கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்
நாட்டு விடுதலைப் பேராட்டத்திற்கு வித்திட்ட திலகரைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி அவர் வழி நடந்த மாபெரும் தியாகி வ.உ.சிதம்பரனார் (1872-1936).
திருநெல்வே- மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) 1872ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி உலகநாதர்-பரமாயி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருடன் உடன்பிறந்தவர்கள் அறுவர். ஆயினும் வ.உ.சியும் சகோதரர் மீனாட்சி சுந்தரமும் ஆகிய இருவர் மட்டுமே எஞ்சினர். ஓட்டப்பிடாரத்தில் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். திருச்சியில் சட்டம் பயின்றார். 1894ல் வழக்கறிஞரானார்.
ஆன்மீகம், இலக்கியம், அறநெறி ஆகியவற்றை வளர்ப்பதற்காகவே விவேகபானு என்ற இதழை நண்பர்களின் உதவியுடன் தொடங்கினார். திலகரின் கொள்கையில் அவர் ஈர்க்கப்பட்டதால், நாட்டுப்பற்று மிக்கவரானார். திலகரைப் பற்றி சிதம்பரனார் இலங்கை வீரகேசரி இதழில் தொடர்ந்து எழுதினார். மகாகவி பாரதியின் எழுத்துக்கள் சிதம்பரனாரைக் கவர்ந்தன. சென்னையில் பாரதியை முதன் முதலாகச் சந்தித்தார். அதன்பிறகு, அவருக்கு சுதந்திர வேட்கை அதிகமானது. வெள்ளையர் ஆட்சியை முறியடிக்க, அந்நிய நாட்டுப் பொருள்களைப் புறக்கணிப்பு (பகீஷ்காரம்) செய்தார். அகிம்சை வழி ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார்.
பொருளாதார ரீதியில் பிரிட்டிஷ் கம்பெனியுடன் போட்டியிட்டு வெல்லவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. நாமே ஏன் கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கி கப்பல் விடக்கூடாது என்ற எண்ணம் சிதம்பரனாருக்கு உதயமானது. கப்பல் வாங்குவதற்காக வ.உ.சி. பம்பாய்க்கு பயணமானார். திலகரின் உதவியுடன் இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கினார். 1906ம் ஆண்டு கப்பல் கம்பெனி தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசை பணிய வைக்கும் நோக்குடன் சுதேசிக்கப்பல் கம்பெனியைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழர் என்ற பெயர் அவருக்கு நிலைத்தது.
தூத்துக்குடியில் 1888ம் ஆண்டு கோரல் மில் என்ற நூற்பாலை உருவானது. செய்ததோ கடுமையான வேலை. பெற்றதோ குறைந்த ஊதியம். விடுமுறை நாட்களில் சம்பளம் கிடையாது, அக்காலத்தில் தொழிலாளர் நலச்சட்டம் இல்லை, தொழிலாளர்களால் கொடுமையைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தச்சூழ்நிலையில் விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா தூத்துக்குடிக்கு வந்தார். அவர் சிறந்த பேச்சாளர், கனல் கக்கப் பேசுபவர்.
கோரல் மில் தொழிலாளர்களிடையே சிவாவும், வ.உ.சியும் வேலைநிறுத்தம் செய்யுமாறு சொற்பொழிவாற்றினர். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். வேலைநிறுத்தம் போராட்டமாக மாறியது. வேலைநிறுத்தச் செய்தி இந்தியா எங்கும் பரவியது. இந்த வாய்ப்பைத் தேச விடுதலைப் பேராட்டத்தோடு வ.உ.சி. இணைத்தார். தூத்துக்குடி நகரமே குலுங்கியது. நிலைமை மோசமாவதைக் கண்டு மில் முதலாளிகள் பணிந்தனர். தொழிலாளர்கள் மகிழ்ந்தனர்.
பிபின்சந்திரபாலரின் விடுதலையைக் கொண்டாடும் கூட்டத்தை நடத்தக்கூடாது என்றும், ஊர்வலம் செல்லக்கூடாது என்றும் தூத்துக்குடி மாஜிஸ்ட்ரேட் (நீதிபதியாகப் பணியாற்றுபவர்) தடை உத்தரவு பிறப்பித்தார். வ.உ.சி. தடை உத்தரவை மதிக்கவில்லை. கலெக்டர் விஞ்சுவை, வ.உ.சி. நேரில் சந்தித்தார். அவருடன் பத்மநாப ஐயங்கார் என்பவரும் சென்றார். சந்திப்பின் பொழுது விஞ்ச் சிதம்பரனாரை மிரட்டினார். விஞ்ச்-சிதம்பரனாரது சந்திப்பைப் பாரதியார் கவிதையாக எழுதினார். அந்தக் கவிதையை இளைய தலைமுறையினரும் படிக்க வேண்டும்.
சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம்
சாயுமோ – ஜீவன் ஓயுமோ
இதயத்துள்ளே இலங்கு மகாசக்தி
யேகுமோ நெஞ்சம் – வேகுமோ
சிதம்பரனார் பதில் கூறுவதாக அமைந்த இக்கவிதை வரிகள் மெய்சி-ர்க்க வைக்கின்றன.
வ.உ.சி. கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி பாரத தேசமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஊர்களிலும் கண்டனக்கூட்டங்கள் நடைபெற்றன. சிதம்பரனாரை மட்டும் ஜாமீனில் எடுக்க தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர் முன்வந்தனர். “சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய இருவருக்கும் ஜாமீன் கொடுத்தால்தான் நான் வெளியே வருவேன்” என்று சிதம்பரனார் தனக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை மறுத்தார். “சிதம்பரம் பிள்ளையின் பெருங்குணம்” என்று தேசிய உணர்வு நிறைந்த சுதேசமித்ரன் பத்திரிக்கை பாராட்டி எழுதியது.
சென்னை உயர்நீதிமன்றம் வ.உ.சி., சிவா, பத்மநாபன் மூவரையும் ஜாமினில் வெளியே விட உத்தரவிட்டது. ஆனால் வெளியே வந்த சிதம்பரனாரையும், சிவாவையும் சிறைவாச-லேயே அரசாங்கம் மீண்டும் கைது செய்தது. அரசு நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு, 1908ல் இருவருக்கும் 40 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இரட்டைத் தண்டனைத் தீர்ப்பைக் கேட்ட அவர் சகோதரர் மீனாட்சிசுந்தரம் அதிர்ச்சியுற்று மனநலம் இழந்தார்.
செக்கிழுத்த செம்மல்: சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார்; கல் உடைத்தார்; அவர் உள்ளங்கைகளில் இருந்து இரத்தம் கசிந்தது. அந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். செல்வந்தரான வ.உ.சி. ஆரோக்யமான, சுவையான உணவு உண்ணும் வழக்கம் உடையவர். ஆனால் சிறையில் கல்லும், மண்ணும் கலந்த கூழைக் குடிக்க வேண்டியிருந்தது. அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறைஅதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது.
வ.உ.சி. கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறைச்சாலையில் கொடூர தண்டனைக்கு இடையே தமிழ் இலக்கியம், ஆன்மீகம் பற்றிய நூல்களை எழுதினார்; மொழி பெயர்த்தார்; உரை எழுதினார்.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
என்ற பாரதியாரின் பாடலைக் கேட்டுக் கொண்டே சிதம்பரனார் 18-11-1936 அன்று உயிர் நீத்தார்.