உண்மையான பிராம்மணன் யார்? (குரோதம்)
அந்தண குலத்தைச் சேர்ந்த ஒரு துறவி, பல பல ஆண்டுகளாக, ஒரு புண்ணிய நதிக்கரையில் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டிருந்தார். படிப்படியாக அவர் தம்மைத் தாமே, மிகச் சிறந்த, புனிதத் தன்மையோடு கூடிய, கடவுள் பக்தி நிறைந்த மனிதன் என்று உயர்த்தி எண்ணிக் கொண்டார். அதனால், அவரது அத்தகைய மனப்பாங்கு, அவரைப் பொதுமக்களின் தொடர்பிலிருந்து தனியே பிரித்து அமைத்து விட்டது, அவர் அவர்களைத் தன்னோடு ஒன்றியிருக்கத் தகாத இழிந்த நிலையினர் என்று கருதினார். அவர்களது தொடர்பும் அண்மையும் அவரை கறைபடுத்தி விடும் என்று நம்பினார். புனித ஆற்று நீரில் அவர் செய்யும் குளியல், வேறு யார் கையும் படாது அவரே தன் கையாலேயே சமைத்து உண்ணும் தனிப்பட்ட உணவு, இடைவிடாது பல மணிநேரம் கண்களை மூடிக்கொண்டு அவர் ஓதும் இறைவனின் மந்திரங்கள், வேறு எவர் தொடர்புமின்றி அவர்களிடமிருந்து தொலை தூரத்தில் வாழும் ஆன்மீக வாழ்வு, இவை அனைத்தும் அவரைத் தூய்மையான தெய்வீக மனிதனாக மாற்றி விட்டது என்று தாமே கற்பனை செய்து கொண்டு இறுமாந்திருந்திருந்தார்.
ஆனால் அவரது முழு மனத்திலும் ஒரு சிறு துளி அன்பு கூட பெற்றிருக்கவில்லை. மனித இயல்பின் ஏற்றத் தாழ்வுகளுக்காகவும், நலிவுற்ற நிலைகளுக்காகவும் அணு அளவு இரக்கமும் அவரிடம் ஏற்பட்டது கிடையாது. கருணை மிக்க சூரிய ஒளியும், தூய்மைப் படுத்தும் துப்புரவான காற்றும் புகமுடியாத, அச்சம் தரத் தக்க இருண்ட, நடமாடமற்ற, ஒரு ஆழமான பாதாளமாக இருந்தது, அவர் இதயம் அழிவைத் தரும் குற்றங்களைத் தவிர்க்க, அறிவுறுத்தி உதவ, அவர் மிகச் சிறிய அளவில் கூட தியாகம் செய்ததில்லை.
யாராவது அவரோடு தொடர்பு கொள்ள முயன்றால், அவர் கடுங்கோபம் கொள்வார். ஏதாவது தொற்றுவியாதி பற்றி விடுமோ என்று அஞ்சுவது போல் அவர் தன் இருப்பிடத்திற்கு யாரையுமே நெருங்க விட்டதில்லை. தவ வாழ்வு மேற் கொண்டிருந்தபோதிலும், அவர் ஒரு முன் கோபக்காரர். ஒரு முறை கோபத்தில் அவர் கொதித்தெழுந்து விட்டால், அதை, அவர் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.
அவருடைய தனிப்பட்ட துறவி வாழ்வைப்பற்றி ஏதும் அறியாத, ஊருக்குப் புதியவனான ஒரு வண்ணான், துணிகளை வெளுக்க, அந்த ஆற்றுக்கு வந்தான். அப்போது அந்த வேதியர் ஆற்றை அடுத்திருந்த ஒரு தோப்பில் மறைவான ஒரு இடத்தில் கண்களை மூடி அமர்ந்து பாராயணங்களை ஓதிக் கொண்டிருந்தார். வண்ணான் அழுக்குத் துணிகளை எடுத்து, கல்லில் சத்தமாக அடித்துத் துவைக்கத் துவங்கினான் . அவன் தோய்க்குமிடத்திற்கு மிக அருகில் அந்தணர் அமர்ந்து இருந்ததால்,துணி தோய்த்த அழுக்கு நீர், பறந்து சென்று அவர் உடல் மீது தெறித்தது. உடனே அவர் கண்களைத் திறந்து அழையாமல் வந்த விருந்தாளி போன்று வண்ணானை – ஒரு சண்டாளனை – கண்டார். கோவில் போன்ற புனிதமான தமது இடத்தில் துணிவாக வந்து, அழுக்குத் துணிகளின் அசுத்த நீரை தம் மீது தெறிக்க விட்டு தம்மைக் களங்கப் படுத்தி விட்ட வண்ணானை உற்றுப் பார்த்தார் அவர்.
அவரது கோபம் அளவு கடந்து எல்லையற்றுப் பெருகி எழுந்தது. அவனைப் பலவாறு திட்டிச் சாபமிட்டார். தன்னுடைய அழுக்குப் பிடித்த வேலையை விட்டுவிட்டு கணப்பொழுதும் தாமதியாமல் உடனே அவ்விடத்தை விட்டு அகலும்படி கோபமான குரலில் உரத்துக் கத்தினார். சுறுசுறுப்பாகத் துணியை அடித்துத் தோய்த்துக் கொண்டிருந்த ஏழை வண்ணான், அவரது சொற்கள் காதில் விழாது போகவே, ஏதும் அறியாப் பேதையாகத் தோய்த்தவாறு இருந்தான்.
தம் கட்டளையை அவன் அசட்டை செய்தது கண்டு, நிதானத்தை இழந்து விட்டார் அந்த அந்தணர். இருக்கையின்றும் வேகமாக எழுந்து வண்ணானிடம் விரைந்து ஓடினார். சற்றேனும் இரக்கமில்லாமல் அவனைக் கையிலும், முட்டியிலும், கால்களிலும் மாறி மாறி, ஒரு தடியினால் கை சோர்ந்து போகும்வரை அடித்தார். எதிர் பாராத இத்தகைய திடீர் தாக்குதலினால் அடிப்பட்டவன் நிலைக் கலங்கி போனான். அனால் தன்னை அடித்தவர், ஒரு தூய்மையான அந்தணர் என்று அறிந்த பிறகு மெதுவாக நலிந்த குரலில் அவரது செயலுக்கு விளக்கமும் நியாயமும் கேட்கலானான். “ஐயா! தங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் வண்ணம் இந்த அடிமை செய்த தவறென்ன?,” என்று பணிவுடன் கேட்டான்.
அதற்கு அந்த துறவி சினந்தெழுந்து, “எத்தைகைய துணிவு கொண்டு நீ என் குடிலை அணுகினாய்? அழுக்கு நீரை என் புனிதமான உடல் மீது தெளித்து என்னை கரை படுத்தி விட்டாயே,” என்று கத்தினார்.
தான் ஓர் அறிவற்றவன், தனிமையாக ஒதுக்கப் பெற்ற இடத்தில் உத்தரவின்றி நுழைந்தவன் என்று தன்னையே நொந்தவனாய், அந்த வண்ணான் மிக தாழ்மையாக அவரிடம் பொறுத்திடுமாறு வேண்டிக் கொண்டு, அங்கிருந்து செல்லத் துவங்கினான்.
வேதியர் ஒரு சண்டாளனைத் தொட்டு அடித்து அதனால் தாம் அசுத்தப்பட்டு விட்டதனால் கண நேரத்தில் நிகழ்ந்துவிட்ட அந்தக் கரையைப் போக்க விரும்பியவராய் ஆற்றில் இறங்கினார். அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது அதே போல மற்றொரு பகுதியில் அவர் அடித்துத் துரத்திய வண்ணானும் குளிக்கக் கண்டார். அவனும் குளிப்பது அவருக்கு வியப்பையே அளித்து. அவன் அங்ஙனம் அப்போது குளிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று வினவினார்.
அதற்கு வண்ணான், ”ஐயா! தாங்கள் என்ன காரணத்திற்காக குளிக்கிறீர்களோ, அதே காரணத்திற்காகத் தான், நானும் குளிக்கிறேன்,” என்று அமைதியாக விடையளித்தான்.
வேதியர் பின்னும் வியந்து போனார். “நான் ஏன் குளிக்கிறேன் என்றால், ஒரு இழிகுல வண்ணானை – ஒரு சண்டாளனைத் – தொட்டு விட நேர்ந்து விட்டது. அந்தக் கரையைப் போக்கவே நான் குளிக்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஒரு தெய்வீக சாதுவின் கைப்பட்டால் ஒரு வித அழுக்கும் படியாதே! அதற்காக நீ ஏன் குளிக்க வேண்டும்” என்று மேலும் கேட்டார் அந்தணர்.
மென்மையான குரலில் மேலும் வண்ணான், “ஐயா! ஒரு சண்டாளனை விட மோசமானவர், தங்கள் மூலமாக என்னைத் தொட்டு விட்டார். தங்களையே மறக்க வைத்து, என்மீது கை வைத்து அடிக்கும்படி செய்துவிட்ட, பொங்கி எழுந்த தங்களது உணர்ச்சிகள் பிறவியில் சண்டாளனாகப் பிறந்து விட்ட ஒருவனைவிட, வெறுப்பும், அசுத்தமே மிகவாக கொண்டவையாகும். அத்தகைய உணர்வுகள் கொண்ட ஒருவனை நான் தீண்டி விட்டதால், நானும் களங்கப்படுத்தப் பட்டு விட்டேன்.” என்று விவரித்தான்.
சாதுவின் கண்களை மறைத்திருந்த திரை அறுந்து விழுந்தது. வண்ணான் கூறியதை அவர் ஆழ்ந்து சிந்தித்தார். அவரது ஆடம்பரமான ஆன்மீக வழிபாடுகளும், சாஸ்திர ரீதியில் அவர் ஆற்றி வந்த தவ வாழ்வும் தர இயலாத பாடத்தை வண்ணானது சொற்கள் நொடி நேரத்தில் கற்றுக் கொடுத்து விட்டன. அதாவது, எவனொருவன் தன் உணர்வுகளை வெல்கிறானோ, அவன் ஒரு பேரரசை தன் வயப்படுத்தும் அரசனைவிட வலிமை பெற்றவனாகிறான். அடக்க முடியாத உணர்வுகளைக் கொண்டவனைவிட, இழிந்த சண்டாளன் என்று எவனுமே இல்லை. இந்த பேருண்மைகளை அந்தணர் தெளிவாகப் புரிந்து கொண்டார்.
பிறகு அந்த சாது, தன்னுடைய தெய்வத் தன்மையைக் குறித்த தற்பெருமையினால், கட்டுக்கடங்காத கொடிய கோபத்திற்கு அடிமைப் பட்டிருந்ததையும், அந்த எளிய வண்ணான், தமது கண்மூடித்தனமான கோபத்தையும், அடியையும், அமைதியாகக் கலங்காது ஏற்ற பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்தார். தம்மைவிட அவன் எத்துணை மேலானவன் என்றும், அவர்களிருவரில், அப்போது சண்டாளனாக நடந்து கொண்டது யார் என்றும் நினத்து வெட்கித் தலை குனிந்தார்.
கேள்விகள்:
- சந்நியாசி ஏன் கோபம் கொண்டு வண்ணானைக் கடிந்தார்?
- வண்ணான் அப்போது என்ன செய்தான்?
- வண்ணான் அவருக்குத் தந்த விளக்கம் என்ன?