இலங்கையில் அநுமான்
அநுமான் கடல் மீது பறந்து சென்றபோது நடுவில் பல இடையூறுகள் குறுக்கிட்டன. தமது சமயோசித அறிவாலும், திட சித்தத்தாலும், தைரியத்தாலும் அவற்றை வெற்றிக் கொண்டு, இலங்கைக் கரையில் இறங்கினார். அவர் ஒரு சிறிய குன்று மீது அமர்ந்து சற்று களைப்பாறிய பிறகு நாடு முழுவதையும் கண்களாலேயே அளந்து நோக்கினார். இலங்கையின் கம்பீரமும், உன்னதமான அழகும் அவரைத் திகைத்து நிற்கச் செய்தன. நகரத்தைச் சுற்றிலும் வீரர்கள் நிறைந்து நின்று, மிகுந்த பாதுகாத்து வந்ததால், இரவு நேரத்தில்தான் நகருக்குள் புக இயலும் என்று அனுமான் தீர்மானித்தார்.
இரவு வந்தது. ஒரு சிறிய குரங்கின் வடிவத்திற்கு அவர் தம்மைச் சுருக்கிக் கொண்டு ஒரு மதிலின் மேல் ஏற முயன்றார். உடனே அவரை ஒரு அரக்கர் குலப் பெண்மணி பற்றி நிறுத்தினாள். அவள் இலங்கையைக் காக்கும் தேவதை. அநுமான் அவளது பிடியிலிருந்து விலகி, ஓங்கி அவளை அறைந்தார். அந்த அடி அவளுக்கு உண்மை நிலையை உணர்த்தியது. பின்னர் அவள் அநுமானை வணங்கி நகருக்குள் போக விட்டாள். இங்ஙனம் அவர் தம் எதிரே வந்த வலிமை வாய்ந்த பல இடையூறுகளையும் வென்றார். இந்த வெற்றி அவருக்கு தாம் ஏற்று வந்த போற்றத் தக்கப் பெருமை வாய்ந்த பணி நிறைவேற ஒரு நற்சகுனமாகத் தென்பட்டது.
ஒவ்வொருவரது அரண்மனையாகப் புகுந்து ஒவ்வொரு இடத்தையும் நணுக்கமாக ஆராய்ந்து தேடலானார் அநுமான். தேவ தச்சன் விசுவகர்மாவால் உயரிய முறையில் திட்டங்கள் வகுக்கப்பெற்றுச் சிறந்த வகையில் கட்டப் பெற்றது, கம்பீரமான இலங்கை மாநகரம். நகரத்தில் பல கோயில்களும், தோட்டங்களும், மாளிகைகளும், நிறைந்திருந்தன. பாராயணங்கள், வேத மந்திரம், கவிதைகள், அரசியல் கூட்டங்கள், நுண்ணிய கலைத் திறன்கள், இன்னிசை, நாட்டியம், என்று எல்லா செயல்களிலும் சிறந்து விளங்கியது இலங்கை. அநுமான் அவற்றைக் கண்டு திகைப்பும், வியப்பும் மீதுரப் பெற்றவராய், அந்த நகரத்தின் பெருமையை மனத்திற்குள் உவந்து பாராட்டினார். அரண்மனைகளிலிருந்த தனி அறைகள், சமையல் அறைகள், சிற்றுண்டி சாலைகள், எல்லாவற்றிலும் கூட புகுந்து ஆராய்ந்தார். பேரழகு வாய்ந்த பெண்மணிகளை எங்கும் கண்டாரே தவிர சீதையை எந்த இடத்திலும் காண அவரால் இயலாது போயிற்று.
இறுதியாக அநுமான் இராவணனது படுக்கை அறையில் புகுந்தார். ஒளி வீசும் உன்னத அழகோடு விளங்கிய அந்த இடத்தைக் கண்டு வியப்பினால் வாயடைத்து நின்று விட்டார் அவர். அறையெங்கிலும் படுத்திருந்த பெண்களின் பேரெழில் தோற்றம் துறவிகளையும் மயக்கமுறச் செய்யக்கூடியவனவாக இருந்தன. ஆனால் அநுமான் புலனடக்கம் பெற்றவர். (ஜிதேந்திரியர்) அதனால் சீதையைத் தவிர அவர் கண்கள் வேறு எதையுமே கூர்ந்து நோக்கவில்லை.
இராவணன் ஓர் உயர்தரப் படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். “எத்தகைய உயர்ந்த கம்பீரமான உருவம்,” என்று எண்ணி வியந்தார் அநுமான். அங்கெல்லாம் சீதையைக் காண இயலாததால் அவர் வெளி போந்து கொஞ்ச நேரம் இங்கும் அங்கும் தேடி அலைந்து “அசோக வனம்” என்ற தோட்டத்தில் நுழைந்தார்.
மானசீகமாக இராமரைத் துதித்து, தமக்கு சரியான வழி காட்டும்படி வேண்டினார் அநுமான். அசோக வனத்தில் சுற்றி பார்த்த பொது, அரக்கப் பெண்மணிகள் பலர் சூழ்ந்து கிடப்பதைக் கண்டார். அவர்களில் சிலர் பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றத்தோடு இருந்தனர். இத்தனை பேர் கூடி இங்கென்ன செய்கிறார்கள் என்று அவர் சிந்தித்தார் சிறிது நேரம்.
கோர உருவமுள்ள அவர்களை அவர் வரிசையாகக் கண்டு கொண்டே வந்த போது திடீரென அவரது பார்வை, உரங்குன்றி, மெலிந்த தோற்றத்துடன், ஆனால் வனப்பு மிக்க எழிலோவியமாக, சிம்சுபா மரத்தடியில் தனிமையாக அமர்ந்திருந்த பெண்ணின் மீது படர்ந்தது. அவளுடைய தலைமுடி பின்னப் போடாமல் முதுகின் மேல் விரிந்திருந்தது. அவள் மிக எளிய உடை உடுத்தியிருந்தாள். இடைவிடாது அழுதுக் கொண்டே இருந்ததால், அவளது முகம் வெளுத்து கண்கள் வீங்கியிருந்தன.
அநுமான் ஓசைப்படாமல் தாவிச் சென்று அந்த மரத்தை அணுகி கூர்ந்து கவனிக்கலானார். அநேகமாக எளிதில் வெளியில் தெரியாத அளவில் மிக மெதுவாக இராம நாமம் அவளது வாயிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்தது. அந்த பெயரைக் கேட்கும்போதே அநுமானுடைய உடல் புல்லரித்தது. புனிதமான அந்தப் பெண்மணியை சேவித்ததால், தாம் தூய்மையடைந்ததாக அவர் எண்ணினார். உடனே தாம் தேடி வந்த சீதை அவள்தான் என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். அவளைக் கண்டு பிடித்து விட்டதால் அவர் மிகவும் உற்சாகமாக சிலிர்த்து மகிழ்ந்தார்.
அப்போது அங்கு ஒரு மெல்லிய கொந்தளிப்பு அரவம் கேட்டது. அந்த ஒலி இராவணன் தோட்டத்திற்குள் நுழைவதைப் பறை சாற்றியது. அவன் பெண்கள் பரிவாரத்துடன் ஆடம்பரமாக வந்து நின்றான். சீதையின் முன்பு போய், தன்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடிக் கேட்டான். அவனது சொற்களுக்கு முதலில் அசைவற்று நின்றிருந்தாள் சீதை. அதனால் இராவணன் மிக்கக் கோபம் கொண்டு அவளுக்கு அஞ்சத் தக்க விளைவுகள் நேரிடும் என்று அச்சுறுத்தினான்.
சீதை வெறுப்போடு அவனைப் பார்த்து, “நான் இராமரை மணந்திருக்கிறேன், எனவே நான் அவருடைய உடமை. என்னால் வேற்று மனிதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இராமர் உன்னை உயிரோடு விட மாட்டார். உன் இலங்கை முழுவதும் அவருடைய குறி தவறாத கணைகளால் தீப்பற்றிச் சாம்பலாகும். அதனால் இப்போதே போய் அவரது கால்களில் பணிந்து விடு. அவர் பெருந்தன்மையாளர். உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வார்.” என்று அறிவுறுத்தினாள்.
இராவணனது கோபம் எல்லை கடந்து பெருகியது. “உனக்கு இன்னும் இரண்டு மாதத் தவணை தருகிறேன். அதற்குள் என்னை ஏற்காவிட்டால் உன்னை துண்டம் துண்டமாக போட்டு, எனக்கு காலையுணவாகத் தரும்படி என் பணியாட்களுக்கு நான் கட்டளையிட்டு விடுவேன்,” என்று இரைந்து கத்தினான். பிறகு கோபத்தில் கொந்தளித்தவாறு திரும்பித் தன் அரண்மனைக்குச் சென்றான்.
சீதையின் உடன் பிறந்த நற்குணமே இராவணனை எதிர்த்து நிற்கப் போதுமான தைரியத்தைத் தந்து, அவள் இராவணனது கூற்றுக்கு மறுப்பு கூறவும் உறுதியளித்தது. தானாகவே முன்வந்து, இராமரோடு கடினமான கானக வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட அவள், இராவணன் ஆசைக் காட்டிய அரச போகம், கணக்கற்ற செல்வச் செழிப்பு, இவற்றுக்கா மயங்குவாள்? இராமருடன் உறையும் வாய்ப்போடு நோக்கியதால், அந்த போகங்களை துகளுக்கும், தூசிக்கும் சமமாக நினைத்து வெறுத்து ஒதுக்கினாள்.
அநுமான் வேகமாக மரத்திலிருந்து இறங்கி வந்து முன்னரே பெற்றிருந்த ஒரு சிறிய குரங்கின் வடிவத்தோடு சீதையை நெருங்கினார். இராமரது பிறப்பிலிருந்து, அவர் கிஷ்கிந்தா சேர்ந்த வரை உள்ள வரலாற்றை பாடல் வடிவில் மெல்லிய குரலில் பாடலானார். ஒரு சாதாரணக் குரங்கு எப்படி மனிதனைப் போல பேச இயலுகின்றது என்று புரியாது சீதை குழம்பினாள். சற்று நேரம் அநுமான் அவள் முன்பு கைகூப்பியவாறு பணிவோடு நின்றிருந்தார். அவரது பொலிவு மிக்க மூகம் அவளைக் கவர்ந்த போதிலும், மறு நொடியே அவள் அவரை ஐயத் தோடு நோக்கினாள். வெறுப்போடு அவரைப் பார்த்து “ நீ இராவணன், என்னை ஏமாற்ற நீ பலபல உருவங்கள் எடுக்கிறாய். ஆனால் நீ என்றென்றும் வெற்றி காண மாட்டாய் என்று திட்டமாகத் தெரிந்து கொள்.” என்றுமொழிந்தாள்.
அவளது குற்றச்சாட்டைக் கண்டு அநுமான் திகைத்து போய் விட்டார். தம்மைத் தவறாக நினைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டினார். “ நான் இராமனது உண்மை ஊழியன் தங்களுக்காக அவர் தந்தனுப்பிய இந்த மோதிரத்தைப் பாருங்கள்,” என்று அந்த கணையாழியை உடனே அவளது கரங்களில் தந்தார். மோதிரத்தைக் கையில் வாங்கியதுமே, சீதை “மளமள”வென்று அழுது விட்டாள். கணையாழியைப் பார்த்ததும், இராமரையே நேரில் பார்ப்பது போல இருந்தது சீதைக்கு. காட்டில் தற்காலிகமாக ஓரிடத்தில் தனிமையில் இருவரும் தங்கியிருந்தபோது, நடைபெற்ற, அவர்கள் இருவர் மட்டுமே அறிந்திருந்த சில நிகழ்ச்சிகளை அநுமான் விவரித்துக் கூறினார். அவற்றைக் கேட்டதும் சீதை உணர்ச்சி வசப்பட்டு விம்மி அழுதாள். அவள் அநுமானைப் பற்றிக் கொண்டிருந்த ஐயங்கள் அனைத்தும் அந்தக் கணமே அடியோடு அகன்றன.
பிறகு அநுமான், அவளைத் தமது முதுகில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்படியும், அவர் அவளை இலங்கையை விட்டு அழைத்துச் சென்று விடுவதாகவும் கூறினார். ஆனால் சீதை அதற்கு இணங்கவில்லை. “மகனே! ஒரு திருடனைப் போல ஓடிவிட நான் விரும்பவில்லை. இராமர், இதை ஓர் அறை கூவலாக ஏற்று இலங்கையை முற்றுகையிட்டு, இராவணனை வெற்றிக் கொண்டு, என்னை விடுவிக்க வேண்டும். அப்போதுதான் அவர் உண்மையான க்ஷத்திரிய வீரராவார்.” என்று உறுதியாகக் கூறினாள்.
அவளது மொழிகளைக் கேட்டவுடன் அநுமானுக்கு அவளிடம் வைத்திருந்த மதிப்பு பல மடங்காகப் பெருகியது. பிறகு அவர் அவளிடம் விடைப் பெற்றார். போகும்முன்பு , சீதை அவரிடம் ஒரு நகையைக் கொடுத்து, அதை அடையாளமாக இராமரிடம் தரும்படிக் கேட்டுக் கொண்டாள்.
அநுமான் இராவணனுக்குக் கோபமூட்டுதல்
தாம் மேற்கொண்ட பணி முடிந்துடன், கடல் பக்கம் திரும்புவதை விடுத்து ஒரு குறும்புத் தனமான திட்டமிட்டார் அநுமான். இராவணனது கோபத்தைத் தூண்டி விட்டு, அவனுக்கு ஒரு பாடம் கற்ப்பிக்க எண்ணினார். அந்த திட்டத்தோடு அடுத்த நொடியே அவர், அழகிய அசோகவனத்தை அழிக்கத் துவங்கினார். அவரது செயலைக் கண்ணுற்ற காவலர், இராவணனிடம் விரைந்து சென்று, பூதாகாரமானக் குரங்கு ஒன்று, நகரின் அழகிய தோட்டங்களை நாசப் படுத்துவதாகத் தெரிவித்தனர். இராவணன் உடனே, ஒரு பெரும் படையை அனுப்பி அந்தக் குரங்கைக் கொல்லும்படி கூறினான். அது மிக எளிதான செயல் என்று அவன் தவறாக நம்பி விட்டான். ஆனால் அநுமான் தம்மை எதிர்த்த அரக்கர் அனைவரையும் கொன்று குவித்தபோது இராவணனின் நம்பிக்கை ஆட்டம் கண்டு விட்டது. தளபதிகள், சிறந்த வீரர்கள் பிறகு தன் மகன்கள் என்று ஒருவர் பின் யொருவராக ஏவினான். அவர்களனைவருமே அநுமானால் அழிக்கப் பட்டனர்.
இராவணனது கலக்கம் சற்று மிகுதியாகியது. இந்திரஜித்தை அழைத்து அனுமானோடு போரிட அனுப்பினான். அநுமான் இந்திரஜித் ஏவிய அனைத்து அஸ்திரங்களையும் தவிடு பொடியாக்கினார். இறுதியாக இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை ஏவி அனுமானைக் கட்டி விட்டான். பிரம்மாவிடம் கொண்டிருந்த மரியாதைக்கிணங்கி அநுமான் பிரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டவராக நின்றார்.
அந்தக் கட்டுடனே அநுமான் இராவணனது சபைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கு அவர் யார், எதற்காக, எங்கிருந்து இலங்கைக்கு வந்தார் என்று வினவ பெற்றார். “நான் இராமரது ஊழியன்.நீ அவரது மனைவியை கள்ளத் தனமான வழியில் கவர்ந்து வந்தாய். அதனால் அஞ்சத்தக்க விளைவுகள் ஏற்பட நேரிடும் என்று நான் உன்னை எச்சரிக்க வந்துள்ளேன்.” என்று விடையிறுத்தார் அநுமான்.
இராவணன் அதைக் கேட்டுக் கட்டுக்கடங்காத கோபம் கொண்டான். உடனே அந்த குரங்கைக் கொன்று விட உத்தரவிட்டான். அவனுடைய தம்பி விபீஷணன், இடையில் குறுக்கிட்டுத், தூதுவனைக் கொல்வது தவறு என்று வாதிட்டு அறிவுறுத்தினான். அதனால் பிறகு, இராவணன் உத்திரவுப்படி அனுமாரது வாலில் கந்தை துணிகளைச் சுற்றி, எண்ணெய் விட்டு பற்ற வைத்து விட்டனர் அரக்க வீரர்.
அநுமான், உடனே, எரியும் வாலுடன் நகரத்தின் மேல் பறந்துச் சென்று, ஒவ்வொரு வீட்டிலும் நெருப்பை வைத்து அவற்றை நொடி நேரத்தில் சாம்பலாக்கினார். பிறகு கடலில் வாலை நனைத்து நெருப்பை அணைத்து விட்டு சற்று நேரம் ஓய்வாக அமர்ந்து, தாம் ஆற்றிய செயல்களைப் பற்றிச் சிந்தித்தார்.
திடீரென அவருக்குத் தம் செயலின் விளைவு நினைவிற்கு வந்தது. “ஆ! தெய்வமே! என்ன முட்டாள் தனமான வேலை செய்து விட்டேன். ஒரு வேளை அன்னை சீதையும் இத்தீயில் எரிந்து விட்டிருப்பார்களோ “ என்று தம்மையே கடிந்து கொண்டு துடித்துப் போனார். உடனே அசோகவனத்திற்குப் பறந்து சென்று, அங்கு சீதை தீங்கற்று அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்த பிறகே அவரது துயரம் நீங்கியது. மற்றொரு முறை அவளிடம் விடைபெற்று கடலுக்கு வந்து தம் திரும்பும் பயணத்தை மேற்கொண்டார்.
கடலைக் கடந்து வந்ததும் அவர் அங்கதன், ஜாம்பவான் மற்றுமுள்ளவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். அனைவரும் அவரைச் சூழ்ந்து அமர்ந்தனர். அநுமான் இலங்கையில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தார். அவர் வெற்றி பெற்று வந்ததற்காக எல்லோரும் அவரை பாராட்டி வாழ்த்தினர். உடனே கிஷ்கிந்தைக்குச் சென்று இன்பகரமான இந்தச் செய்தியை இராமருக்கு அறிவிக்க வேண்டும் என்று அங்கதன் கட்டளையிட்டான்.
வானரர்கள் உடனே புறப்பட்டு கிஷ்கிந்தை சேர்ந்தனர். அவர்கள் முகமலர்ந்து வருவதைக் கண்டவுடன் இராமர், சுக்ரீவன், முதலானோர் அவர்கள் ஏற்றுச் சென்ற காரியம் வெற்றிப் பெற்றது என்பதை உறுதியாகப் புரிந்து கொண்டனர். அநுமான் இராமர் பாதங்களில் பணிந்து எழுந்தார். சீதையைக் கண்டதையும், அவளுடன் பேசியதையும், இலங்கையில் தமது அனுபவத்தையும் விளக்கமாக விவரித்தார். பிறகு சீதை தந்த நகையை இராமரிடம் தந்தார். அந்த நகையைக் கண்டு, அநுமான் மூலமாக சீதை சொல்லியனுப்பிய செய்தியையும் கேட்டவுடன், இராமரது நெஞ்சம் நெகிழ்ந்து துவண்டது. வாயுபுத்திரனை நெஞ்சோடு சேர்த்தணைத்து நன்றியார்ந்த தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் அவர்.
கேள்விகள்:
- தாம் இராமரது தூதுவன் என்பதை அநுமான் எப்படி சீதைக்கு உணர்த்தினார்?
- சீதை ஏன் அநுமனை ஐயுற்றாள்? பிறகு எங்ஙனம் அவள் உண்மையை உணர்ந்தாள்?
- இராவணனுக்கு அநுமான் கற்ப்பித்த சிறிய பாடம் என்ன?