கருமித்தனம் (லோபம்)
லோபம் என்பது மிக மிஞ்சிய கருமித்தனமாகும். எவரையும் அது மகிழ்வுடன் இருக்கவிடாது. ஒரு கருமி, தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்கவிடாமல் பொருளை வைத்திருப்பான். செயல்களை முன்னின்று செய்தால் கையைக் கடிக்குமோ, அதனால் தன் பணம் குறைந்து விடுமோ என்ற அச்சத்தினால் அவன் எல்லாவற்றிலுமே, பின் தங்கியிருந்து தயங்கியபடியே செயலாற்றுவான். இதை விளக்க ஒரு சிறு கதை உள்ளது.
கருமி, பெருங்கருமி என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். பெயருக்கு ஏற்ப அவர்கள், சரியான உணவு கூட உட்கொள்ளாத அவ்வளவு கஞ்சத்தன்மை படைத்தவர்கள். விசேஷ நாட்களில் கடவுளிடம், உலக இன்பங்களை மேலும் மேலும் பெற முறையிட்டு வேண்டுவர். ஆனால் சுவாமிக்கு நைவேத்தியம் படைப்பதற்கு அவர்களுக்கு மனம் வராது. ஒரு கற்கண்டுத் துண்டை வைத்து, படைத்து, அவர் அதை பார்த்து முடிப்பதற்குள் மறுநொடியில், தங்கள் வாயிலிட்டுத் தின்று விடுவர். இங்ஙனம் படைத்த கற்கண்டு, சுவாமி முன்னர் சில நிமிடங்கள் கூட இருக்கவிடாமல், அவர்கள் பரபரத்து எடுப்பதற்கு அவர்கள் கூறிய காரணம் விந்தையானது. அந்த நைவேத்தியம் அங்கு சற்று நேரம் இருந்தால் எறும்புகள் வந்து அரித்துக் கொண்டு போய்விடுமாம்! அதனால் விலையுயர்ந்த சர்க்கரையின் துகள்களில் சிலவற்றை இழந்து விடுவரே! என்னே அவர்களது கஞ்சத்தனம்!
ஒரு நாள் அவர்களது உறவினர் ஒருவர் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. பெரியவனான பெருங்கருமி நேரில் போய் துயரமுற்ற அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு வர புறப்பட்டான். செய்தி வந்தவுடனே நள்ளிரவில் புறப்பட்டு பேருந்திலோ, புகைவண்டியிலோ போகவும் அவன் விரும்பவில்லை. ஏனெனில் அவற்றில் பயணம் செய்தால் பயணச் செலவு என்று ஒரு பொருள் வீணாக ஏற்பட்டு தாங்க முடியாத மனச்சுமையை ஏற்படுத்துமே! அதனால் மறுநாள் விடியற்காலையில், நடந்தே செல்ல திட்டமிட்டான்.
மறுநாள் விடியலில் அவன் சென்றபிறகு, இளைய கருமி விளக்கை அணைத்துப் பலகணி அருகில் வைத்துவிட்டுப் படுக்கச் சென்றான். இருட்டில் அவனை நச்சுத்தன்மையான ஒரு தேள் கொட்டி விட்டது. அவன் அதனால் வேதனையோடு துன்புற்றிரூக்கும்போது, இரண்டு மைல் தொலைவில் நடந்து சென்று விட்ட பெரிய கருமி திடீரென நினைவு வந்தவனாக வேகமாகத் திரும்பி வீட்டுக்கு வந்தான். கருமி அவன் திரும்பி வந்ததன் காரணத்தை வினவியபோது, பெரிய கருமி, “தம்பி! நான் சென்ற பிறகு நீ விளக்கை அணைத்திருப்பாயோ மாட்டாயோ என்ற ஐயத்தில் நான் மிக்கக் கவலைப்பட்டுப் போனேன். அதனால்தான் உனக்கு நினைவூட்டவே திரும்பி வந்தேன்.” என்றான்.
அதற்கு கருமி, பொறுக்க இயலாத வலியிலும், புலம்பிக் கொண்டே,” அய்யோ அண்ணா! விளக்கு எரிவதால் செலவாகும் கொஞ்சம் எண்ணெய்யை மிச்சம் படுத்த எண்ணிய உன் ஆர்வம் போற்றத்தக்கதுதான். ஆனால் என்ன பரிதாபம்! இவ்வளவு தூரம் வீணாகத் திரும்பி வந்ததால் உன் செருப்புகள் எவ்வளவு தேய்ந்திருக்குமென்று நினைத்து பார்த்தனையா?” என்று கேட்டான்.
உடனே பெருங்கருமி, “என் அன்பின் கருமியே! கவலைப்படாதே! செருப்புகளைத் தேய விடாமல் கையிலெடுத்துக் கொண்டல்லவா வெறுங்காலில்தான் நடந்து வந்தேன்!” என்று விடையிறுத்தான். இத்தகைய இழி நிலையையே லோபம் விளைவிக்கும்.
கேள்விகள்:
- கடவுளிடமே சகோதரர் இருவரும், எப்படிக் கருமித்தனம் செய்தனர்?
- வீட்டிலிருந்த சகோதரனின் கருமித்தனத்தை விளக்கு?
- பெருங்கருமி என்ன செய்தான்?
- பெருங்கருமி செய்த திட்டம் என்ன?