ஆசைகாட்டி அற்புதமாக பளபளத்த பொன்மான்
இராமர், சீதை, இலட்சுமணர் மூவரும் பர்ணசாலையில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். அப்போது வசந்த கால மாதமானதால் மரங்களும், கிளைகளும், புதுத்துளிர் விட்டு பசுமையாக இருந்தன. இயற்கையழகு மனம் கவரும் வண்ணம் சிறந்திருந்தது.
ஒரு நாள் காலை சீதை, மரங்கள், கொடிகளிடையே புகுந்து புகுந்து மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். திடீரென மரங்களின் இடையில் பொற்கதிர்கள் பளீரென ஒளி வீசுவதைக் கண்ணுற்றாள். உற்று கவனித்த போது பொன்னாலான உடலில், வெள்ளிப் புள்ளிகளோடு ஒரு மான் உலவுவதைக் கண்டாள். அந்தப் பொன்மானின் கண்கள் வைரம் போல் மின்னின. சீதை, இன்பப் பரவசத்தில் இதயம் துடிக்க அங்கேயே நின்றாள்., சற்று நேரம். பிறகு இராமரை அழைத்து, “ அன்பே! இங்கு வந்து இந்த மானைப் பாருங்கள் நாம் அயோத்தியாவிற்குத் திரும்பிச் செல்லும்போது, இது ஒரு விலை மதிப்பற்ற பரிசாக அனைவர் கவனத்தையும் கவருமே! தாங்கள் எனக்காக அதைப் பிடித்து நம் குடிலுக்கு எடுத்து வருவீர்களா?” என்று ஆவலோடு கேட்டாள்.
அருகிலிருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இலட்சுமணன் சற்று சிந்தித்தான். பிறகு, “ அண்ணா! இந்த மான் உண்மையான மான் அன்று, நாம் சூர்ப்பணகையை அவமதித்து அனுப்பியதால், அந்த பேய்கள் திட்டமிட்டுச் சில தந்திர வேலைகள் செய்கின்றன. இதுவும் அவற்றில் ஒன்றாக இருக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். இதை பொருட்படுத்தாது விடுவதுதான் நல்லது என்று நான் கருதுகிறேன்.” என்று கூறினான்.
இராமர் சீதையின் வேண்டுகோள் ஒருபுறமும் இலட்சுமணனது எச்சரிக்கை மறுபுறமுமாகத் திண்டாடினார். சற்றுப் பொறுத்து அவர் இலட்சுமணனிடம், “நீ கூறுவது சரியாக இருக்கலாம். எனினும் அதை தொடர்ந்து செல்வதில் தவறேதும் தெரியவில்லையே! அந்த மான் தன் அரக்கத்தனத்தை காட்டித் தந்திரமாக ஏதாவது செய்ய முயன்றால், நான் அதை உடனே கொன்று இங்கு கொண்டு வருகிறேன். அதன் பளபளக்கும் தோலை உரித்து நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளலாம்.” என்றார்.
பிறகு இராமர் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு மான் பின்னாலேயே காட்டிற்குள் சென்றார். செல்லும் முன்பு, இலட்சுமணனை சீதைக்குப் பாதுகாவலாக நிற்கும்படியும், எக்காரணத்தைக் கொண்டும் சீதையைத் தனியே விடுத்து அவன் நகரக் கூடாது என்றும் பணித்தார்.
இலட்சுமணன் காவலாக நிற்க, இராமர், மானைத் தேடிச் சென்றார். “பொன்மான் வந்து விடும் என்ற நம்பிக்கையோடு சீதை அவரது செயல்களைக் கூர்ந்து கவனித்தாள். மான் வேகமாக காட்டுக்குள் ஓடியது. இராமரும் அதை பின் தொடர்ந்து விரைந்து சென்றார். இராமரது பிடியில் அது சிக்கி விடும் போல இருக்கும்போது, துள்ளி, தூர ஓடி அவரைத் திகைக்கச் செய்தது. இது போன்றே துள்ளித் துள்ளிச் சென்று பர்ண சாலையை விட்டு நெடுந்தொலைவு இராமரைக் காட்டின் நடுப் பகுதிக்கே அழைத்துச் சென்று விட்டது அந்த தந்திர மான்.
இறுதியில் அதனுடைய தந்திரத்தை இராமரால் பொறுக்க இயலாது போய் விட்டது. அதைக் கொன்று விட முடிவு செய்து ஓர் அம்பை எய்தார். அந்த அம்பு மானின் உடலைத் துளைத்துச் சென்றது. என்ன விந்தை! பளபளத்த பொன் மான் உடனே ஒரு கொடிய அரக்கனாக மாறியது. மாரீசன் என்ற அந்த அரக்கன் அக்கணமே மடிந்து விழுந்தான். அங்ஙனம் விழும் முன்பு இராமரது குரலைப் போன்று தன் ஒலியை மாற்றி, மிக உயர்த்திய ஓசையோடு, “ஓ இலட்சுமணா! ஓ சீதா!” என்று உரக்கக் கூவினான். அதைக் கண்ட இராமர் செயலற்றுத் திகைத்து நின்றுவிட்டார்.
சீதை இராமரது அபயக் குரலைக் கேட்டாள். நடந்ததை அறியாத அவள் தவறாக எண்ணமிட்டவளாய், இலட்சுமணனிடம், “ உன் அண்ணார் ஆபத்தில் இருக்கிறார். விரைந்து சென்று அவரைக் காப்பாற்று” என்று முறையிட்டாள்.
நடைபெற்றது அரக்கர்களது தந்திரமான நாடகமே; வேறொன்றும் நிகழ்ந்து விடவில்லை, என்று இலட்சுமணன் முழுமையாக உணர்ந்திருந்தான். அதனால். அவன் சற்றேனும் கலங்காமல், சீதையிடம், “ அன்னாய்! அரக்கர்களால் இராமருக்குச் சிறு துன்பம் கூட விளைவிக்க முடியாது. அவர் யாராலும் வெல்ல முடியாதவர். நான் தங்களை இங்குத் தனியே விட்டுவிட்டுப் போக முடியாது” என்று உறுதியாகச் சொன்னான். சீதையோ மன உறுதியெல்லாம் தளர்ந்து போய், சிந்திக்கும் திறனையே இழந்து விட்டிருந்தாள். “இலட்சுமணா! உன்னுடைய உண்மையான தன்மை இப்போது தான் எனக்குப் புரிகிறது. என் கணவர் கொல்லப்பட்டு விட்டால் என்னை கைப்பற்றிக் கொள்ளலாம் என்று இத்தகைய வாய்ப்புக்காக இத்துணை நாட்கள் காத்திருந்தனையா? ஒன்று மட்டும் நினைவில் நிறுத்திக்கொள். சீதை தன் கணவர் இராமரைத் தவிர வேறு யாரும் தொடக் கூட முடியாதவள். நீ இப்போது இங்கிருந்து போகாவிட்டால், தீ வளர்த்து அதில் விழுந்து பலியாவேன்,” என்று இலட்சுமனணைக் குற்றஞ்சாட்டி கொடுஞ்சொற்களை வீசினாள் சீதை.
நெருப்புத்துண்டங்கள் சுட்டு விட்டது போன்று மனம் நொந்து போக வைத்த கடுமையான பேச்சினைக் கேட்ட பிறகு, இலட்சுமணன் இராமரைத் தேடி போக முடிவு செய்தான். இருந்தபோதிலும், போகும் முன்பு. அரக்கர் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் என்ன நேர்ந்தாலும், எத்தகைய காரணமாக இருந்தாலும், குடிலின் கதவைத் தாண்டி வெளிவர வேண்டாம் என்று சீதையிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டான்.
சீதை தனித்து விடப்பட்டாள். கதவைப் பற்றிக் கொண்டு அவள் நின்று கொண்டிருந்தபோது திடீரென குடிலின் முன் பிச்சைக்காரன் ஒருவன் அணுகி நிற்பதைக் கண்ணுற்றாள். அந்த பிச்சைக்காரன் வேறு யாருமில்லை. அரக்க மன்னன் இராவணனே அவன். சீதையின் பேரழகில் மதி மயங்கி அவளையே வெறித்து நோக்கியவாறு அவன் நின்றிருந்தான். அவனுடைய காமவயப்பட்ட பார்வையைத் தாங்க இயலாத சீதை குடிலுக்குள் சென்று விட திரும்பினாள். உடனே திடுமென இராவணன் பாய்ந்து சென்று அவள் கைகளை எட்டிப் பற்றி அவளை வெளியே இழுத்தான். அவனது செயலால் துவண்டு, தன்னை விடுவித்துக் கொள்ள முயன்ற சீதையை, வானத்தில் பறந்து செல்லும் தன்னுடைய தேருக்கு எடுத்துச் சென்றான். அவன் வரவிற்காக அண்மையில் நின்றிருந்த தேர், உடனே மேலே கிளம்பி, தெற்கு நோக்கிப் பறந்தது. என்ன செய்வாள் சீதை? காட்டில் வசிப்பவர்கள் அனைவரும் கேட்டுத் தனக்கு உதவ வரமாட்டார்களா என்ற எண்ணத்தோடு, உணர்ச்சிவசப்பட்டு பித்து பிடித்தவள் போல வாய் விட்டு உரக்க அழுதாள். அவளது ஓலக் குரலை கழுகுகளின் அரசனான ஜடாயு என்ற பறவை கேட்டான். ஒரு மரத்தில் அமர்ந்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்த ஜடாயு சீதையின் குரலொலி கேட்டவுடன் பலம் வாய்ந்த தன் சிறகுகளை விரித்துப் பறந்து சென்று இராவணனைத் தடுத்து நிறுத்த முயன்றான்.
சீதைக்கு ஊறு ஏதும் விளைவிக்காது விட்டுவிடும்படியும், இராமர் உலகிலேயே உன்னத உறுதி வாய்ந்தவராகையால், அவர் வெகுண்டெழுந்தால் இராவணனைக் கட்டாயம் கொன்று விடக் கூடிய ஆற்றல் பெற்றவர் என்றும் ஜடாயு முதலில் நயமாக இராவணனுக்கு எடுத்துரைத்தான். இராவணனோ ஜடாயுவின் அறிவுரையைப் பொருட்படுத்தவேயில்லை. ஜடாயு, பின்னர் தன்னால் இயன்றவரை இராவணனோடு போராடிப் பார்த்தான். இராவணனது தேரை நொறுக்கினான். கூரிய அலகால் இராவணனைக் கொத்தி அவனது உடலில் பல காயங்களை உண்டாக்கினான். ஆனால் வயதான ஜடாயு நீண்ட நேரம் வலிமை மிக்க இராவணனுக்கு ஈடு கொடுக்க முடியுமா? விரைவில் களைத்துச் சோர்ந்து போய் விட்டான் ஜடாயு. உடனே விர்ரென்று கத்தியைச் சுழற்றி ஜடாயுவின் இறக்கைகளைத் துண்டித்து விட்டுச் சீதையுடன் இலங்கைக்கு பறந்து சென்று விட்டான் இராவணன். சிறகுகள் வெட்டப்பட்டு பறக்கமுடியாமல் பலத்த அடிபட்டு ஜடாயு கீழே துவண்டு விழுந்தான்.
கேள்விகள்:
- பொன்மானிடம் சீதை எங்ஙனம் ஆசை வைத்தாள்?
- பொன் மானைப் பற்றி இலட்சுமணனுடைய கருத்து என்ன?
- சீதை இராமரை எப்படி இழக்க நேரிட்டது?