ஒரு சின்ன கதை – முன்னுரை
பகவான் வேகமாகப் பொழியும் தனது சொற்பொழிவின் சமயம் நடுவில் “ஒரு சின்ன கதை” என்று நிறுத்தினால் அனைவரது காதும் விழிப்பாகி, இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்து விடும்.ஏனெனில், ஸ்வாமி சொல்லப்போகும் கதை மின்னலடிக்கும் வெளிச்சமாய், குளுமையான மழைத்துளியாய், உடம்பை குலுங்க வைக்கும் நகைச்சுவையாக, நோய்க்கு ஏற்ற மருந்தாக இருக்கும். இந்த சின்ன கதை ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு செயலூக்கமாக, கல்வி மேம்பாட்டிற்கு ஒரு சாதகமான நடைமுறை வழிகாட்டியாக இருக்கிறது.
அவர் சொற்பொழிவாற்றும்போது, ஒட்டுமொத்த சாராம்சமும் கூட்டமாக வரும் பறவைகள் போல, இதய வானத்தில் பறந்து வந்து, சில கருத்துகளாகிய பறவைகள் இதயத்தில் அவரின் பிரேமையினால் கூடு கட்டி தங்கி இருக்கும் போது, எண்ணத்தில், நடத்தையில் மாற்றம் ஏற்படுத்துகிறது.(….மறைந்த திரு.கஸ்துரி அவர்கள்) “சின்ன கதைகள்” உயர்ந்த எண்ணங்களை ஊட்டும் வழிகாட்டிக் கதைகள் ஆகும். சுவாமி தனது சொற்பொழிவுகளின் நடுவில் கூறும் இந்த கதைகள் பாலவிகாஸின் பாடத்திட்டத்திலும் உள்ளது.
Ref:Prasanthi Nilayam- Sankranti, 14.01.1978, Late N. Kasturi.
குழந்தைகளின் கவனத்தை விரைவாகக் கவரும் இந்தக் கதைகள் அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும், உயர்ந்த எண்ணங்களையும் கற்றுக் கொடுத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. இந்தக் கதைகள், கேட்பவர்களது நினைவிலும், மனதிலும் நீடித்திருக்கும் படி ஆழப்பதிகிறது. சுவாமி அடிக்கடி கூறும் இந்த சின்ன கதைகள், கடினமான ஆத்ம தத்துவங்களை மிகவும் எளிதாக அனைவரும் புரிந்துகொள்ளவும், அதனை ஆழ்ந்து சிந்தனை செய்யவும் தூண்டுகிறது.
சுவாமியின் பல சொற்பொழிவுகளில் இருந்து எடுத்த ஐந்து “சின்ன கதைகள்” இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேற்கொண்டு இதை விளக்கமாக கூற பாலவிகாஸ் குருமார்கள் சின்ன கதை பகுதி 1 & 2 மற்றும் பொருத்தமான கதைகளை எடுத்து குழந்தைகளுக்கு அவர்களது வயது, புரிந்து கொள்ளும் திறனுக்குத் தகுந்த படி கூறலாம்.