விபீஷணன் இராமரிடம் சரணாகதி
தமையன் தன் அறிவுரையை மறுத்த பின்னரும், மீண்டும் ஒரு முறை இராவணனது கெடுமதியை மாற்ற முயன்றான் விபீஷணன். சபை கூடத்திலேயே இராவணனது அடிகளில் பணிந்து, காற்றின் வேகம் எந்த பக்கம் திரும்பியிருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டான். அவனது சொற்களாலும் செயலாலும் இராவணனது கோபம் வெடித்துச் சீறி எழுந்தது. விபீஷணனை, மார்பில் எட்டி உதைத்து, உருட்டித் தள்ளி, “நம்பிக்கை துரோகி” என்று இரைந்து திட்டினான்.
விபீஷணனால் இத்தகையக் குற்றச்சாட்டையும், அவமதிப்பையும் தாங்கவே இயலாது போயிற்று. தம்மோடு சேர்ந்திருந்த நான்கு பேர் பின் தொடர அவன் சபையை விட்டு அகன்றான். இராமரது திருவடிகளே தங்களுக்குச் சிறந்த இடம் என்று தீர்மானித்தான். எனவே அவர்கள் ஐவரும் கடலின் மேல் பறந்து சென்று வானர படை தங்கியிருந்த இடத்தை அடைந்தனர்.
வானர காவலர், வானத்தில் ஐந்து கடுமையான உருவங்கள் வருவதை பார்த்து அவர்களைக் கொல்ல ஆயத்தமாயினர். உடனே விபீஷணன், “நாங்கள் எதிரிகளல்லர். இராமரது பாதக் கமலங்களில் தஞ்சம் புக வருகிறோம்” என்று உரக்கக் கத்தினான். பின்னர் ஐவரும் கீழே இறங்கி, இராமரிடம் அழைத்துச் செல்லப் பெற்றனர். விபீஷணன் இராமரது திருவடிகளில் பணிந்து அபயம் அளிக்க வேண்டினான்.
நடந்தனவற்றை கவனித்துக் கொண்டிருந்த சுக்ரீவன், விபீஷணனைத் தங்களோடு சேர்த்துக் கொள்ளப் பெறுவதற்குக் கடுமையான எதிப்பு தெரிவித்தான். “இவர்கள் ஐவரும் இராவணனது ஒற்றர்களே! அதனால் இவர்களைக் கொன்று தான் விட வேண்டும்,” என்று துடித்தான், இராமர் அமைதியாக இருந்தார் சற்று நேரம். பிறகு இலட்சுமணன், அங்கதன், அநுமான் மூவரையும் கலந்து ஆலோசித்தார். இலட்சுமணனும் சுக்ரீவன் கருத்துப்படி விபீஷணனைச சேர்த்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்தான். அங்கதன் சிறுவனானதலால், பெரியோர் கருத்துப்படி நடக்கும்படி பணிவாகச் சொன்னான். அநுமான் முன் வந்து, தாங்கள் எல்லோரையும் விட நான் அதிகம் தெரிந்தவனல்லன். எனினும், தாங்கள் என்னை கேட்பதால், விபீஷணனைச் சேர்த்துக் கொள்வது நல்லது, என்றே கூறுவேன். ஏனெனில் நான் இலங்கை சென்றபோது, அவன் வீட்டிலிருந்து வேத மந்திர ஒலி கேட்டது. அவனும், அன்றாட வழிபாடு வந்தனைகளில் ஒழுங்காக ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். மற்றும், அவனது அமைதியான பண்பினால் அவன் அங்கு சிறந்து விளங்கினான். இராவணனது தீச் செயல்களில் எப்போதும் சேராதவன் அவன்.” என்று தம் கருத்தைக் கூறி முடித்தார்.
சுக்ரீவனுக்கு அப்போதும் ஐயம் தீரவில்லை, “ஐயனே! தன் தமையனோடு சண்டையிட்டுக் கொண்டு வந்து விட்ட ஒருவனை நாம் எப்படி நம்புவது? அதே போல அவன் நாளையே நம்மோடு மனவேறுபாடு கொண்டு சென்று விட்டால்!. “என்று தன் ஐயத்தை வெளியிட்டுக் கேட்டான்
இராமர் புன்னகைத்தார். “உன்னுடைய வரலாற்றை இவ்வளவு விரைவில் மறந்து விட்டனையா? உன்னுடைய தமையனோடு சண்டையிட்டுக் கொண்டு தானே நீ என்னை அடைந்தாய்!” என்றார்.
மேலும், “அன்பு தோழனே! இராவணனைப் பிரிந்து வந்ததற்கு விபீஷணனுக்கு ஒரு காரணம் இருந்தது. நம்மைவிட்டு அகல அவனுக்கு என்ன காரணம் ஏற்பட இயலும்? அதுவன்றி, அடைக்கலம் கேட்டு வந்தவரை, அபயம் தந்து ஆதரிப்பது, க்ஷத்திரியன் என்ற முறையில் என் தர்மமாகும்,” என்று உறுதியாகக் கூறினார்.
பிறகு விபீஷணனை அருகே அழைத்து தம்மோடு சேர்த்து அணைத்துத் தம் தோழமையை நல்கி உறுதி கூறினார். வானரர்களை கடல் நீர் கொண்டு வரச் செய்து, மிக எளிய முறையில், விபீஷணனுக்கு, இலங்கை மன்னனாக, முடிசூட்டு விழாவை நிகழ்த்தினார்.
சுக்ரீவனுக்கு மேலும் ஓர் ஐயம் ஏற்பட்டது. தயங்கியவாறு இராமரிடம், “ஐயனே! ஒரு வேளை இராவணனே தங்களிடம் வந்து பாதுகாப்பு கேட்டால் அவனுக்கும் நல்குவீர்களா?” என்று கேட்டான். “கட்டாயம் நான் வழங்குவேன், அவனுக்கு என் அயோத்தியா நாட்டைத் தருவேன்,” என்று அமைதியாக விடையளித்தார் இராமர்.
குழுமியிருந்த அனைவரும் அவரது நேர்மையானப் பண்பினைக் கண்டு திகைத்தனர்.
கேள்விகள்:
- விபீஷணன், இராவணனது அரச சபையை விட்டு ஏன் வெளியேறினார்?
- சுக்ரீவனுடைய ஐயங்கள் என்ன? இராமர் எப்படி விளக்கி அவற்றைப் போக்கினார்?
- விபீஷணனைச் சேர்த்துக் கொண்டதனால், இராமர் என்னென்னன நல்லியல்புகளை வெளியிட்டுக் காட்டினார்?