வாணவேடிக்கைகள்: வாண வேடிக்கைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை தான். வாண வேடிக்கை பற்றி அறிந்து கொண்டிராத ஆப்பிரிக்கக் குழந்தைகள் எவரும் மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கைகளுக்காக ஏங்குவதையோ அவைகளை அனுபவித்து மகிழ்வதையோ நான் பார்த்ததில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் நடனங்களைப் பார்ப்பதிலும், ஆடுவதிலும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். வாண வேடிக்கைகளுக்கு செலவிடப்படும் பணத்தை, முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு பகுதியையாவது ஏழைமக்களுக்கு உதவும் பணிகளுக்குச் செலவிட வேண்டும் என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
விடுமுறை நாட்களில்: விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு உடல் உழைப்பின் மதிப்பைப் புரிய வைப்பது நலம் தரும். குழந்தைகளுக்கு வீட்டைச் சுத்தம் செய்யவும் சுவர்களுக்கு வர்ணமடிக்கவும் பயிற்சி தரலாம். விடுமுறை நாட்களில், நாட்டில் உள்ள ஏழைகளின் நலத்திற்கான பணிகளில், தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை விட பெரிய மகிழ்ச்சி இருக்க முடியாது. விளையாட்டுக்களும், சுற்றுலாக்களும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரமுடியும். ஆனால், சுற்றுலாவிற்கு செல்லும்போது கடைகளில் விற்கப்படும் தரமற்ற தின்பண்டங்களுக்குப் பதிலாக புதிய பழங்களையும், உலர்ந்த பழங்களையும் பயன்படுத்துவது நல்லது.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு முக்கியமான தேர்வு செய்ய வேண்டியுள்ளது. தர்மம் என்பது ஒன்று. இன்பம் என்பது ஒன்று. இவ்விரண்டும் வெவ்வேறு இலக்குகளைக் கொண்டு மனிதனுடைய மனதை ஈர்க்க முற்படுகின்றன. இவை இரண்டில் தர்மத்தைப் பற்றிக் கொண்டவன் நலம் பெறுகிறான். இன்பத்தைத் தேர்ந்தெடுப்பவன் வாழ்வின் பயனை இழந்து விடுகிறான். தர்மம், தற்காலிகமான இன்பம் என்ற இரண்டும் மனிதனின் முன்வரும்போது அறிவாளி இன்பத்தை ஒதுக்கி, தர்மத்தை மேற்கொள்கிறான். முட்டாள்கள் மட்டுமே உலக லாபத்துக்காக இன்பத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். “நசிகேதா! நீ இவ்விரண்டையும் சீர்தூக்கி பார்த்துவிட்டு இன்பம் தரும் அல்லது இன்பம் தருவது போல காணப்படுபவற்றை மறுத்து விட்டாய். செல்வத்தைத் தரும் பாதையை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை. அதனைத் தேர்ந்தெடுத்த பல மனிதர்கள் அழிவைச் சந்தித்துள்ளனர்”- கதோபநிஷதம்.
உண்மையான நல்லது எது?
ஆழ்ந்த யோசனையுடன் நான் கேட்டேன்.
ஒழுங்கு என்றது நீதிமன்றம்.
அறிவு என்றது கல்விக்கூடம்.
சத்யம் என்றான் அறிவாளி.
இன்பம் என்றான் மூடன்.
அழகு என்றான் இளம் சேவகன்.
சுதந்திரம் என்றான் கனவு காண்பவன்.
புகழ் என்றான் போர்வீரன்.
சமத்துவம் என்றான் சாது.
மிகுந்த துயருடன் என் இதயம் சொல்லியது:
சரியான விடை இவை இல்லை.
அதன்பின் என் இதயத்தின் ஆழத்திலிருந்து ஒலித்தது மென்மையாக :
“ஒவ்வொரு இதயத்திற்கு மட்டுமே தெரியும் அந்த ரகசியம் கருணை என்பதாகும்”- ஜான் பாயில் ஓ’ ரெய்-.
ஆசைகள் தவறானவை என்று நம் எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. ஆனால் ஆசைகளைத் துறப்பது என்றால் என்ன? வாழ்க்கைப் பயணம் எப்படித் தொடரும்? ஆசையை விட்டுவிடுதல் என்பதற்கு சொத்து சேர்க்கக் கூடாது; உனக்குத் தேவையானவற்றை வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொருளல்ல. ஆடம்பரப் பொருள்களை வைத்துக் கொள்ள கூடாது என்று கூட அர்த்தமல்ல. உனக்கு என்ன வேண்டுமோ ஏன் அதற்கு மேலும் கூட வைத்துக் கொள். ஆனால் ஒரு உண்மையைத் தெரிந்து கொள். நன்றாக உணர்ந்து கொள். செல்வங்கள் எவருக்கும் சொந்தமல்ல. எதையும் உனக்கு சொந்தமானது என்றோ உனக்கே உரிமையானது என்றோ நினைக்காதே. எல்லாம் இறைவன் ஒருவருக்கே உரிமையானவையாகும்- விவேகானந்தர்.
தோல்விகள்: மனதை உயர்ந்த எண்ணங்களால் நிரப்பிக் கொண்டு, அவற்றை ஒவ்வொரு நாளும் கேட்கவேண்டும். மாதந்தோறும் நினைக்க வேண்டும். தோல்விகளைப் பற்றி கவலைப்படவேண்டாம். தோல்விகள் வாழ்க்கையில் இயல்பானவை. ஒருவிதத்தில் தோல்விகள் வாழ்க்கையில் அழகு என்றே சொல்லலாம். ஏனெனில் தோல்விகளே இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும். போராடாமல் ஒன்றை எளிதாகப் பெற்றுவிடுவது. அதற்கு மதிப்பு இருப்பதில்லை. தோல்விகள் இல்லாதபோது வாழ்க்கைக்கு கலைநயமும் கவிதைச்சுவையும் ஏது?
தன் பணியில் சிறப்புற, ஒவ்வொரு மனிதனும் நான்கு பண்புகளை நடைமுறைப்படுத்தவேண்டும். குழப்பம் இன்றி, தெளிவாக சிந்தித்தல், சக மனிதர்களை உண்மையாக நேசித்தல். தூய, நேர்மையான நோக்கத்துடன் செயல்படுதல். வானுறையும் தெய்வத்திடம் திட நம்பிக்கை கொள்ளுதல்.
வார்த்தையை எவ்வளவு அழுத்தமாக சொல்ல முடியுமோ, அதுபோல பேசுகின்ற தொனியின் ஏற்ற இறக்கத்தால் அங்க அசைவினால் கூட சொல்லமுடியும். ஆனால் அப்படிச் சொல்வதால் அவன் நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை. ஒருபோதும் இல்லை. நீங்கள் அவனுடைய மதிநுட்பத்தை, அவனது கணிக்கும் தன்மை, பெருமை, அவனது சுயகௌரவம் ஆகியவற்றை நேரடியாக தாக்கி விட்டீர்கள். ஒரு வாக்குவாதத்திலிருந்து நல்ல பயனைப் பெறுவதற்கான ஒரே வழிதான் உள்ளது. அது விவாதத்தை தவிர்ப்பதேயாகும்.