ஜோதி தியானம் – செய்முறை

Print Friendly, PDF & Email
ஜோதி தியானம் – செய்முறை

தீபம் ஜோதி பரப்பரம்ம
தீபம் ஜோதி பராயணே
தீபேன ஹரதே பாபம்
ஸந்த்யா தீபம் ஸரஸ்வதீ

ஜோதி பரம்பொருளின் சின்னமாகும். ஜோதியைத் தியானம் செய்வது எல்லாப் பாவங்களையும் அழிக்கிறது. காலையில், மாலையில் ஏற்றப்பட்ட தீபம் சரஸ்வதியின் வடிவமேயாகும். சரஸ்வதியே எல்லா ஞானத்துக்கும் தேவதையாவாள்.

செய்முறை:
  1. தியானத்தின்போது ஆழ்ந்து சுவாசிக்கவேண்டும். புஜங்களும், மார்பும், மேலும் கீழும் விரிந்து சுருங்கக் கூடாது. உடலின் இயக்கம், எண்ண ஓட்டம், சுவாசித்தல் இவை ஒன்றிற் கொன்று சம்பந்தப்பட்டவையாதலால், ஆரம்பத்தில், இந்தச் சாதனை நமது எண்ணங்களைக் குறைத்து, உடலை ஆடாமல் வைப்பதற்கு உதவுகிறது. சுவாசிக்கும் போது ‘ஸோஹம்’ என்னும் சப்தத்தைத் தியானம் செய்ய வேண்டும்.
  2. நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது ஸோ என்னும் சப்தத்தைத் தியானம் செய்ய வேண்டும். நாம் மூச்சை வெளியே விடும்போது ‘ஹம்’ என்னும் சப்தத்தை தியானம் செய்ய வேண்டும். ‘ஸோஹம்’ என்பதன் பொருள் அவனே நான் என்பதாம். அடுத்து, ஓங்காரத்தை அமைதியாக ஜபிக்க வேண்டும்.
  3. அடுத்து, கண்களைத் திறந்து, அமைதியாகவும், நிலையாகவும் ஜோதியைப் பாருங்கள். பின்பு, கண்களை மூடி ஜோதியை மனக் கண்ணில் பாருங்கள். கொஞ்சங்கொஞ்சமாக ஜோதியானது உங்களை நெருங்கி வந்து, உங்கள் புருவ மத்தியில் நுழைவதாக உணருங்கள்.
  4. பின்னர், மெதுவாக ஜோதியானது கீழே ஆன்மிக இதயஸ்தானத்துக்குச் சென்று இதயத்தை அன்பால் நிரப்புவதாக நினையுங்கள். அன்பு ஜோதி இதயத்தாமரையின் ஒவ்வொரு இதழாக விரிவடையச் செய்கிறது. “எல்லாவற்றையும் அணைக்கும் அன்பை நான் உணருகிறேன். நான் அனைவரையும் நேசிக்கும் அன்பு வடிவம். சத்தியம், சிவம், சுந்தரம், கருணை, எளிமை, சகிப்புத்தன்மை, பொறுமை கீழ்ப்படியும் தன்மை இவற்றின் ஸ்வரூபம் நான்” என்று உணருங்கள். அப்போது உங்கள் இதயத்திலிருந்து ஜோதி உடல் முழுவதிலும் ஒரு விழிப்பை ஏற்படுத்தும்.
  5. அடுத்து ஜோதி உங்கள் தலையினுள்ளே அனைத்திடங்களையும், மூளையினுடைய எல்லாச் செல்களையும் மூளையின் 1400 கோடி நரம்பு அணுக்களையும் தொட்டுக் கொண்டு புத்தியைப் பிரகாசப் படுத்துவதாக உணர்வீர்கள். பிரகாசமடைந்த புத்தி மனதையும், புலன்களையும் ஆளட்டும்.
  6. ஜோதி மெல்ல வலது பின்பு இடது கண்ணுக்குச் செல்வதாக உணர்வீர்கள். கண்களில் ஜோதி உள்ளதால் கடவுளை மட்டுமே ஒருவர் பார்க்க முடியும். நன்மையை மட்டுமே ஒருவர் பார்க்க முடியும். கண்களுக்கு இனி திருஷ்டி தோஷம் கிடையாது.
  7. அடுத்து ஜோதி வலது பின்பு இடது காதுகளுக்குச் செல்லும். ஜோதி காதுகளில் உள்ளதால், கடவுளைப் பற்றிய ‘சத்’ விஷயங்கள் ஒருவர் கேட்க முடியும். நல்லதை மட்டுமே கேட்க முடியும். காதுகளுக்கு சிரவண தோஷம் இருக்காது.
  8. அடுத்து ஜோதி மூக்குக்கு நகரும். ஆதலால் கடவுளை மட்டுமே அனுபவிக்க முடியும். நல்லதையே நுகர முடியும். மூக்கு முறைப்படி சுவாசிக்கும்.
  9. அடுத்து ஜோதி வாய்க்குச் செல்லும். வாயில் ஜோதி உள்ளதால் ஒருவர் கடவுளை மட்டுமே அல்லது நல்லதை மட்டுமே பாட முடியும். பேச முடியும். அல்லது சுவைக்க முடியும். நாவிற்கு வாக்கு தோஷம் இருக்காது.
  10. அடுத்து மெதுவாக ஜோதி வலது தோளுக்குச் சென்று வலக்கை விரால் நுனி வரை செல்லும். பிறகு இடது தோள் வழியாகச் சென்று இடது கைவிரல் நுனிவரை பரவும். ஜோதி கரங்களில் உள்ளதால் கரங்கள் நற்பணியை மட்டுமே செய்ய முடியும்.
  11. ஜோதி முதுகு, கழுத்து, இதயம், மார்பு, வயிறு ஆகிய அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக்குவதை உணர்வீர்கள்.
  12. அடுத்து ஜோதி நாபிக்குச் செல்வதாக உணர்வீர்கள். பிறகு வலது இடுப்புக்குச் சென்று, பின்பு மெதுவாக வலது கால் முழுவதும் சென்று விரல் நுனி வரை பரவுவதாக உணர்வீர்கள். பிறகு இடது இடுப்புக்கு ஏற அதன் வழியாக இடது கால் முழுவதும் பரவி நிற்கும். கால்களில் ஜோதி உள்ளதால், கடவுள் விரும்புமிடங்களுக்கு மட்டுமே அவை செல்லும். ஜோதியானது இப்பொழுது உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுவதும் பரவி நிற்றலை உணர்கிறோம். இப்போது ஜோதி நமக்குள் உள்ளது.
  13. பின்பு ஜோதியை நம் உற்றார், உறவினர், நண்பர்கள், பகைவர்கள், நோயுற்றவர், வருத்தத்தில் உள்ளவர் அனைவருக்கும் அனுப்பவேண்டும்.
  14. பின்பு ஜோதியை நம் தெரு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, உலக நாடுகள், அனைத்து மனிதர்கள், அனைத்து ஜீவராசிகள், பஞ்ச பூதங்கள் மற்றும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அனுப்பவேண்டும். பிண்டத்தில் உள்ளது தான் அண்டத்திலும் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வோம். பிண்டமும் (microcosm) ஜோதிமயம், அண்டமும் (Macrocosm) ஜோதிமயம் என்று உணர்வோம்.

‘அஸதோமா ஸத் கமய’ மந்திரம் ஓதவும்.
அஸதோ மா, ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய,
ம்ருத்யோர் மா அமிர்தம் கமய,
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
– ப்ருஹதாரண்யாக உபநிஷதம்

“ஓ! பகவானே எங்களை அசத்தியத்தில் இருந்து சத்தியத்திற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், இறப்பிலிருந்து
அழிவற்ற நிலைக்கும் இட்டுச் செல்லுங்கள்”.

இரண்டு கரங்களையும் ஒன்றோடு ஒன்று தேய்த்து மெல்லக் கண்களைத் திறக்கவேண்டும்.

ஜோதி தியான சதானாவில் மூன்று நிலைகள் உண்டு.

முதல் நிலை நான் ஜோதியில் உள்ளேன் (I am in the light) என்ற நிலை. இந்நிலையில், ஒருவன் தான் கடவுளிடமிருந்து வேறுபட்டவனாகவும் கடவுளின் தொண்டனாகவும் கருதுகிறான்.

இரண்டாவது நிலையில், ஜோதி என்னுள் உள்ளது (The light is in me) என்ற நிலை. இந்நிலையில் ஒருவன் தான் கடவுளுடன் மிக நெருங்கியவனாகவும், கடவுளின் புத்திரனாகவும் நினைக்கிறான்.

மூன்றாவது நிலையில், தானே ஜோதி (I am the light. I and light are one) என்பதை ஒருவன் உணர்கின்றான். தானே ஜோதி என்பதை உணரும் வரை ஒருவன் ஜோதி தியானம் செய்ய வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன