பையனும் கரடியும் (மோஹம்)
ஒரு ஆற்றுப் படுகையில், ஒரு முறை சில பையன்கள் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தனர். அது மழைக்காலம். எங்கோ பெய்த மழையினால் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. மிக வேகமாக சுழித்து வரவே, அந்த வெள்ளத்தில் எப்படியோ நழுவி விழுந்து விட ஒரு கரடி அடித்துக் கொண்டு வரப்பட்டது. கரையிலிருந்த பையன்களில் ஒருவன், பெருங்குவியலாக ஏதோ ஒன்றை வெள்ளம் அடித்து வருவதைக் கண்ணுற்றான். தூரத்து பார்வைக்கு அது ஒரு கம்பளி போர்வைகளின் மூட்டை மிதந்து வருவது போலத் தோற்றம் தந்தது. அதனால் அந்த பையன் தன் கூட்டாளிகளிடம்,”நான் ஆற்றில் குதித்து நீந்திச் சென்று, அந்த கம்பளி மூட்டையை எடுத்து வருகிறேன்.” என்று கூறி விட்டு ஆற்றில் இறங்கி நீந்தினான்.
கரடியருகில் சென்றவன், அதை கம்பளி மூட்டை என்றே நம்பியவனாய் இரு கைகளாலும் கரடியைச் சேர்த்துப் பிடித்தான். அதுவரை தனித்து வெள்ளத்தில் தவித்து வந்த கரடியும் தன் கைகளால் அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. அது கம்பளி மூட்டையல்ல, கொடிய விலங்கு என்று உணர்ந்து கொண்டதும் அவன் அதன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள பெரிதும் முயன்றான். ஆனால் கரடி அதன் பிடியைத் தளர்த்தவேயில்லை. பின்னும் இறுக்கிப் பற்றியது.
கரையிலிருந்த பிள்ளைகள், “தோழனே! அந்த மூட்டையை விட்டு விட்டு வந்து விடு,” என்று கூவினர். கரடியிடமிருந்து விடுபெற போராடிக் கொண்டிருக்கும் பையன்,”நான் தப்பித்து வர நினைத்தாலும், அது நான் விடுப்பட்டு வர, விட மறுக்கிறதே,” என்று கத்தினான்.
ஆசைக்கு அடிமையாகி விட்டால், அது, நம்மைக் கவ்விப் பிடித்து அடியோடு அழித்து விடும்.
கேள்விகள்:
- ஆற்றின் மேல் அந்த பையன் என்ன பார்த்தான்?
- அவன் பிறகு என்ன செய்தான்?
- அவனது தோழர்கள் அவனுக்கு என்ன அறிவுறுத்தினர்?
- இறுதியில் அவனுக்கு என்ன நேர்ந்தது?