சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்ஸை என்னும் ஐந்து மேம்பாடுகளின் சாரத்தை கிரகித்தல் பிரபஞ்ச இயக்கத்தில் உள்ள ஒழுங்கு நெறி:
பிரபஞ்சம் முழுவதும் ஒரு நெறியான ஒழுங்கு நிலவுகிறது. ஒவ்வொன்றும் சில வழுவாத விதிகளால் இயங்குகிறது. படைப்பிலுள்ள ஒவ்வொன்றும், ஒவ்வொரு துணுக்கும், ஒவ்வொரு இனமும், இருப்பும் சில நெறி மிக்கப் பொறுப்புகளாலும், கடமைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் தெய்வீகத் திட்டத்தின்படி படைக்கப்பட்டதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு. ஒவ்வொன்றும் அதனுடைய தருமத்தில் தங்கியிருக்கும் போது தான் ஒவ்வொருவரும் தனக்குரிய தருமத்தின் – அறத்தின் – விதிகளை மீறாது தம்மை நடத்திக்கொள்ளும் போது தான் ஒழுங்கு, அமைதி, இசைவு ஆகியவை பிரபஞ்சத்தில் நிலவும், படைப்பின் தெய்வீகத் திட்டமும் உள்நோக்கமும் அதன் இலட்சியத்தையும், நிறைவையும் அடையும்.
கடவுள் மனிதனைத் தன் உருவத்திலேயே படைத்ததாகக் கூறப்படுகிறது. மனிதனுக்கும் தெய்வீகப் பண்புகள் உண்டு என்பதே இதன் உட்பொருள். கடவுள் பரிபூரணமானவர்; எல்லாவிதமான நற்குணங்களின் திருவடிவமாவர்.அவர் எல்லாவிதமான மங்கலமான குணங்களின் உறைவிடமானவர். கடவுளின் உருவத்தில் படைக்கப்பட்ட மனிதனுக்கும் எல்லாவித தெய்வீகப் பண்புகளும் உண்டு. அவைகளனைத்தும் வித்துகள் போன்று வெளிப்படாது உள் மறைந்துள்ளன. இத்தகைய வித்துகள் துளிர்விட்டு முழுமையாக வளர்ந்து, மனிதன் இத்தெய்வீக சிறப்புகளையும் பண்புகளையும் வெளிப்படுத்தி வாழ வேண்டும் என்பதற்காகவும் கடவுள் அவனுக்கு அறிவு, விவேகம் என்ற இரண்டு திறன்களை அளித்துள்ளார். மனிதன் எது சரி, எது தவறு என்பதனை பிரித்தறியவல்லவன்; அவனால் தனக்குள் நோக்கியறிய முடியும்; தனது நடத்தையில் கட்டுப்பாட்டினைக் கொண்டுவர முடியும். தனது அறிவுணர்வைப் பண்படுத்தி உயர்ந்த சிகரங்களுக்கு அதனை உயர்த்தி, உண்மை, இருப்பு ஆகியவற்றின் முழுத்தன்மையில், முழுமையான அறிவுணர்வனுபவத்தினில் நிலைகொள்ளவும் முடியும். படைப்பிலுள்ள மற்ற எல்லா இனங்களைவிடப் பிறப்பிலேயே அவன் பரிணாம வளர்ச்சியில் மிகஉயர்ந்தவன். விலங்குகள் தன்னைப்பற்றி அறியும் வல்லமை பெற்றவையல்ல. அவை உட்கிடக்கை (Instinct)களாலும், மனவுந்துதல்களாலும் ஆட்கொள்ளப்பட்டு அதன்படி நடக்கின்றன. மனிதன் அவ்வாறல்ல. அவன் மாறானவன். அவனுக்கு அறிவு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அவன் காரணகாரிய அறிவின் ஒளிகொண்டு தன் நடத்தையினைக் கொண்டு செலுத்த முடியும்.அவன் தனது கீழான மனவுந்துதல்களை அடக்க முடியும். தனதுசாதாரண இயல்பினை விஞ்சமுடியும். தன் நல்லியல்புகளைப் பேரியல்புகளாக மாற்றமுடியும். மனித இயல்பினைக் கடந்துசெல்ல வல்ல எல்லா விதத்திறமைகளும் அவனுள் உறைந்துள்ளன. அவற்றை வெளிப்படுத்திப் பரிபூரணத்துவத்துக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள முடியும். விலங்கிலிருந்து மனிதன், மனிதனிடமிருந்து தெய்வம் இதுவே பரிணாமத்தின் திட்டமாகும். பரிபூரணத்தின் தெய்வீக நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்வதென்பது, பற்பலபிறவிகள் கொண்ட மிக நீண்ட முயற்சியாக இருக்கலாம். ஆனால் மனிதன் என்று கூறிக்கொள்ளத் தகுந்தவாறு அடிப்படையான மனிதகுண மேம்பாடுகளிலாவது நிலைபெற்று அவற்றின்படி வாழுதல் நம்மால் இயலக்கூடிய ஒன்றாகும். நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல், நம்மிடம் மறைந்து கொண்டுள்ள, நமது பழைய பிறவிகளிலிருந்து நம்மைத் துரத்திக் கொண்டு வருகின்ற விலங்கு உணர்வுகளுக்கும் உந்துதல்களுக்கும் முழுச்சுதந்திரம் அளித்து, நமது இயல்பினை உயர்ந்ததாக்கவோ அதன் குற்றங்குறைகளை நோக்கவோ சிறிதும் முயற்சி செய்யாமல் இருந்தால், நமக்குக் கொடுக்கப்பட்ட மனித அந்தஸ்துக்கு நாம் சிறிதும் தகுதியற்றவராவோம், நாம் பரிணாமப் படிக்கட்டினில், மனிதன் என்று கூறிக்கொள்ளத்தக்க உரிமைகள் அனைத்தையும் நாம் விட்டுக்கொடுத்து, இழந்து விடுகிறோம்.
நமது நடத்தைக்கு வழிகாட்ட, நமது சாஸ்திரங்கள் செய்ய வேண்டியது எது? செய்யக்கூடாதெது என்பதை நிர்ணயித்து நீதிநெறி விதிகள் அமைந்துள்ளன. அவற்றிற்குத் தர்ம சாஸ்திரங்கள் என்று பெயராகும். இவற்றை மீறாமல், இவற்றின்படி நாம் நடந்தால், நாம் “மனிதர்’ என்ற பெயருக்குத்தகுதி உள்ளவராவோம். அப்போதுதான், பிரபஞ்சத்தை ஆதிக்கஞ் செலுத்துகின்ற நெறியான இயக்கச் சக்தியுடனுடனும்,கடவுளின் படைப்பிலுள்ள இசைவுடனும் நாம் ஒன்றிணைந்து இருப்போம்.
ஐம்பெருங் கொள்கைகள் அல்லது மனிதனுக்கான வாழ்க்கை மேம்பாடுகள்:
அறநெறிகளின் எல்லா விதிகளையும் அதாவது தர்மசாஸ்திரங்கள் அனைத்தையும் சுருக்கமான ஐந்து மேம்பாடுகளில் அடக்கிவிடலாம். அவை (1) சத்தியம் (வாய்மை), (ii) தர்மம் (அறம்) (iii)சாந்தி (அமைதி) (iv)பிரேமை (அன்பு)(v)அஹிம்ஸை (இன்னா செய்யாமை) என்ற ஐந்தினில் அடங்குபவையாகும். அறநெறிகள், நீதிநெறிகளனைத்தும் இந்தக் கோட்பாடுகளுக்குள் அடங்கும். உலகச்சமயங்கள் அனைத்திற்கும் இவையே அடித்தளத் தூண்களாகும். இவையே ஸ்ரீ சத்யசாயி தெய்வீகப்பணிக்கும் வாழ்க்கை முறைக்கும் தூண்களாகும். இவற்றை நாம் புரிந்து கொண்டு, இவற்றின் சாரத்தைக் கிரகித்து, இவற்றினை நமக்குள் பண்படுத்தி, அன்றாட வாழ்க்கையில் இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவந்து, நம்மை நாமே உயர்த்திக் கொள்வோம்.