ஆரோக்கிய உணவு & ஆரோக்கியமற்ற உணவு ; இசை நாற்காலி விளையாட்டு
விளையாட்டைத் துவங்கும் முன் உணவு மற்றும் உணவுப் பழக்கங்கள் பற்றி குரு, குழந்தைகளுடன் உரையாட வேண்டும்.
எடுத்துக்காட்டவேண்டிய சில முக்கியக் குறிப்புகள் கீழ்வருமாறு;
- நீ உணவு உண்ணும் முன் உன் கைகளைக் கழுவவில்லை என்றால், கைகளில் இருக்கும் அழுக்கானது, வயிற்றுக்குச் செல்லும். அதனால் உன் உடல் நிலை குன்றும்.
- நீ வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கிறாய். ஏனென்றால், உன் அம்மா உனக்கு நல்ல, சுத்தமான உணவை சமைத்துக் கொடுக்கிறார்.
- அம்மா உனக்குக் கொதிக்க வைத்த, சுத்தமான நீரைக் குடிக்கக் கொடுக்கிறார்.
- சுத்தமும், ஒழுங்கும் உன்னை ஆரோக்கியமாக வைக்கும்.
- நாம் அனைத்து காய்களையும், மற்றும் கனிகளையும் உண்ண வேண்டும்.
- நாம் நொறுக்குத் தீனிகளையும், துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
- நாம் உணவு உட்கொள்ளுமுன் அந்த உணவைக் கடவுளுக்குப் படைத்தோமேயானால், அதுவே பிரசாதமாகிவிடுகிறது.
- காய், கனிகளின் படங்களைக் காட்டி, நல்ல ஆரோக்கியமான உணவு பற்றி விளக்கவும்.
தேவையான பொருட்கள்: சார்ட், ஸ்கெட்ச் அல்லது மார்க்கர், நாற்காலிகள், ஏதேனும் ஒரு இசைக் கருவி (அல்லது குருவே பஜனைப் பாடல்கள் பாடலாம்).
தயாரித்து வைக்கவேண்டியவை: ஒரு சார்ட் பேப்பரை 4 சம அளவு துண்டுகளாக வெட்டவும். அவற்றில் ஆரோக்கியமான மற்றும் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய உணவு வகைகளை எழுதவும்.
உதாரணம்:
- ஆரோக்கியம் தரும் உணவுப் பண்டங்கள் : காய்கறி சூப், பால், தயிர், நறுக்கிய பழங்கள், ராஜ்மா புலாவ், சப்பாத்தி, பச்சைக் காய்கறிகள், சுண்டல், முளைக்கட்டிய தானியங்கள், இளநீர், முதலியன.
- கேடு விளைவிக்கக்கூடிய உணவுப் பண்டங்கள் : பர்கர், நூடுல்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், குளிர் பானங்கள், முதலியன.
இந்த விளையாட்டு, இசைநாற்காலி விளையாட்டைப் போன்றதுதான். இதில் எப்பொழுதும் நாற்காலிகளின் எண்ணிக்கையும், விளையாடப்போகும் குழந்தைகளின் எண்ணிக்கையும் சமமாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு நாற்காலியின் கீழும் ஒரு ஆரோக்கிய உணவு அல்லது ஒரு ஆரோக்கியமற்ற உணவின் பெயரை எழுதிக் கவிழ்த்து வைக்கவேண்டும். இசை ஆரம்பித்தவுடன், குழந்தைகள் நாற்காலிகளைச் சுற்றி ஓட/நடக்க ஆரம்பிக்கிறார்கள். இசை நின்றவுடன் அவர்கள் அருகிலுள்ள நாற்காலியில் அமர்கிறார்கள். ஆரோக்கியமற்ற உணவு எழுதப்பட்ட நாற்காலியில் உட்காரும் குழந்தை விளையாட்டிலிருந்து நீங்க வேண்டும். விளையாட்டு தொடர்கிறது.
குறிப்பு : சார்ட் துண்டுகளின் எண்ணிக்கையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் சமமாகயிருத்தல் அவசியம்.