இளமைப்பருவம் :
நரேந்திரன் வலிமை மிக்க இளைஞனாக வளர்ந்தான். விளையாட்டு வீரனின் உடல்வாகும், இனிமையான குரல், மிகவும் கூர்மையான அறிவு இவையனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்திருந்தன. விளையாட்டு, தத்துவம், இசை இவற்றில் மிகச் சிறந்து விளங்கினான்; சக வகுப்பு மாணவர்களிடையிலும், நண்பர்களிடையிலும், ஒப்பற்ற தலைவனாக திகழ்ந்தான். கல்லூரியில் அவன் ஆராய்ந்து கற்ற மேனாட்டுக் கருத்துக்கள் அவன் மனதில் ஊறின ; அவற்றின் மூலம் எதனையும் சீர்தூக்கி அறியும் பாங்கு வலுப்பட்டது. ஆன்மீகத்திலுள்ள அவனது இயல்பான நாட்டம், தொன்மையான சமய மரபுகளிலும், நம்பிக்கைகளிலும் அவனுக்குள்ள மரியாதை இவை ஒரு புறத்திலும், தான் கண்ட கேட்ட அனைத்திற்கும் தெளிவான நிரூபணம் தேடிய அவனது பகுத்தறிவு மற்றொரு புறத்திலும் அவனை இழுக்க அவன் மனம் போராட்டத்தில் ஊசலாடியது. இவ்வாறாக அமைதியற்ற காலத்தில், பிரம்ம சமாஜம் அவனை ஈர்த்தது. நமது தொன்மையான தத்துவங்களிலும், சமய மரபுகளிலும், கிருஸ்துவ மதக் கொள்கைகளை உட்புகுத்தி, மேற்கத்திய அணுகுமுறையையும், ஆராய்ச்சிப் பாங்கினையும் செலுத்தி இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்வதே பிரம்ம சமாஜத்தின் இலட்சியம். அவ்வேளையில் சமூக சீர்திருத்த கொள்கைகளும், சமயக் கருத்துகளும் ஒன்றிணைந்த எல்லோரும் விரும்பிய இயக்கமாக பிரம்மசமாஜம் விளங்கியது. இறைவனை உருவமற்றவராக மட்டும் தியானிப்பதில் நம்பிக்கை கொண்டு, உருவ வழிபாட்டினைக் கண்டித்து, பிரம்ம சமாஜத்தினர் பல்வேறு வகைகளான சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட்டனர். பல புகழ்பெற்ற அறிஞர்கள் அக்காலத் இவ்வியக்கத்தில் சேர்ந்து, இதனை ஆதரித்தனர்.
விவேகானந்தரும் பிரம்ம சமாஜத்தின் கொள்கையினை புரிந்துகொள்ள தீவிர முயற்சி செய்தார். ஆகவே அதனை ஆராய்ந்து வருகையில் உயிரோட்டம் கொண்ட ஏதோ ஒரு அம்சம் அதனில் இல்லை என்றும் உணர்ந்து சரியாகப் புரிந்து கொள்ள ஆர்வத்துடன் பிரம்ம சமாஜம் தலைவர்களிடமும் அறிஞர்களிடமும் கேள்விகள் கேட்டார்; யாவரும் இவரது கேள்விகளுக்கு முக்கியமாக கடவுள் இருக்கிறாரா? அவரை உணர்ந்துள்ளனரா ? என்ற கேள்விக்கு நிறைவு காணும் வகையில் விடையளிக்க இயலவில்லை. இது அவரது ஆன்மீக ஏக்கத்தை அதிகப்படுத்தியது.