முகவரை
19ம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கத்திய நாகரீகம் என்ற சூறாவளிக் காற்று, நம் நாட்டின் சமயப் பழக்கவழக்கங்களைத் தரைமட்டமாகியது. வேதாந்த விளக்கு அணையுந்தருவாயிலிருந்தது. அச்சமயத்தில்தான் ராமகிருஷ்ணர் எண்ணையை நிரப்பி, திரியைச் சீர் செய்தார். மேற்கத்திய நாகரீகத்தின் பகட்டும், பொருளாதார முன்னேற்றமும் இந்திய மக்களுக்கு பிரமையூட்டியது. நமது மரபுகளிலும் நம்பிக்கைகளிலும் மக்களுக்கிருந்த சிரத்தை ஆட்டங்கண்டது ; அவர்களின் தன்னம்பிக்கை மிகவும் குறைந்தது. இந்து மதம் பொருளற்ற மூட நம்பிக்கைகள் நிறைந்தது என்று மக்கள் எண்ணவும் நம்பவும் தொடங்கினார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ராமகிருஷ்ணர் தோன்றி, இந்துமதமென்ற கரி சூழ்ந்த விளக்கினைத் துலக்கி, எண்ணெய் நிரப்பி, திரியைச் சீர் செய்து, ஆன்மீக சோதியின் நிலையாக விளங்கச் செய்தார். நாடு முழுவதும் கப்பியிருந்த காரிருளை விலக்கி, அச்சோதி தட்சினேஸ்வரத்திலிருந்து வெளிக் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமல்ல, மனிதகுலம் முழுதும் பயனடைய மற்ற நாடுகளுக்கும் இச்சோதியினைக் கொண்டு செல்ல வேண்டும் என்று சான்றோர் பலர் உணர்ந்தனர்.
இத்தகைய மாபெரும் பணியினைச் செய்ய ஆற்றல் மிகுந்த ஒருவர் தேவைப்பட்டார். அவரே, நரேந்திரநாதர் என்ற திருநாமம் கொண்டு, பாரெங்கும் விவேகானந்தர் என்ற பெயரில் புகழ் பெற்ற, ராமகிருஷ்ணரின் முக்கியச் சீடராவர். ஸ்ரீராமகிருஷ்ணரின் அனுபவத்தின் மூலம் உணரப்பட்ட வேதாந்தத்தின் அடிப்படை உண்மைகளைப் பரப்பியவர் அவரே, தொன்மை வாய்ந்த வேதாந்த உண்மை, ராமகிருஷ்ணரின் தன்னிகரற்ற ஆன்மிக அடிப்படையில் தற்கால வாழ்வுக்குத் தக்கவாறு விளக்கப்பட்டால், அந்த விளக்கம் நமது மக்களைத் துன்புறுத்தும் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காண உதவும் என்று நம் நாட்டு மக்களுக்கு வலியுறுத்தினார். நாடு முழுவதும் மறுமலர்ச்சி பெற்று, உலக மக்களுக்குத் தேவையான நல்லுபதேசங்களை நல்கும் என்று கூறி வந்தார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வேதாந்த உண்மைகளைப் பற்றிச் சொற்பொழிவாற்றி வந்தார்; அதே சமயம் நம் நாட்டு மக்களிடமும் இந்த உண்மைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று மிகுந்த உணர்ச்சியுடன் வற்பறுத்தி வந்தார், மதம் என்பது பேருண்மையினைப் பற்றிய நம்பிக்கை மட்டுமல்ல, அதனை அடையும் வழிகளை வாழ்க்கை நடை முறையில் கடைபிடித்து, அதன்படி பேருண்மையின் அனுபவத்தைப் பெறுதலுமாகும் என்பதை அடிக்கடிக் கூறி வந்தார். மதம் என்பது இறைவனுடன் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கை நெறியாகும்.
வறுமையில் வாடும் ஏழை மக்களின் துன்பத்தை நீக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே வேதாந்தத்தின் நடைமுறைத்துவம் என்பதை விளக்கி வந்தார். இந்தியாவின் ஆன்மீகக் கலாசாரமும், மேற்கத்திய நாடுகளின் கருத்துச் சுதந்திரம், சுமூக நீதி, பண்பாடு ஆகியவையும் ஒன்றினைந்த சமுதாயமே, இலட்சிய சமுதாயம் என்பது விவேகானந்தர் கருத்து, ஆன்மிகப் பணிகளும் சமூகப்பணிகளும் செய்து இந்த இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, இந்தியாவில் ராமகிருஷ்ண மிஷினை நிறுவினார். துவக்கத்திலிருந்தே ராமகிருஷ்ண மிஷன் மக்கள் தொண்டில் மிகச்சிறந்து விளங்கியது. வேதாந்தம் எல்லோருக்கும் உகந்த, எல்லோருக்கும் பொதுவான, எல்லோரையும் உயர்நிலைக்கு இட்டுச் செல்கின்ற தத்துவத்தையும் வாழ்க்கை முறையையும் கொண்டது என்பதை உபதேசித்ததுடன் கூட, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய பல நாடுகளில் வேதாந்த மையங்களையும் நிறுவினார். இந்தியாவின் தவப்புதல்வர்களில் சிறந்தவர்களில் ஒருவரான விவேகானந்தர், இந்தியப் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.