுந்தி வந்தால், அப்போது இறைவன் அத்தகைய பக்தனுக்கு தேவைப்படும் நலன்களையெல்லாம் அவரே நல்குவார், என்ற கருத்தையே ஐயன் இந்த பாடலின் மூலம் வெளியிட்டுளார். இந்த மூன்று இயல்புகளையுமே தாங்கள் ஒழுங்காக உறுதியாகக் கடைப்பிடிக்கவில்லை. அரசன் தான் தங்களுக்கு தேவையாவன செய்வார் என்ற நம்பிக்கையோடு அவரை அணுகுகிறீர்கள். இந்த ஸ்லோகத்தின் பொருளினின்றும் தாங்கள் அங்குதான் தவறி நேர்மாறான பாதையில் போய்விட்டீர்கள். அரசனும் அதே காரணத்தோடு தான் தங்கள் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளான்”. என்று அறிவுறுத்தி முடித்தாள் மனைவி.
அவள் குறிப்பிட்ட செய்திகளிலேயே ஆழ்ந்து சிந்தனை செய்த வண்ணம் சற்று நேரம் அசையாது அமர்ந்திருந்தார் பண்டிதர். தான் செய்து வந்த பெருந்தவற்றை அவர் உணர்ந்து விட்டார். அதனால் மறுநாள் அரண்மனையைத் தேடி அவர் போகவில்லை. அதற்கு மாறாக கிருஷ்ணபிரானை வழிபடுவதில் மனமெல்லாம் ஈடுபட ஆழ்ந்து அமர்ந்து விட்டார்.
அரசன், “பண்டிதர் ஏன் வரவில்லை?” என்று சபையினரைக் கேட்டான். அதற்கு அவர்கள் அவர் வீட்டிலேயே தங்கியிருக்கிறார் என்றும் அவர் அரச சபைக்கு வரும் அறிகுறிகளே அவரிடம் காணவில்லை என்றும் கூறினர்.உடனே அரசன் அவரை அழைத்து வர ஓர் ஆளை அனுப்பினான். ஆள் வந்து அழைத்தபோதும் பண்டிதர் மன உறுதியோடு வருவதற்கில்லை என்று மறுமொழி சொல்லியனுப்பி விட்டார்
ஒருவரிடம் கையேந்தி செல்ல வேண்டிய தேவையே எனக்கு இல்லை. என் கிருஷ்ணர் இருந்த இடத்திலேயே எனக்கு எல்லாம் அளித்து விடுவார். இதை முன்பே உணராது போனமையால்தான் இவ்வளவு அவமானப் படுத்தபட்டேன். எளிதாக விளங்கும் சொற்களுக்கு என்னென்னவோ பொருள்களைக் கற்பனை பண்ணிக்கொண்டு குருடனாக இருந்தேன், இது நாள் வரை. இனிமேல் அவரையே தஞ்சம் அடைந்தவனாய் அவரது வழி பாட்டிலேயே காலம் கழித்தவனாய் நான் இருந்து வந்தால் என்னுடைய தேவைகளை அவ்வப்பொழுது கவனித்துச் செய்து வருவார்.” என்று வந்த ஆளிடம் விடை கூறியனுப்பினார் பண்டிதர்.
செய்தியைக் கேட்டவுடன் அரசனே எழுந்து கால் நடையாக நடந்து வந்து பண்டிதரின் வீட்டையடைந்தான். பண்டிதரின் கால்களில் பணிந்து வணங்கினான். நேற்று பலவகை யான விளக்கம் கூறிய ஸ்லோகத்திற்கு இன்று தங்கள் அனுபவத்தின் அடிப்படையிலேயே பொருத்தமான விளக்கம் கூறிக் காட்டி விட்டதற்கு மனப்பூர்வமாக நான் தங்களுக்கு மிக்க நன்றியுடையேன்” என பரவச உணர்வோடு கூறினான் அரசன்.
ஆன்மீகச் செய்திகளை அனுபவபூர்வமாக வெளிப்படுத்தாது வெறும் ஆடம்பரமான பிரசாரம் மூலமாக விளக்குவது என்பது பாடலின் உட்பொருளை விளங்க வைக்காது பகட்டான பேச்சும் திறமையான நடிப்பும் கொண்டதாகவே அமையும் என்ற பேருண்மையை அரசன் பண்டிதருக்கு இங்ஙனமாகப் புரிய வைத்தான்.
கேள்விகள்:
- எந்த நூலில் இந்த பாடல் வருகிறது?
- இந்த பாடலின் பொருள் என்ன?
- பண்டிதரின் விரிவுரையினால் அரசன் ஏன் நிறைவு பெறவில்லை?
- அரசன் பின்னர் எப்படி மன நிறைவு பெற்றான்?