ஒரு நட்பு உருவாகியது
இராமரும் இலட்சுமணரும் சீதையைத் தேடிக் கொண்டுத் தெற்கு திசையில் சென்றனர். காட்டின் ஒரு பகுதியில் அவர்கள், மூச்சு விடவே திணறிக் கொண்டு விழுந்திருந்த கழுகுகளின் தலைவன் ஜடாயுவைக் கண்டனர். ஜடாயுவின் காயங்களைக் கழுவித் துடைத்து அவனுக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்று வினவினர்.
“இராமா! இராவணன் சீதையைக் களவாடி தன் வான ஊர்தியில் எடுத்துச் சென்றதை நான் பார்த்தேன். தீச்செயல் புரிய வேண்டாம் என்று தடுத்து அறிவுறுத்தினேன். பிறகு என்னால் இயன்றவரை அவனோடு சண்டையும் இட்டேன். ஆனால் வயதான நான், அவனுடைய வலிமைக்கு ஈடு கொடுத்துப் போராட இயலுமா? இறுதியில் அவன் என் இறக்கைகளை வெட்டி விட்டுச் சென்று விட்டான். செயலற்று நான் விழுந்து விட்டேன். உன்னிடம் இந்தச் செய்தியைத் தெரிவிக்கவே நான் இத்தனை நாள் ஆவலோடு காத்திருந்தேன். உனக்கு என்னால் இயன்ற சேவை செய்து விட்டேன் என்ற நினைவோடு இனி நான் அமைதியாக இறக்கலாம்”, என்று திக்கித் திணறி கூறினான் ஜடாயு.
இராமரும் இலட்சுமணரும் ஜடாயுவின் உடலை மதிப்புடன் தகுந்த முறைகளோடு வழிபாடாற்றி எரித்தனர். பின்னர் தங்கள் பயணத்தை மீளவும் தொடர்ந்தனர். சில நாட்கள் பயணத்திற்குப் பிறகு அவர்கள் பம்பை நதிக்கரையைச் சேர்ந்தனர்.
கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வானர அரசன் வாலியின் தம்பி, சுக்ரீவன் என்பவன். அண்ணன் தம்பியரிடையே ஏதோ மனக் கசப்பு ஏற்பட்டு, வாலி சுக்ரீவனை, நாட்டை விட்டு துரத்தி விட்டான். ருஷ்யமுக பர்வதத்தில் சுக்ரீவன், தன உற்ற தோழர்கள் சிலருடன் தலைமறைவாக வசித்து வந்தான். அவனது தோழர்களில் அநுமான் தலையாய நண்பராவர்.
சுக்ரீவனும் அவனது நண்பர்களும் பம்பை நதிக்கரையில் இராம இலட்சுமணர் உலவுவதை பார்த்தனர். அவர்கள் தன் தமையன் வாலியால் அனுப்பப்பட்ட உளவாளிகளோ என்று சுக்ரீவன் முதலில் அஞ்சினான். ஆனால் தீர்க்கதரிசியான அநுமான், அவனது அச்சத்தைப் போக்கினார். மலையிலிருந்து இறங்கிச் சென்று எதிரே வந்த இளவரசர்களைச் சந்தித்து. அவர்கள் அங்கு வந்த காரணத்தை வினவினார்.
அநுமானைக் கண்டவுடனே, அவருடைய பணிவார்ந்த இயல்பும், வெளிப்படையாகத் தெரிந்த நேர்மையான பண்பும், அறிவார்ந்த பாங்கும், இராமரைப் பெரிதும் கவர்ந்து விட்டன. தாம் இங்ஙனம் அலைவதின் காரணத்தை அவரிடம் கூறினார் இராமர். “உண்மையில் கூறப்போனால் நாங்கள் சுக்ரீவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவனது நட்புரிமையை நாங்கள் பெற விரும்புகிறோம்” என்று மகிழ்வோடு கூறினார்.
இராமரது சொற்களைச் செவி மடுத்தவுடன், கழிபேருவகையடைந்த அநுமான், அவர்களிருவரையும் மலையுச்சிக்குச் சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றார். சுக்ரீவன் அவர்களை பெருமகிழ்வோடு வரவேற்று உள்ளன்போடு உபசரித்தான். எல்லோரும் ஒன்று கூடி அமர்ந்தனர். முதலில் சுக்ரீவன், தன் தமையனோடு ஏற்பட்ட பிணக்கைப் பற்றி விவரித்தான். பின்னர், “இராமா! நாம் இருவருமே ஒரு விதத்தில் சமமான தொல்லையில் சிக்கியிருக்கிறோம். ஒருவருக்கொருவர் உதவி புரிந்து சிக்கலைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று மேலும் கூறினான்.
அனுமான் இடையில் குறிக்கிட்டு, இராமரும் சுக்ரீவனும், தங்கள் தலை சிறந்த நட்பை முறைப்படி உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார். சுக்ரீவன் தான் இழந்து விட்ட நாட்டைத் திரும்பப் பெற இராமர் அவனுக்கு உதவ வேண்டும் என்றும், சீதையை மீண்டும் அடைவதற்கு சுக்ரீவன் இராமருக்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் இருவரும் கூடி திட்டமிட்டனர். இந்த திட்டத்தை குழுமியிருந்த அனைவருமே ஏற்றுக் கொண்டனர்.
சுக்ரீவன், சுற்றிலும் நின்றிருந்த வானரர்களைப் பார்த்து, ஒரு நாள் தங்களிடையே வானத்திலிருந்து விழுந்த நகை மூட்டையை எடுத்து வரச் சொன்னான். மூட்டை விழுந்த போது வானரர்கள், தலையை நிமிர்த்தி பார்த்தனர். அப்போது கொடிய அரக்கன் ஒருவன் அழகிய பெண் ஒருத்தியை வலுக்கட்டாயமாக வான ஊர்தியில் ஏற்றிக் கொண்டு தெற்கு நோக்கிச் செல்வதைக் கண்டனர்.
இந்த நிகழ்ச்சியை இராமரிடம் விவரித்து நகை மூட்டையைத் தந்தான் சுக்ரீவன். அந்த நகைகளைப் பார்த்ததும், இராமர் நினைவிழந்து விட்டார். எனவே சுக்ரீவன் கேட்டுக் கொண்டபடி இலட்சுமணன் அந்த நகைகளை ஆராய்ந்து அவை ஐயமின்றி சீதையின் நகைகள்தாம் என்றும், அவற்றில் கால்களில் அணிவனவற்றை மட்டும் அடையாளம் கண்டு கூறினான். இலட்சுமணன் நாள்தோறும் சீதையின் பாதங்களில் வணங்குவது வழக்கம். எனவே அவனால் காலணிகலன்களை மட்டுமே திட்டவட்டமாக கண்டு கொள்ள முடிந்தது. கழுத்து, கைகளில் அணிந்த வற்றை அவனால் தெளிவாகத் தெரிந்து கூற இயலவில்லை. நேர்மையும் பக்தியும் நிறைந்த அவனது கூற்று வானரர்களை நெஞ்சம் நெகிழச் செய்தது. பிறகு இராமர் சுய நினைவு பெற்று மற்ற நகைகளும் சீதையினுடையது தான் என்று கண்டு கூறினார்.
பின்னர் சுக்ரீவன் வாலியின் பலத்தை எடுத்துரைத்தான். அதனால் இராமரது வலிமையைத் தாம் காண விரும்புவதாக கேட்டுக் கொண்டான். தம்முடைய சாமர்த்தியத்தைத் தெரிவிக்க, இராமர், ஓர் அம்பு விடுத்தார். அது ஒரே நேரத்தில் வரிசையாக இருந்த ஏழு சால மரங்களைத் துளைத்து விட்டு மீளவும் இராமர் கையையடைந்தது. இராமரது ஆற்றலை கண்ணுற்ற சுக்ரீவன் மலைத்து நின்று விட்டான்.
முதலில் சுக்ரீவன் வாலியைப் போருக்கழைத்து, அவனுடன் போர் புரிய வேண்டுமென்றும் அப்போது இராமர் வாலியைக் கொல்வது என்றும் திட்டமிட்டனர். அதன்படி சுக்ரீவன் கிஷ்கிந்தை சென்று அரண்மனை வாயிலில் வீர முழக்கம் செய்தான். அவன் குரல் கேட்டு ஆங்காரமாக வெளி வந்தான் வாலி. இருவரும் பயங்கரமாக அடித்துக் கொண்டு யுத்தம் புரிந்தனர். வாலி சுக்ரீவன் இருவரும் உருவம், தோற்றம், உடை, படைக்கலன்கள் ஆகிய அனைத்து அமைப்பிலும் ஒத்து இருந்ததால், இராமரால் அவர்களை இனம் கண்டு கொள்ள முடியாது போயிற்று. இராமருக்கு குழப்பமாக ஆகிவிடவே வாளாயிருந்து விட்டார்.
சுக்ரீவன் வாலியின் கையால் பலத்த அடிப்பட்டு, துவண்டு போய் ருஷ்யமுக பர்வதத்திற்குத் திரும்பினான். வாலியை கொல்லாது விடுத்த இராமரைக் கடிந்தான். இராமர், தம் குழப்பமான நிலையை விளக்கினார். “தோழா ! மற்றொரு முறை உன் தமையனை அறை கூவி அழைத்துச் சண்டையிடு. ஆனால் இந்த முறை, நீ ஒரு பூமாலையைத் தரித்துக் கொள். அப்போது எனக்கு உன்னை அடையாளம் கண்டு கொள்ள இயலும்” என்றார். சுக்ரீவனும் இசைந்து மறுநாள் மறுபடியும் வாலியிடம் சென்று அவனைப் போருக்கு அழைத்தான்.
அதுபோது வாலி தன அரசியர்களிடையே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். சுக்ரீவனது அறைகூவலைக் கேட்டு அவன் விரைந்து எழுந்தபோது, அவன் மனைவி தாரா, அவனைக் கெஞ்சியவாறு தடுத்து நிறுத்த முயன்றாள். “இன்று ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது. என்று எனக்குத் தோன்றுகிறது. நேற்றுத்தான் உங்கள் தம்பி உங்கள் கையால் செம்மை அடி வாங்கிச் சென்றான், இவ்வளவு விரைவில் அவன் வந்து உங்களை மீளவும் போருக்கு அழைப்பதென்றால் புதியதோர் மாற்றம் நிகழ்ந்திருப்பது தெரியவில்லையா? பேராற்றல் பெற்றவர் ஒருவரது உதவி அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் “ என்று அறிவுறுத்தினாள்.
வாலி அவளது மொழிகளைச் சட்டை செய்யாது சுக்ரீவனோடு போர் புரிய விரைந்து சென்றான். முன்னாளை விட மிகக் கடுமையாகச் சண்டை நிகழ்ந்தது. சுக்ரீவன் விரைவில் சோர்ந்து போனான். அதுபோது ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றிருந்த இராமர், மிக்க கவனமாக வாலியைப் பார்த்து கூரிய அம்பு ஒன்றை எய்தார். “விர்” ரென்ற ஓசையுடன் பறந்துச் சென்ற அந்த அம்பு வாலியைத் துளைத்து வீழ்த்தி விட்டது. அவன் விழுந்தப் பின்னர் இராம இலட்சுமணர் அவனை அணுகினர்.
மறைவாக இருந்து வஞ்சகமாகத் தன்னைத் தாக்கிய இராமரை வாலி குற்றஞ்சாட்டி இகழ்ந்துரைத்தான். இராமர் அமைதியாக, “நீ உன் தம்பியின் அரசைக் கைப்பற்றிக் கொண்டு அதர்ம வழியில் சென்றாய், ஓர் அரச குமாரன் என்ற முறையில், தர்மத்தை நிலை நாட்டுவது என் கடமையாகும். ஒரு வேடன் மரத்தின் பின்னே மறைந்து நின்று கொண்டு, கொடிய விலங்கை கொல்வதில்லையா?” என்று தம் செயலுக்கு விளக்கம் கூறினார்.
வாலி தன் தவறை முழுமையாக உணர்ந்து வருந்தி, அமைதியாக உயிர் துறந்தான். நெருங்கிய நண்பர்களாகி விட்ட இராமர் சுக்ரீவன் ஆகிய இருவரது வாழ்க்கையிலுமே, சகோதர பாசம் என்பது ஒப்பிட்டுக் கூறும்படி அமைந்திருந்தது. இராமரும் பரதரும் ஒரு புறமும், சுக்ரீவனும் வாலியும் மறுபுறமாக இணைந்திருந்தனர். இரண்டு இணைகளிலுமே சகோதரர்கள் ஒருவரையொருவர் அன்புடன் நேசித்தனர். துன்பங்களும் துயரங்களும் இராமர் பரதனிடம் இருந்த உயர்தர பண்பினையும், தர்ம நெறியிலான ஒழுக்கத்தையும் எடுத்துக் காட்டினான். வாலி தன் தம்பியைத் தங்களிடையே ஏற்பட்ட மன வேறுபாட்டினால், துன்புறுத்தலானான். அதனால் அந்த சகோதரர்கள் கசப்பான எதிரிகளாக மாற நேரிட்டது. அதற்கு மாறாக, இராமர், பரதனை எடுத்துக் கொண்டால் இருவருமே அரசாளும் வாய்ப்பு பெற்றபோது அந்த உரிமையை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில் மிக்க ஆர்வமாக இருந்தனர்.
கேள்விகள்:
- இராமரும் சுக்ரீவனும் தாங்கள் வாழ்க்கையில் நேர்ந்து விட்ட சிக்கல்களை ஆராய்ந்து அறிந்த போது, அவற்றில் என்ன ஒற்றுமை,வேற்றுமை நிலைகளைக் கண்டனர்?
- இராமர் பரதர் இருவரும், வாலி சுக்ரீவன் இருவரும், தாங்கள், தாங்கள் வெளிப்படுத்திய இயல்புகளை ஒப்பிட்டு விளக்குக.