பஜகோவிந்தம் பாடல்கள்
பஜகோவிந்தம் பாடல்களில் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் வேதாந்த, சமய உபதேச சாரத்தினை அடக்கியுள்ளார். இந்த உபதேசமானது, நாம் துன்ப நிலையைக் கடந்து கோவிந்தனின் இருப்பிடமான பரமானந்த நிலையை அடைவதற்கானத் திறவுகோலாகும்.
பஜகோவிந்தத்தில் 31 எளிய இனிய ஸ்லோகங்கள் உள்ளன. நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், அன்றாட வாழ்க்கையிலிருந்து உவமைகளும் உதாரணங்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. நமது அறியாமை, மாயத் தோற்றம், மோகம் (மதிமயக்கம்) ஆகியவற்றால் உருவாகிய திரைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ஸ்லோகத்தின் மூலமாக நீக்கிக் கொண்டே வருகிறார். இக்கவிதைத் தொகுப்புக்கு மோக முத்கரம் (மதிமயக்கத்தைத் தகர்க்கும் சம்மட்டி) என்ற பெயருமுண்டு.
ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார், உலக அளவில் தலைசிறந்த தத்துவ ஞானியாவார். “சாரமுள்ளது எது, சாரமற்றது எது; உண்மையானது எது, உண்மையற்றது எது; நிலையானது எது, நிலையற்றது எது என்பதைப் பிரித்து அறியும் விவேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலகத்தின் கவர்ச்சிகள் நமது கவனத்தைத் திசை திருப்பும் விஷயங்கள். இவற்றில் கொண்டுள்ள பற்றினை விலக்கி, நிரந்தரமான சத்தியமாகிய கோவிந்தன் மீது மனதைத் திருப்பி, இறைப்பற்றினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றின் பயனாக, இந்த மாயத் தோற்றம் அடங்கிய வாழ்வின் தளையிலிருந்தும், மனத் துன்பத்தினின்றும் விடுதலை பெற வேண்டும்” என்று ஆதிசங்கரர் அருளியுள்ளார்.
எப்பொழுதெல்லாம் தர்மத்தைக் கடைப்பிடித்ததில் வீழ்ச்சியும், அதர்மத்திற்கு எழுச்சியும் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் இறைவன் பூவுலகில் தருமத்தை நிலைநாட்டுவதற்கு அவதரிப்பார் என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கூறியுள்ளார். அவ்வாக்கிற் கிணங்க சமயத்திலும், நீதிநெறியிலும் நாடு முழுவதும் குழப்பங்கள் நிறைந்த தருணத்தில் சங்கராச்சாரியார் தோன்றினார்.
ஆதிசங்கரர் கி.பி. 8ம் நூற்றாண்டில் பிறந்தார். அக்காலத்தில் புத்த மதம் நாடு முழுவதும் பரவியிருந்தது. ஆனால் புத்தபிரான் உபதேசித்த புனிதமான, எளிய நீதிநெறி முறைகள் திரிபட்டு மிகுந்த களங்கத்துடன் விரவி வந்தன. சமண மதத்தையும் பலர் பின்பற்றி வந்தனர். அதுவும் களங்கமுற்ற நிலையில் இருந்தது. அவற்றைப் பின்பற்றிய பாமர மக்களிடம் நாத்திக வாதம் (கடவுளை மறுத்தல்) பரவியிருந்தது. இந்து மதமும், பல்வேறு பிரிவுகளாக துண்டுபட்டு ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு கருத்துகள் உருவாகி அதையும் பிளவுபடுத்தின.
சமயத்திலும், நீதிநெறிமுறையிலும், ஆன்மீக உணர்விலும் இசைவினைக் கொண்டுவருவது இன்றியமையாததாக இருந்தது. இத்தகைய பிரமிக்க வைக்கின்ற, மகா உன்னதமான பணியை இறைவன் மட்டுமே நிறைவேற்றி வைக்கமுடியும். ஆதிசங்கரர் தோன்றினார். இந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். செவ்வனே நிறைவேற்றியும் வைத்தார். அவர் 32 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். அதற்குள் அத்வைத வேதாந்தக் கருத்தினை அழுத்தமாக நிலைநாட்டினார்.