இராவணனது வீழ்ச்சி
அரக்கர்களுக்கும் வானரர்களுக்கும் பெரும் போர் மூண்டது. சுக்ரீவன், அநுமான், அங்கதன், ஜாம்பவான் போன்ற வானரத் தலைவர்களால் இராவணனுடைய வலிமை மிக்க தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப் பட்டு வீழ்ந்தனர். போர் நிலைமை அரக்கர்களுக்கு எதிராக மாறுவதை இராவணன் அறிந்து கலங்கினான்.
மேன்மை மிக்க தலைமைத் தளபதி பிரஹஸ்தன், கொல்லப்பட்டதும், இராவணனே தலைமை ஏற்று, படையை நடத்தி, போர்க்களத்தில் புகுந்தான். இராமர் முதன்முறையாக, தம் முன்பு நிற்கும் கம்பீரமான இராவணனை பார்த்தார். மதிப்பு கலந்த வியப்பு அவரிடம் தோன்றியது. “தீச்செயல்கள் பல புரிந்தாலும், எத்தகைய மேன்மையான உருவம் பெற்றவன் !” என்று எண்ணினார். இராமரும் இராவணனும் எதிரெதிரே நின்றனர். இராமர் ஒரே அடியில், இராவணனது கிரீடத்தைக் கீழே தள்ளி, அவனுடைய தேரை சுக்கல் சுக்கலாக நொறுக்கி அவன் வைத்திருந்த படைக்கலன்களையும் நாசப்படுத்தி அழித்து விட்டார். இராவணன் கையற்ற நிலையில், செய்வதறியாது செயலற்று நின்றான் இராமர் எதிரில்.
அப்போது இராமர், அன்பான குரலில்,” இராவணா! படைக்கலனற்று நிற்கும் வீரனோடு நான் போர் புரிய மாட்டேன். இன்று போய், நாளை புதிய போர்க் கருவிகளுடன் வா! “என்று கூறி அனுப்பினார். இராவணன் சற்று அகங்காரம் அடங்கியவனாய் தலை குனிந்து அரண்மனைக்குத் திரும்பினான்.
இராவணனது மனத்தில் ஒரு பெரும் சூறாவளியே சுழன்றது. அதுவரை அவனை யாருமே தோற்கடித்ததில்லை. முதன் முறையாக அவன் தான் செய்துள்ள குற்றத்தை ஒரு சிறிது உணரலானான், ஆனால் அவனுள் வளர்ந்திருந்த அகங்காரமும் , வெறுமையான செருக்கும் அவனை நல்ல வழியில் மாறவிடாது, ஆட்கொண்டு அலைக்கழித்தன. உடனே தன் தம்பி கும்பகர்ணனை உறக்கத்தினின்றும் விழிக்கச் செய்து, அவனை போருக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டான்.
அங்ஙனமே கும்பகர்ணன் விழிக்கப்பட்டுச் சபைக்கு வந்தான். இராவணன் அவனிடம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலான துயர நிலையை எடுத்துச் சொன்னான். அதைக் கேட்டதும், கும்பகர்ணனுக்குச் சற்றுக் கோபமே வந்து விட்டது. “மற்றொருவனின் மனைவியைக் களவாடி வந்ததால், தலை குனியத் தக்கச் செயலை நீ செய்திருக்கிறாய்! சுத்த வீரனாக இருந்திருந்தால் முதலில் போர் புரிந்து அவனைத் தோற்கடித்து விட்டு அதன் பிறகே அவன் மனைவியைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும். இத்துணை நாட்களும் புகழ்ச்சியுரைகளுக்கு மயங்கியவனாய், நல்ல அறிவுரைகளைப் புறக்கணித்து வந்தாய், இருந்தபோதிலும், எப்படியிருந்தாலும் நீ என் உடன் பிறந்தோன் அல்லனா? எனவே, இப்போது உனக்குக் கை கொடுத்து உதவுவது என் கடமையாகும்,” என்று இராவணனைக் குற்றஞ் சாட்டிப் பேசினான் கும்பகர்ணன்.
இங்ஙனம் கூறிவிட்டு, போர்க்களம் சென்று, இராமரோடும், அவரது படைகளோடும் கடுமையாகச் சண்டையிட்டு, எதிர் தரப்பில் பேரளவில் நாசம் விளைவித்தான். பொறுக்க இயலாது போகவே நீண்ட நேரம் அவனைப் போரிட விடாது இராமர், ஓர் அம்பு எய்து அவனைக் கொன்று விட்டார்.
அடுத்தபடியாக மடிந்தவன் இந்திரஜித். அவன் இலட்சுமணன் கையால் மரணமடைந்தான். மகனை இழந்த இராவணன் சொல்லொணா வேதனையில் துடித்துத் துவண்டான். தான் செய்த தவறுகளையும் ஆழ உணரலானான். அடுக்கடுக்காகவே இடுக்கண்கள் மிகுந்து வரவே, அவன் வெறுப்புற்று, தன்னம்பிக்கையேயற்றவனாகி விட்டான். எனவே, ஒரு சிறந்த வீரனாக, இறுதிவரை போராடுவது என்றே துணிந்து விட்டான்.
தேவ ரதம் ஒன்று அவனுக்காக ஆயத்தம் செய்யப் பெற்றது. அதில் அனைத்துப் போர்க் கருவிகளும் நிரப்பப் பெற்றது. வேகமாக போர்க்களத்தில் புகுந்து தம்மை எதிர்த்த வானர வீரர்களையெல்லாம் வென்று ஒதுக்கித் தள்ளிச் சென்று இராமரைத் தாக்கினான், இராவணன்.
இராமர் வில்லாண்மையில் தாம் அறிந்திருந்த திறமையெல்லாம் காட்டி இராவணனோடு போர் புரிந்தார். தேவர் கோன் இந்திரன், மாதாலி என்ற சாரதியோடு தன் தேரை இராமருக்கு உதவ எண்ணி அனுப்பியிருந்தான். இராமர் அந்த தெய்வீக இரதத்தை முறையாக வணங்கிய பின்னர் அதில் ஏறி அமர்ந்தார். சரமாரியாக அம்புகளை விடுத்து இராவணனது பத்து தலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி வீழ்த்தினார்., ஆனால் அவர் வியக்கும் வண்ணமாக வெட்ட வெட்ட இராவணனது தலைகள் மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்தன. அப்போது மாதாலி இராமருக்கு அகஸ்தியர் தந்திருந்த தெய்வீக அஸ்திரத்தைப் பற்றி நினைவூட்டினான். ஆற்றல் மிகுந்த அந்த அஸ்திரம் வானத்தைக் கிழித்துக் கொண்டு பறந்து, தன் ஆற்றலையெல்லாம் தேக்கி வைத்திருந்த இராவணனது மார்பை ஊடுருவித் தாக்கியது. போர் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து வந்த தேவர்களும், வானரர்களும் பெருமகிழ்வு எய்தும் வண்ணம் இராவணன் மடிந்து கீழே வீழ்ந்தான்.
விபீஷணனால் அண்ணன் இறந்த துயரத்தைத் தாங்கவே இயலவில்லை. இராமர் அவனைத் தேற்றி, “அவன் உன்னுடைய சகோதரன், வீரனாகப் போர் புரிந்து வீர மரணம் எய்தினான் அவன். அவனுக்குரிய மரியாதைகளுடன் ஈற்றுக் கடன்களை முறைப்படி செய்வாயாக ,” என்று ஆறுதல் கூறினார்.
“இராவணன் எத்தகைய மேன்மைமிக்கத் தோற்றம் கொண்டிருந்தான் பார்த்தனையா? காம இச்சையும் அகங்காரமும் இல்லாவிடில், அவனை யாராலுமே வெற்றிக் கொள்ள இயலாது,” என்று இராமர் இலட்சுமணனிடம் இராவணனைப் புகழ்ந்து பாராட்டினார்.
கேள்விகள்:
- போரின் விளைவுகளைக் குறித்து இராவணனைச் சிந்திக்கத் தூண்டியது என்ன?
- கும்பகர்ணன் போருக்குப் போகும்படி கட்டளையிடப் பெற்றபோது அவனிடம் ஏற்பட்ட விளைவுகள் என்ன?
- இராவணனைப் பற்றி இராமரது கருத்து என்ன?