ஜெய் ஜெய் ராம் – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
ஜெய் ஜெய் ராம் – மேலும் படிக்க

இராமாயணத்தைப் பற்றி

இனிய தெய்வீக ஓடை போன்ற இராம காவியமானது, கோடானு கோடி வருடங்களாக அனைவருக்கும் கஷ்டங்களில் ஆறுதல் அளிக்கும் வற்றாத ஜீவநதி. அது குழப்பங்களின் போது ஒளிதருவது, சோர்வுற்று விரக்தியோடு இருக்கும்போது தூண்டு கோல். தடுமாறும்போது வழிகாட்டி. அது ஒழுங்கானவர், ஒழுக்கமற்றவர், மனிதத்தன்மை இல்லாதவர், தாழ்ந்தவர் மிருககுணமுடையவர், அரக்கர், இவர்களுக்கெல்லாம் உயர்வான அறத்தை அறியும் பொருட்டு இறைவனே மனிதனாக வந்து நடத்திய நாடகம். அது மனிதனின் இதய நரம்புகளை மென்மையாக மீட்டி, அவனுள்ளேப் புதைந்திருக்கும் நற்குணங்களை வெளிப்படுத்துகிறது. அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர இறைவன் நடத்திய நாடகம் இது.

மனித வர்கத்தினரிடையே இராமாயணம் போல, இதுவரை எந்தக் காவியமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது நம் பௌதீக, அறிவியல், எல்லைகளை எல்லாம் கடந்து நிற்கிறது. இராமர் கதை, மக்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் அருமருந்தாகும். நம்மை உண்மை, நேர்மை, சாந்தம், அன்பு, ஆகிய பாதைகளில் இட்டுச்சென்று நல்வழிப்படுத்துகிறது. கதை, தாலாட்டு, கவிதை, நாடகம், நாட்டியம், சித்திரம், பாட்டு, என்று எல்லா துறைகளிலும், இராமர் கதையானது சித்தரிக்கப்பட்டுள்ளது. இராமர் கதையில் வரும் பாத்திரங்கள், சாதனைகளின் எடுத்துக் காட்டாகவும், கீழான மதி படைத்தவர்களுக்கு எச்சரிக்கையாகவும் விளங்குகின்றன.

விஞ்ஞானம், மனித குலத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள், கொண்டு வந்தது. நம் சாயிராமனோ அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வழி வகுக்கிறார். அது விஞ்ஞானம்(Science). நம் சாயியின் வழிமுறை, சாயி தரும் ஞானம் (Sai-ence).இந்தப் பிரபஞ்சத்தையே அன்பு மயமாக்கவும் நம் சமூகத்தைக் குலைக்கும் தீயச் சக்திகளை அழிக்கவும் சாயியால் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது. முறையில்லா உறவு; பெற்றோர், பெரியோர், போன்றவர்களிடம் மரியாதையில்லாததால் வரும் துன்பம்; தேவைகளற்ற உறவுகளால் வரும் துன்பம்; துன்புறுத்தித் தான் நினைத்ததை சாதித்துக் கொள்வதால் வரும் துன்பம் போன்றவற்றை இராமகதையின் மூலம் தெரிந்துகொள்கிறோம். சாயிராமன், தனக்கே உரிய இனிய, எளிய நடையில் இராமனான தன்னைப் பற்றி இக்கதை மூலமாக நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்? அவர் வாழ்ந்து காட்டிய வழியில் நாமும் செல்ல முயல்வோம்.

சாயியின் அன்பர்களாகிய நாம் (குருமார்கள்) அவர் நமக்களித்த கடமையைச் செவ்வனே ஆற்றி, அவர் சரணாரவிந்தங்களை அடைவோம். இனி, இந்தக் கதையின் உட்பொருளைப் பார்ப்போம். இராமன் ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளார். அவர்தான் ஆத்மாராமன். இந்த ஆத்மாராமனின் ஆசீர்வாதத்தினால் தான் நமக்கு அமைதியும், ஆனந்தமும் கிடைக்கின்றன. அன்பாலும், ஒற்றுமையாலும் மனிதவர்க்கத்தைப் பிணைத்திருக்கும் தர்மத்தின் திருவுருவம் இவர்தான். இராமாயணம் இரண்டு நீதிகளைக் கூறுகின்றது. அவையாவன. (அ) பற்றற்ற தன்மையின் மதிப்பு (ஆ) நம்முள் அவரை உணரவேண்டியதன் அவசியம். இவை நமக்கு மோட்சத்தைக் காட்டும் திறவுகோல். புலன்-இன்பங்களை விட்டொழியுங்கள். நீங்கள் இராமனை அடையலாம். அயோத்தியில் வசதியான அரண்மனை வாழ்க்கையை விட்டுவிட்டு, வனவாசத்திற்குப் போனதால்தான், சீதை இராமனுடனேயே சதா சர்வகாலமும் இருக்க முடிந்தது. எப்போது பொன்மானின் மீது சீதை ஆசை வைத்தாளோ, அந்த நிமிடமே ஸ்ரீராமனை இழந்தாள். துறவு, சந்தோஷத்தைத் தரும், பற்று வைப்பது, சோகத்தையே தரும்.

உலகத்தில் இருங்கள், ஆனால் உலகத்துக்காக இருக்காதீர்கள். இராமனுடன் இருந்தவர்கள், அதாவது அவர் தம்பிகளும், தோழர்களும், அவருடன் ஒத்துழைத்த அனைவரும் தர்மத்தைக் கடைபிடித்தவர்கள். தசரதன்-பத்து இந்திரியங்கள் கொண்ட மனிதனைக் குறிக்கிறான். அவருடைய மூன்று மனைவிகள்=ஸத்வ, ரஜோ, தாமஸ குணங்களைக் குறிக்கின்றனர். அவரின் நான்கு பிள்ளைகளும் மனித வாழ்க்கையின் இலட்சியங்களான=புருஷார்த்தங்களைக் குறிக்கின்றனர். லக்ஷ்மணன்=சாமர்த்தியத்தையும், சுக்ரீவன்=விவேகம் அல்லது பகுத்தறிவையும், வாலி=வருத்தத்தையும் (சோகத்தையும்), அனுமன்=வீரத்தையும் காட்டுகின்றனர். மாயையான சமுத்திரத்தின் மீது பாலம் கட்டப்படுகிறது. இராவணன்,கும்பகர்ணன், விபீஷணன் என்ற மூன்று அரக்கர் குலத் தலைவர்களும் முறையே ராஜஸ,தாமஸ,சாத்வீக குணங்களின் பிரதிநிதிகள். இந்தப் பிறவியென்ற துன்பத்திலே உழன்று,கஷ்டப்பட்டு ஒவ்வொரு உயிரும் அறிந்து கொள்ள வேண்டிய பிரம்ம ஞானமே சீதையைக் குறிக்கின்றது. இராமாயணத்தை அனுபவித்துப் படித்து, இவ்வுலகில் இராமன் தான் உண்மை, மற்றவையெல்லாம் நிலையில்லாதவை-என்ற நிலையை உள்ளத்தில் நிலைநிறுத்துங்கள்.

(சத்ய சாயி பாபா – ராம கதா ரஸவாஹினி)

ராமா என்ற சொல், வேதத்தின் சாரமாகும். இராமனின் கதையோ, பாலைப் போலத் தெளிவானது. இது நாள் வரையில், இராமாயணத்தைப் போல் எந்த மொழியிலும் எந்த நாட்டிலும், ஒரு காவியம் படைக்கப்படவில்லை. ஆனால், அனைத்து நாட்டினருக்கும், மொழியினருக்கும், படிக்கப் படிக்க ஆர்வத்தைப் பெருக்கும் வண்ணம், இராமாயணம் உள்ளது. இந்தியர்களின் அதிர்ஷ்டப் பெட்டகம் இராமாயணம்.

இராமர் என்ற சொல் பாவங்களையெல்லாம் போக்கும். பாபிகளை நல்வழிப்படுத்தும். இராமர் என்ற சொல் உணர்த்தும் வடிவம் ரம்யமானது. எப்படிக் கடல், நீருக்கு ஆதாரமோ, அதே போல் மனித இனத்துக்கு அஸ்திவாரம் இராமர்.இராமனில்லாமல் உயிரில்லை. இராமாயணத்தில் எத்தனையோ விதமான திருப்பங்கள் உண்டு. கருணாரஸம் முதலிலிருந்து கடைசிவரை குறைவில்லை. வருத்தம், வியப்பு, கேலி, அதிர்ச்சி, அன்பு, சோர்வு என்று எத்தனையோ விதமான உணர்ச்சிகள் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்டாலும், அவை இறுதியில், தர்மம் (நேர்மை) கருணை என்ற இரண்டு உணர்ச்சிகளின் வட்டத்தில் தான் வந்து சேரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன