ஐந்து நியதிகள்
முன்னுரை
இன்றைய கல்வி புறவுலகம் சார்ந்த செய்திகளைச் சேகரிக்க உதவும் சாதனமாகவும், பணத்தைச் சம்பாதிப்பதற்குரிய அறிவையும் திறமைகளையும் வளர்ப்பதாகவும் அமைந்துள்ளது. ஆனால் உண்மையான கல்வி என்பது மனிதன் புனிதனாக வாழ்வதற்குத் தேவையான பண்புகளை கற்றுத் தருவதாகும். கல்வியின் நோக்கம் ஒழுக்கம். ஒழுக்கத்தைக் கற்றுத் தராத கல்வியால் வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன் ஏதுமில்லை.
மனிதனின் உள்ளுறையும் சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை என்கின்ற பஞ்ச பண்புகளை நற்செயல்களாக நடைமுறைப்படுத்துவதே விழுப்பம் (மேன்மை) தரக்கூடிய விழுக்கல்வி ஆகும். மனிதன் தனது வாழ்க்கையின் குறிக்கோளான தெய்வீகத்தை உணருவதற்கு சுயநலமும் பேராசையும் தடையாக உள்ளன. ஒவ்வொரு மனிதனும் உயர்மனமாற்றம் அவசியம் என்று புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்கின்ற மனப்பான்மையைப் பெற முயற்சிக்க வேண்டும். இந்த முயற்சியில் ஒருவர் வெற்றி பெற ஐந்து நியதிகளை (Five Ds)க் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்.
ஐந்து நியதிகள் (Five Ds)
- Duty – கடமை
- Devotion – பக்தி
- Discipline – ஒழுங்கு
- Discrimination – பகுத்தறிவு
- Determination – மனஉறுதி
முதல் எழுத்து D-யில் தொடங்குவதால், 5Ds என்று அழைக்கின்றோம்.
-
- Duty – கடமை
கடமை என்பது நம் உள்ளே உள்ள நற்குணங்களை வெளிப்படுத்தி, நடைமுறையில் செயல்படுவதே ஆகும். ஒவ்வொருவருக்கும் தலையாய கடமை உள்ளது. அது தன்னை இந்த உலகிற்கு ஈன்ற பெற்றோரை மதித்து நடந்து, பரிவு காட்டி, அவர்களது முதிர்ந்த பருவத்தில் பேணிக்காத்து மனம் கோணாமல் நடந்து கொள்வது.
தாய் தந்தையை மதிக்காத புண்டரீகன் பின்னர் தன் தவறினை உணர்ந்து, மனம் வருந்தி திருந்தினான். அவர்களைக் கண்போல் காத்துப் பணிவிடை செய்யும் காலத்தில் பகவான் பாண்டுரங்கன், புண்டரீகன் இருக்கும் இடம் தேடி வருகிறார். ஆனால் புண்டரீகன் கடவுளை விட தன்னை ஈன்றவரே முதலில் போற்றத்தக்கவரென நினைத்தான். ஆதலால் ஒரு செங்கலை நகர்த்தி பாண்டுரங்கனை அதன் மீது நிற்கச்சொல்லி, காத்திருக்குமாறு செய்து, தாய் தந்தைக்குப் பணிவிடை செய்கிறான். பாண்டுரங்கனும் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அந்தப் புண்டரீகனுக்காகப் புன்முறுவலுடன் காத்து நிற்கிறார். இங்கு கடமை கடவுளால் ரசிக்கப்படுகிறது; பாராட்டப்படுகிறது. கடமையைச் செய்வது கடவுளை ஆராதிப்பதிற்குச் சமம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஏனெனில் புண்டரீகன் தன் புனிதமான கடமையை செய்யும் போது அங்கு கடவுள் அழைக்காமலேயே வந்துவிட்டார்.
வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு கடமைகள் வருகின்றன. சிறுவனின் கடமை, மாணவனின் கடமை, பெற்றோரின் கடமை என்று பல கடமைகள் உள்ளன. எல்லோருக்கும் அவரவரது கடமைகளைப் பற்றித் தெரியும். அந்தக் கடமைகளைச் சரிவர செயல்தான், வாழ்வு செம்மையுறும். சமூகம் பலனடையும்.
ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்துக்குக் கடமை பட்டிருக்கிறோம். நாம் செய்யும் எந்தச் செயலும் சமூகத்திற்குப் பாதிப்பாக இருக்கக்கூடாது. உதாரணமாக, ஒரு பையில் இருக்கும் பொருளை எடுத்துக் கொண்டபின், அந்தப் பையனைக் காற்றில் பறக்க விடுவது தவறாகும். நமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது நம் கடமை. அடுத்தவரின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மதித்து நடப்பது நம் கடமை. இப்படி தனிமனிதனுக்கு இருக்கும் கடமைகளைக் கருத்தோடு ஆற்றி, தானும், தன்னைச் சுற்றியுள்ள சமுதாயமும், நாடும் சிறப்புறச் செய்து மகிழ்வதே இன்பம்.
சமுதாயத்திற்கு ஒருவன் ஆற்ற வேண்டிய கடமை பற்றிய விழிப்புணர்வு இன்று சுயநல நோக்கினாள் குறைந்து வருகிறது. சாந்தோக்கய உபநிஷத்தை உலகிற்கு தந்த அருணி, குருகுலத்தில் தௌமய்ய ரிஷியிடம் பயின்று கொண்டிருந்தான். ஒரு சமயம் பெரும் மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டது. தனது மாணவர்களை “விரைந்து சென்று அணையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து தண்ணீர் பெருக்கைக் கட்டுப்படுத்த செல்லுங்கள்” என்று கூறிவிட்டு, தௌம்யர் , கிராம மக்களை உதவிக்கு அழைக்கச் சென்றார்.
மாணவர்கள் உயிருக்கு ஆபத்த் தென்று பயந்தனர். ஆனால் அருணி அணைக்கட்டு சென்றான். தண்ணீர் ஓட்டையின் வழியாக சீறிப் பாய்ந்து வருவதை கண்டு பிடித்தான். ஓட்டையை எதை வைத்து அடைத்த போதும் வெள்ளத்தின் வேகத்திற்கு அடைப்பு ஈடு கொடுக்கவில்லை. அந்தஓட்டையை அடைப்பதற்கு தானே தன் உடலை அந்த இடத்தில் அழுத்தி கொண்டு படுத்துகொண்டான். உடல் குளிரில் விரைக்க சிறிதும் நகராமல் ஊரை காப்பாற்றுவதற்காக படுத்திருந்து மயக்கமடைந்தான். பின்னர் குருவும் மற்றவர்களும் வந்து அவனைக் காப்பாற்றினார்கள். அவனது கடமை உணர்ச்சியைக்கண்டு குரு மிகுந்த சந்தோஷமடைந்து அவனை பாராட்டி ஆசிர்வதித்தார்.
-
- Devotion – பக்தி
தன்னுள்ளிருக்கும் தெய்வீகத்தை பற்றிய இடையறாத முழுமையான பேருணர்வை (constant intergrated awarness )ப் பெறுவதே மனித வாழ்க்கையின் நோக்கம். அதைப் பெறுவதற்கு உயர் மன மாற்றம் அவசியம். இறைவனுடன் நமது உறவினைப் புதுப்பித்துக் கொள்வதே இதன் முதல்படி பெற்ற தாயிடம் நாம் கொள்ளும் அன்பு, பாசம் ஆகும். இறைவனிடம் நாம் கொள்ளும் அன்பு, பக்தி ஆகும். வானத்தில் பறக்கும் விமானதில் உள்ள விமானி கீழிருந்து பார்க்கும்போது கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் விமானி இல்லாமல் விமானம் பறப்பதில்லை.
பிரபஞ்சத்தைப் படைத்து, இயக்கி, காத்து வருகின்ற பேரற்றலையே இறைவன் என்கிறோம். இந்த எல்லையற்ற பேராற்றல் பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது. இந்த பேராற்றல் மனிதனுள் உயர் குணநலன்களாக, மேம்பாடுகளாக ஆக உறைந்துள்ளது.
சாலையில் விபத்து, தலையில் அடிபட்டு ரத்தம் ஆறாகப் பெருக ஒருவர் விழுந்து கிடக்கிறார். பலரும் தத்தம் வேலைகளே முக்கியம் என்று கடந்து சென்று விடுகிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் அதைக்கண்டு மனம் பதைபதைத்து ஓர் ஆட்டோவை கூப்பிட்டு அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் அவரைச் சேர்க்கிறார். அவரை பரிசோதித்து ஆவன செய்தபின் டாக்டர் வெளியில் வருகிறார். இதற்குள் அடிப்பட்டவரின் குடும்பத்தார் வந்துவிட்டனர். “பின் தலையில் பலத்த அடி. 10, 15 நிமிடங்கள் தாமதித்திருந்தால் உயிருக்கு ஆபத்தாகியிருக்கும்” என்று கூறிவிட்டு, இவர்தான் மருத்துவமனை அடிபட்டவரை அழைத்து வந்தவர் என்று காட்டுகிறார். அப்போது அடிபட்டவரின் மனைவி அல்லது பெற்றோர் என்ன சொல்வார்கள்? “ரொம்ப நன்றி ஐயா. கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள்” என்று தானே? சுயநலம் இல்லாமை, அன்பு, கருணை இவற்றின் வடிவமே கடவுள். நம்முள் இருக்கும் இந்த நற்குணங்களை நற்செயலாக வெளிப்படுத்துவதே நாம் தெய்வீகத்தை அடையும் வழி .
-
- Discipline – ஓழுங்கு
Discipline என்ற சொல்லுக்கு, கட்டுப்பாடு, ஒழுங்கு, நன்னடத்தை,
சுயகட்டுப்பாடு, விதிகளுக்குப் பணிதல் என்று பொருள்.
நல்ல எண்ணம் என்ற விதையை விதைத்து ,
நற்செயல் என்ற விளைச்சலை பெற்றிடு.
நற்செயல் என்ற விதையை விதைத்து,
நல்ல பழக்கம் என்ற விளைச்சலைப் பெற்றிடு.
நல்ல பழக்கம் என்ற விதையை விதைத்து,
நல்லொழுக்கம் என்ற விளைச்சலைப் பெற்றிடு.
நல்லொழுக்கம் என்ற விதையை விதைத்து,
நல் விதி என்ற விளைச்சலைப் பெற்றிடு.
ஒழுங்கிற்கு பகவான் இயற்கையை உதாரணமாகக் காட்டுகிறார். சூரிய உதயம், கோள்களின் இயக்கம், பருவகாலங்கள். இவையாவும் ஒரு கட்டுப்பாடுடன் இயங்குகின்றன. அணுவிற்குள் அமைந்துள்ள கூறுகள் கூட பின்பற்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் மனிதர்கள் தான் ஒழுங்கு விதிகளைத் தங்கள் சுதந்திரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் தடை என்று நினைக்கிறார்கள். விதிகளும் கட்டுப்பாடுகளும் நமக்கு நன்மையே புரிகின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பணம், பொருள், காலம், சக்தி எல்லாவற்றையுமே கட்டுப்பாடுடன் செலவழிக்க வேண்டும். அவசியமில்லாமல் குழாயைத் திறந்து நீரை வீணாக்குவது, தேவையில்லாமல் மின்விசிறிகளை ஓடச் செய்வது, காலத்தை அனாவசிய அரட்டைகளில் செலவழிப்பது என்பதெல்லாம் கட்டுப்பாடற்ற செயல்கள். “எய்த அம்பு, பேசிய சொல் இவற்றைத் திரும்பப் பெற முடியாது” என்பது நினைவில் கொள்ளவேண்டிய பொன்மொழி.
ஒழுக்கம் விழுப்பம் (மேன்மை) தரும். இதற்கு உதாரணமாக ஆபிரகாம் லிங்கன் அவர்களைக் கூறலாம். பள்ளிப்பருவ நாட்களிலிருந்தே ஆபிரகாம் லிங்கன் புத்தகங்களை படிப்பதில் மிக ஆர்வம் உடையவராக இருந்தார். அவரது தந்தைக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வசதி இல்லை. லிங்கன் மிகவும் நேர்மையானவர். நல்ல உழைப்பாளி என்பதால் அவருக்கு நண்பர்கள், உறவினர்களிடத்தில் நன்மதிப்பிருந்தது. அவர்களே அவருக்குப் புத்தகங்களை வாங்கித் தருவார்கள். அவரும் படித்துவிட்டு பத்திரமாக திரும்ப கொடுத்து விடுவார்.
ஒருமுறை அவர் ‘ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தை ஒரு நண்பரிடமிருந்து படிப்பதற்காக பெற்றுக்கொண்டார். இரவு வெகுநேரம் வரை படித்துவிட்டு வீட்டுக் கூரையின் இரு கட்டைகளுக்கு இடையில் சொருகி வைத்துவிட்டு தூங்கினார். அன்று பனி பெய்து புத்தகத்தின் அட்டையை நனைத்துப் பாழ்படுத்தி விட்டது. நேர்மையாக உண்மையாக இருப்பதை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டு விட்டு அவர் புத்தகத்தை கொடுத்த நண்பரிடம் சென்று உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்டதுடன் அந்தப் புத்தகத்தின் விலைக்கு ஈடாக அவரது வயலில் மூன்று நாட்களுக்கு வேலை செய்வதாகக் கூறினார். சொல்லியபடி மூன்று நாட்கள் காலை முதல் மாலை வரை அயராது வேலை செய்தார். அவரது நேர்மை நண்பரது நெஞ்சத்தைத் தொட்டது. அந்த நண்பர் அந்தப் புத்தகத்தை லிங்கனுக்கு பரிசாக அளித்து விட்டார். இந்த நல்லொழுக்கம் அவரது விதியை நிர்ணயித்தது. ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கையை படித்துவிட்டு அவரைப்போலவே ஜனாதிபதியாக ஆசைப்பட்ட லிங்கன், அமெரிக்க ஜனாதிபதியாகாவே ஆனார்.
-
- Discrimination – பகுத்தறிவு
பகுத்தறிவு என்பது எது சரி எது தவறு; எது தர்மம், எது அதர்மம் என்று பகுத்து (பிரித்து)த் தீயதை ஒதுக்கி நல்லதை ஏற்கின்ற திறன். மனிதனுக்கு பகுத்தறியும் திறன் இருக்கிறது என்றாலும் உலகில் நம்மை சுற்றி நாம் பார்ப்பவை என்ன? எத்தனைதீமைகள்! எத்தனை கொடுமைகள்!! பகுத்தறிவை விவேகம் எனவும் அழைப்பர். விவேகம் இரண்டு நிலைகளில் செயல்படுவதைப் பார்க்கிறோம். ஒன்று தற்சார்ந்த விவேகம் இராண்டாவது அடிப்படை விவேகம்.
தனக்கு நல்லது, தன்னைச் சார்ந்தவர்களுக்கு லாபமானது என்று தன்னலத்தை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவது முதல் வகை. சுயநலத்துக்காக எதையும் செய்யலாம் என்ற நிலைகக்கு வந்த மனிதனை, சட்டத்தின் முன்போ, மனசாட்சியின் மன்றத்திலோ கைகட்டி வாய் பேசமுடியாமல் இது நிற்க வைத்து விடுகிறது.
அடிப்படையில் விவேகம் எல்லோருக்கும் எது நல்லது. எது சரியானது என்று பொதுநலத்தின் அடிப்படையில் செயல்பட்டு மனிதனை அவனைத் தெய்வீகதுக்கு அழைத்துச் செல்கிறது. ராமாயணத்தில் விபீஷணனையும் கும்பகர்ணனையும் ஒப்பிட்டு நோக்குவோம்.
ராவணன் தவறு செய்துவிட்டான் என்பதை விபீஷணன் பகுத்தறிந்து அவனை விடுத்து ராமனின் தெய்வீகத்தைச் சரணடைகிறான். கும்பகர்ணணோ நன்றிக்கடன் என்றும் சகோதர பாசம் என்றும் அறிவு மயங்கி, தவறு என்று தெரிந்திருந்தும் ராவணனுடனேயே இருந்து இறுதியில் மரணமடைகிறான்.
மகாபாரதத்தில் துரியோதனன் சுயநலத்தாலும் மண்ணாசையாலும் விவேகத்தை இழக்கின்றான். அவனிடத்தில் பேராசை, பொறாமை, வெறுப்பு, கர்வம், வஞ்சம், கயமை என்று பல தீய குணங்களை வருவித்து அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறது. மகாபாரதம் முழுவதுமே துரியோதனனின் விவேகமின்மையை சுற்றியே செல்கிறது.
துரியோதனன் அவிவேகத்தின் உருவாகவும் அதனால் ஏற்படும் தீமைகளுக்கு உதாரணமாகவும் இருக்கிறான். இறைவன் நமக்களித்த பகுத்தறிவை பயன்படுத்தித் தீயதை விலக்கி நல்லதை பின்பற்றினால் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெற முடியும்.
இந்த விவேகம், ஆத்மசாதனையில் வேறுவிதமாகச் செயல்பட வேண்டும். நிலையற்றது எது நிலையானது எது என்று சீர்தூக்கி அறிதலே ஒருவருக்கு ஞானத்தை கொடுக்கும்.
மனதையும் புலன்களையும் அவற்றின் போக்கில் விட்டு ஆடம்பரமாக வாழ்ந்தால் துயரமும் நிம்மதியின்மையுமே மிஞ்சும். எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை (Simple Living High Thinking) என்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அப்படி நாம் வாழ்ந்து வழி காட்டவில்லை என்றால் நமது குழந்தைகளும் துன்பங்களை எதிர் கொள்ளவும், தோல்விகளை வெற்றி கொள்ளவும் முடியாத கோழைளாகத்தான் வளருவார்கள். வசதியாக வளமாக வாழ வேண்டும். அதற்காக எப்படியாவது சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பகவான் பாபா பணத்தைச் செருப்புக்கு ஒப்பிடுகிறார். சற்றுப் பெரிதாகவும் சிறியதாகவும் இருந்தால் கஷ்டம்தான். சரியான அளவாக இருந்தால் மட்டுமே நன்றாக நடக்க உதவும் அதைப் போலவே பணமும் தேவையான அளவு உள்ள போது மட்டுமே நலம் தரும். அந்த தேவையான அளவு என்பதை பிறர் நலத்தை சுரண்டாத நிலை என்று கொள்ள வேண்டும்.
-
- Determination – மனஉறுதி
நல்ல செயல்கள் நல்ல பழக்கங்களாக மாற மன உறுதி தேவை. தினசரி வாழ்க்கையில் மன உறுதி இல்லாமல் எதைச் செய்து முடிக்க முடியும்? ஒரு சாதாரண தேர்வுக்குப் படிப்பதிலிருந்து எந்த சாதனையானாலும் மன உறுதி தேவை. இந்த மன உறுதி தளர்வது எதனால்? துன்பம், தோல்வி, எதிர்ப்பு, ஏளனம் இவற்றைக் கண்டு ஏற்படும் பயத்தினால் உறுதி தளர்கிறது.
தடைகள் வெற்றிப்படிகள் என்று கருத வேண்டும். புகழ்பெற்ற விஞ்ஞானிகளும், விளையாட்டு வீரர்களும் துன்பமும் தடைகளும் இல்லாமலா சாதனை படைக்கிறார்கள்? எடுத்துக்கொண்ட இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற தீவிர மனவுறுதியே அவர்களைச் சாதனை படைக்கச் செய்கிறது. புராணங்களில் தளராத மன உறுதிக்கு பகீரதன் சிறந்த உதாரணம். கங்கையை மண்ணுலகில் இருந்து கொண்டுவர எத்தனை தடைகள்?
லூயி பாஸ்டர் (Louis Paster) என்ற விஞ்ஞானி, rabies என்கின்ற நாய்க்கடி நோய்க்கு, தடுப்பு மருந்து (vaccine) கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பொழுது நாய்களின் உமிழ்நீரை (saliva) சேகரிக்க வேண்டி இருந்தது. அவரது உறவினர்கள் அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைத்தனர். அதுமட்டுமல்ல, ஆராய்ச்சிகளின் முக்கியமான கட்டத்தில் அவரது இரண்டு மகள்கள் டைபாய்டு காய்ச்சலில் இறந்து போனார்கள். அவர் உடல் நலம் குன்றி அவரது இடது கையும் இடது காலும் செயலிழந்தன. ஆனால் அவர் மன உறுதியை மட்டும் இழக்கவில்லை. தன் இலக்கை நோக்கிய பயணத்தைச் சற்றும் கலங்காமல் தொடர்ந்தார். இதுபோல் எடிசன் , மேரி க்யூரி என்று பலரைச் சொல்லலாம்.
மனவுறுதியின் மற்றொரு பரிமாணம், தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதாகும். மாணவராக இருந்த காலத்தில் டாக்டர் அப்துல் கலாம் Science Express என்ற இதழுக்கு அளித்த பேட்டி இங்கு குறிப்பிடத்தக்கது. மாணவராக இருந்த காலத்தில், கலாம் விமானப்படை விமானியாக (Air Force Pilot) விரும்பினார். இந்தப் பயிற்சிக்கான நேர்முகத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை . மனம் தளர்ந்து டேராடூன் (உ. பி) னிலிருந்து ரிஷிகேஷிற்க்கு சென்றார். அங்கு ஸ்வாமி சிவானந்தாவைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிட்டியது.
சுவாமி சிவானந்தா கூறினார்: “ உனக்கு வேறு பாதை வகுக்க பட்டிருக்கிறது. அதனால் இந்த தோல்வியை மறந்து விடு. நீ செல்கின்ற பாதை எதுவானாலும் அதிலும் விருப்பத்தையும் திறனையும் செலுத்து”. கலாம் வேறு பாதையத் (ஏவுகணைத் தொழில் நுட்பத்தை) தேர்ந்தெடுத்தார். தன் முழுத் திறமையையும் அதில் காட்டி உறுதியுடன் முன்னேறினார். வேறு பாதையில் என் முழு விருப்பத்தையும் செலுத்துவேன் என்று அப்துல் கலாம் எண்ணியது விவேகம். எந்த வேலையானாலும் சாதனை படைப்பேன் என்று எண்ணியது மன உறுதி. இவை இரண்டும் இணைந்ததால், இந்திய நாட்டின் முதல் குடிமகனாகவும் (President of India). ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை (Father Of Missile Technology) யாகவும் உயர்ந்தார்.
நிறைவுரை
அகங்காரம் இல்லாத கடமை ஆற்றுவதில் உன்னை முழுமனதுடன் ஈடுபடுத்திக்கொள். அது உண்மையான பக்திக்கு, இறையுணர்வுக்கு அழைத்துச் செல்லும். மேலும் அது கட்டுப்பாடுடன் கூடிய ஒழுங்கினை உன்னுள் வளர்க்கும். ஒவ்வொரு செயலையும் அது நல்லதா கெட்டதா, சரியா தவறா என்று பகுத்தறிவால் ஆராய்ந்து பார்த்திடு. அதன்பின் மனஉறுதியுடன் தெய்வீகத்தை அனுபவிக்கின்ற நிலைநோக்கி முன்னேறிச் சென்றிடு.
– பகவான் ஸ்ரீ சத்தியசாய் பாபா