இந்தியப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைப் பற்றியகண்ணோட்டம்
ஒருநாட்டு மக்கள் போற்றி வளர்த்துள்ள மதிப்பீடுகளையும் இலட்சியங்களையும் வேர்மூலமாகக் கொண்டு அவர்களது கலாசாரப் பழக்கவழக்கங்கள் அமைந்துள்ளன. எந்த மதிப்பீடுகளையும் இலட்சியங்களையும் மக்கள் மிக அருமையானதாக நினைத்து, அவற்றின்படி வாழ வேண்டுமென்று முயலுகிறார்களோ, அவையே அம்மக்களது பழக்கவழக்கங்களிலும், மனோபாவங்களிலும் பரிணமித்து வெளிப்படுகின்றன. அவையே அம்மக்களின் கலாசார மரபினைப் பிரதிபலிக்கின்றன. சரித்திர சம்பவங்களுங்கூட, ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அளவில் தமது முத்திரையைப் பதிக்கின்றன; நம் நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசியலிலும் பொருளாதாரத்திலும் பெருங்கொந்தளிப்புகள் ஏற்பட்டுள்ளன; இருப்பினும், அன்று போல இன்றும், கலாசாரத்தின் அடிப்படைப் பண்புகள் மாறாமல் வலிமையுடன் உயிரோட்டம் பெற்றுள்ளன. வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகளின் அனைத்தினின்றும் கலாச்சாரம் மீண்டுவந்துள்ளது; நாட்டின் ஆன்மீக உணர்வு சிறிதும் குறையவில்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நமது முன்னோர்களைப் பரவசப்படுத்தி புத்துணர்வூட்டிய ஆன்மீக தரிசனம் இன்னும் நம்முடன் உள்ளது. அதுவே நமது வாழ்க்கைக்கு உட்பொருளும், காரணமும் அளிக்கின்றது.
இந்தப் பரந்த உபகண்டத்தில், வாழ்க்கை முறைகள் இடத்துக்கு இடம் மாறலாம்; இருப்பினும், காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமரி வரையில் ஆன்மீகமே நம் நாட்டுக் கலாச்சாரத்தின் அடிப்படை பண்பாகும். எல்லையற்ற காலம் கடந்த பரம் பொருளைப் பற்றிய உள்ளுணர்வு நம் நாட்டிற்கு இயல்பான தொன்றாம். ‘இந்திய கலாசாரம் இதயத்தில் பிறந்ததாகும்’ என்று பாபா கூறுவார்; இறையன்பும், இறைவனால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்திடம் நாம் கொண்டுள்ள நேசமும், இந்தியக் கலாச்சாரத்திற்கு அடிப்படைப் பண்பாகும். இந்திய மரபின்படி, ஆன்மீக மதிப்பீடுகள் உலக சம்பந்தமான மதிப்புகள் அனைத்துக்கும் மேம்பட்டவையாகும். பௌதிக உலகம், பௌதிகத்தைக் கடந்த இறைவனுடன் சரியான முறையில் உறவுகொள்ளும் போதுதான் பரிபூரணமாகிறது. சத்தியத்தின் கண்ணோட்டம் தான் ஒவ்வொன்றுக்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பது நம் நாட்டின் கருத்தாகும். எல்லாவற்றுடனும் மனிதனுக்கு ஆன்மீக உறவுண்டு, எல்லா உயிர்களும் அடிப்படையில் ஒன்றே, பிரபஞ்ச வாழ்வு அனைத்துக்கும் அடிப்படை உணர்வு ஒன்றே, இறையுணர்வு எல்லோருக்கும் பொதுவானது ஆகிய இந்த நிரந்தர உண்மைகள், நம் கலாசாரத்தின் அடிப்படையாக அமைந்து அதனை வளர்த்து வந்துள்ளன. தவறுதலாக ஒருவர் உடலில் உன்கால் பட்டாற்கூட, அதற்கு நீ வணக்கம் செலுத்துவதேன் என்ற வினாவெழுப்பி, பாபா கூறுவார்: “கடவுள் எங்கும் உள்ளார் என்றும், எல்லாமே புனிதத்துவம் நிரம்பியவை என்றும் கொண்டுள்ள நமது பரம்பரையான திடநம்பிக்கையினால் தான் அவ்வாறு செய்கிறாய்.”
கலாசாரத்தை முழுமையாக வரையறுக்க இயலாது. டாக்டர் வி.கே. கோகக் ஒருவகையில் திறம்பட அதன் பொருள் கூறியுள்ளார். கலாசாரம் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் பரிபூரணத்தை நாடுவதேயாகும். அது தனிப்பட்ட மனிதன் மட்டுமல்ல சமூகத்தின் பழக்க வழக்கங்கள் மனோபாவங்கள் இவற்றை குறிக்கிறது. “கலாசாரம் என்பது, அறிவு, நம்பிக்கை, மரபு வழக்கங்கள், நீதிநெறி மதிப்பீடுகள், ஆன்மீக மதிப்பீடுகள் இவை அனைத்தும் கொண்டுள்ள முழுமையான ஒன்றாகும்” என்கிறார் கோகக். நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் எல்லா அம்சங்களையும் நம் கலாசாரம் தனக்குள் கொண்டுள்ளது.
தனக்கென்று ஒரு தனிப்பாணி இருந்தாலும், வெளிநாட்டுக் கலாசாரங்களின் அம்சங்களை நமது கலாசாரம் புறக்கணித்ததில்லை. இஸ்லாம், போர்த்துகல், பிரான்ஸ், இங்கிலாந்து இவற்றின் கலாச்சாரங்களின் சிறந்த அம்சங்களை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். நம்மிடமிருந்து வேறுபட்ட கலாச்சாரத்தையும் மதத்தையும், நம் மக்கள் என்றும் வெறுத்ததில்லை. எந்த மத வழிபாட்டையும் இந்திய நாடு தடுத்ததில்லை. அவரவர் மதத்தினை அவரவர் முறையினில் பின்பற்றவும், போதிக்கவும் இடங்கொடுத்து, அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது நம் கலாச்சாரப் பண்பு. பல்வேறு நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட யூதர்களாயினும் சரி, ஜாரதுஷ்டிரர்களாயினும் சரி, அவர்களனைவரும் நம் நாட்டில் புகலிடம் கொண்டனர். நமது கலாசாரம், அடிப்படையில் தனக்கென்று ஒரு பண்பினைக் கொண்டிருந்தாலும், மற்ற அம்சங்களிலும், வெளிப்படை நோக்கிலும் பல்வேறு கலாசாரங்களின் சாரமேயாகும்.
இவ்வாறு பற்பல கலாசாரங்கள் இணைந்து செயல்படுவதை, இந்திய நுண்கலைகள், இந்திய மொழிகள்,இந்திய மக்களின் மதச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் இவற்றில் காணலாம்.
இந்திய மக்களின் உணவு பழக்கங்களும், உடைப் பழக்கங்களும் நம் நாட்டின் பௌதிக அமைப்பினைச் சார்ந்துள்ளன. இந்தியா, உலகத்தின் ஏழாவது மிகப் பெரியநாடாகும். அது 32,87,782 சதுர மைல்கள் பரப்புள்ளது. அதன் கரையோரம், 6100 கிலோமிட்டர் நீளமுள்ளது. அதன் நிலப்பகுதி நன்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளாக அமைந்துள்ளது; வடக்கு, வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உயர்ந்த மலைப்பகுதி, கங்கை, சிந்துசமவெளி; பாலைவனப்பகுதி, தென் பகுதியிலுள்ள தீபகற்பம், இமாலயத்திலிருந்து வரும் நதிகள், தட்சிணநதிகள், கரைப்புறத்திலுள்ள நதிகள், நாட்டின் மையத்தில் செல்லும் நதிகள் இவையனைத்தும் முக்கிய நதிகளாகும். நம் நாட்டு சீதோஷ்ண நிலையிலும் பௌதிக அமைப்புகளிலும் உள்ள மாறுதல்கள் பற்பல. நம் நாட்டில் செழித்து வளரும் தாவர இனங்களும், பூவினங்களும் பல்வேறு வகைப்பட்டவை.
1978-ம் வருடம் மார்ச் மாதத்தில், இந்தியாவின் மக்கட்தொகை 63.83 கோடி. ஏறக்குறைய 83 சதவிகிதத்தினர் இந்துக்கள். மற்றவர், இஸ்லாம், சீக்கியமதம், புத்தமதம். ஜைன மதம், கிறிஸ்துவ மதம், ஜாரதுஷ்டிர மதம் இவற்றைப் பின்பற்றுகின்றனர். நம் நாட்டில் சில யூதர்களும் உண்டு. மக்கட்தொகுதியில் மிகச் சிறிய பகுதியினரே நகரங்களில் வசிக்கின்றனர். கிராமங்களில் வசிப்பவர் சுமார் 70 சதவிகித்தினர் ஆவர். ஆகையால் மக்களின் கலாச்சாரப் பழக்கவழக்கங்களை அறியுமுன் நம் நாட்டின் பௌதிக அமைப்பு, மக்கள் எங்கெங்கு வாழ்கின்றனர் என்பவற்றை மனதிலிருத்திக் கொள்ள வேண்டும்.