விசுவாமித்திரரது வேண்டுகோள்
இராமர், இலட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகிய நால்வரும் தசரத மன்னரின் புத்திரர்களாவர். அவர்கள் நால்வரும் வளர, வளர, குறிப்பிடத்தக்கச் சிறப்பியல்புகளைப் பெற்றுத் திகழ்ந்தனர். இராமர், கடமையுணர்வு, சத்தியம் இரண்டிலும் நிலை பிறழாத பற்றுதல் கொண்டிருந்தார். இலட்சுமணன், எதிலும் கண்டிப்பான இயல்பும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய மனப்பாங்கும் பெற்றிருந்தான். பரதன், பெருந்தகைமையான மாண்பும், கடமையுணர்ச்சியும் கொண்டவனாக இருந்தான். சத்ருக்னனுக்கு, அன்பும், பொறுமையான பணிவுமே அணிகலன்களாக அமைந்திருந்தன. தசரத மன்னர் தம் மக்கள் நால்வருக்கும், போர்ப்பயிற்சி, வில்லாண்மை உட்பட அனைத்துக் கலைகளையும், தக்க முறையில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்து, அவற்றில் அவர்கள் சிறப்புற விளங்கச் செய்தார். தலைசிறந்து விளங்கும் தம் மக்களை பார்த்துப் பார்த்து, அவர் பெருமையும் மகிழ்வும் பெரிதும் பெற்று வந்தார்.
காலம் இங்ஙனம் இனிதே கழிந்து வந்தது. அப்போது ஒரு நாள், விசுவாமித்திர முனிவர் அரசரைக் காண வந்திருப்பதாக அரச சபையில் காவலர் வந்து அறிவித்தனர். உடனே தசரதர் தம் சிம்மாசனத்திலிருந்து எழுந்து, விரைந்து சென்றார். முனிபுங்கவரைப் போற்றி வணங்கி, சபைக்கு அழைத்து வந்து அமரச் செய்தார். முனிவர் தம்மை நாடி வந்த காரணத்தைப் பணிவோடு வினவினார். முனிவரது விருப்பம் எதுவாயினும், தாம் அதை நிறைவேற்றி வைப்பதாக உறுதி கூறினார். மன்னரது வேண்டுகோளுக்கிணங்க விசுவாமித்திரரும் தம்முடைய விருப்பத்தைத் தெரிவிக்கலானார்.
“நேர்மையான செயல்கள் சரிவர நடைபெற தக்கப்பாதுகாப்பு அளிப்பது அரசரது கடமையாகும். பெரிய அளவில் நான் ஒரு யக்ஞம் துவங்கியுள்ளேன். ஆனால் அசுரர்கள் அடிக்கடி வந்து, அதைக் கலைத்துத் தொல்லை தருகிறார்கள். அந்த அசுரர்களைத் தண்டித்து யக்ஞம் சரிவர நடைபெறப் பாதுகாக்கக் கூடியவன், உன் மகன் இராமன் தான் என்பது என்னுடைய உறுதியான கருத்து” என்று கூறினார் அவர்.
அதைக் கேட்டதும் தசரதர் செய்வதறியாது செயலற்று நின்று விட்டார். இத்தகையான கடுமையான பணியை ஏற்பதற்கு இராமன் சிறுவனாயிற்றே என்று மெதுவாகப் பணிவோடு கூறினார். விசுவாமித்திரரது யக்ஞத்தைக் காப்பாற்ற, தாமே தலைமை தாங்கி, அயோத்தியிலுள்ள தம் படை பலம் முழுவதையுமே செலுத்தி, அசுரர்களை அழிப்பதாகக் கூறினார்.
ஆனால் தசரதரது மொழிகள், விசுவாமித்திரருக்கு நிறைவைத் தரவில்லை. மாறாக மிகுந்த கோபத்தை உண்டு பண்ணி விட்டது. உடனே அவர் தம் இருக்கையினின்றும் வெகுண்டு எழுந்தார். தசரதர் தம் உறுதி மொழியினின்றும் தவறுவதாக இகழ்ந்து உரைத்தார்.
அப்போது, அயோத்திய அரசர்களின் குருவான வஸிஷ்டர் சூழ்நிலை இறுக்கமாவதை உணர்ந்து, குறுக்கிட்டு சரி செய்ய முயன்றார். அவர் தசரதரிடம், “அரசே! விசுவாமித்திரர் சிறந்ததோர் முனிவராவார். இராமன் சிறுவனாயிருந்த போதிலும் அசுரர்களை அழித்து, யாகத்தைப் பாதுகாக்கும் வல்லமை பெற்றவன் என்பதை அவர் நன்கு அறிவார். அதனால் தயக்கமின்றி, இராமன் இலக்ஷ்மணன் இருவரையும் முனிவருடன் அனுப்பு. உண்மையில் கூறப்போனால், இது உன் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமே ,” என்றார்.
வஸிஷ்டரது அறிவுரையைக் கேட்ட பிறகு, தசரதர், இராம இலக்ஷ்மணர் இருவரையும் உடனே அரச சபைக்கு வரவழைத்தார். இராமர், தம் அன்னை, தந்தை, ஆசிரியர் வஸிஷ்டர், ஆகியோரது பாதங்களில் பணிந்து வாங்கினார். பிறகு விசுவாமித்திரருக்கும் தம் வணக்கங்களைத் தெரிவித்தார். அதன் பின்னர், தசரதர் அவர்களிருவரையும், முனிவரோடு சென்று, அவருடைய கட்டளைகளைச் சரிவர நிறைவேற்றப் பணித்து அனுப்பினார்.
அரச குமாரர்களது முதல் வீர நிகழ்ச்சி
விசுவாமித்திரர் யக்ஞத்திற்குப் பாதுகாப்பு அளிக்க ராமர்,இலக்ஷ்மணர் ஆகிய இருவருடன் சேர்ந்து சரயு நதிக்கரையில் அன்று இரவு தங்கினார். அங்கு அவர் அவர்களுக்குச் சோர்வு, தீங்கு இவற்றிலிருந்து காப்பாற்றக் கூடிய பலை மற்றும் அதிபலை மந்திரங்களைக் கற்பித்தார். மற்றும் பல தெய்வீக அஸ்திரங்களையும் அவர்களுக்குக் கற்றுத் தந்தார். மறு நாள் காலை அங்கிருந்து புறப்பட்டு அவர்கள் கங்கை நதியைக் கடந்து சென்று தண்டக வனத்தை அடைந்தனர்.
தண்டக வனத்தில் அவர்கள் தாடகை என்ற அரக்கியைக் காண நேரிட்டது. அவள் பல யானைகளின் பலத்தை ஒருங்கே பெற்றவள் என்ற புகழ்பெற்றவள். விசுவாமித்திரர் உடனே தயக்கமின்றி அந்த அரக்கியைக் கொல்லும்படி இராமரைப் பணித்தார். அவள் ரிஷிகளுக்கும், யாகங்களுக்கும் ஐயமின்றி நெஞ்சில் ஈரமின்றி, தீங்கு விளைவிப்பவள் என்றும் கூறினார். இராமர் விசுவாமித்திரருடைய சொற்களுக்கிணங்கி அடுத்த நொடியே தாடகையை அம்பு எய்துக் கொன்று விட்டார்.
அதன் பிறகு அவர்கள் விசுவமித்திரரது இருப்பிடமான சித்தாஸ்ரமம் சேர்ந்தனர். மறுநாள் காலை, முனிவர், தம் தூய்மையான துணைவர்களுடன் யக்ஞத்தைத் துவங்கினார். அப்போது அரக்கர் வந்து, இடையில் புகுந்து, தொல்லை தராதவாறு இராமரும், இலட்சுமணரும் காவல் காத்து நிற்கக் கேட்டுக் கொள்ளப் பெற்றனர். ஆறு நாட்கள் அமைதியாகச் சென்றன. ஆறாவது நாள், வானம் முழுதும் அரக்கர் படையால் நிரம்பியது. மாரீசனும், சுபாஹுவும் அந்தப் படைகளுக்குத் தலைமையாக வந்தனர். பேய்கள் போன்ற அவ்விருவரும், சோதியாக எரியும் தெய்வீகமான யக்ஞ அக்னி மீது, அசுத்தமான இரத்தத்தையும் இறைச்சி துண்டுகளையும் வாரி இரைக்க ஆயத்தமாக இருந்தனர். இராம இலட்சுமணர் இருவரும், அரக்கரது ஆணவத்தைக் கண்டு, அந்த அறை கூவலை உற்சாகத்தோடு ஏற்றனர். உடனே வலிமைமிக்க அஸ்திரங்களை அவர்கள் மீது ஏவினர். அவை சுபாஹுவைக் கொன்று, மாரீசனை கடலுக்கு அப்பால் ஆயிரம் யோசனை தொலைவு விரட்டியடித்தன.
விசுவாமித்திரர், இங்ஙனம் மனம் மகிழ, வெற்றிகரமாக யக்ஞத்தை முடித்தார். அடுத்த நாள் காலையில் ஜனக மன்னரது தலைநகரமான மிதிலை நகருக்குப் போகப் போவதாக அறிவித்தார். அங்ஙனம் போவது இலட்சுமணருக்கு விருப்பமில்லை. யக்ஞத்தைக் காக்க வந்த பணி முடிந்தவுடன், அயோத்தி திரும்ப வேண்டியது தான் நல்லது என்று வாதிட்டார். ஆனால் இராமர், “அன்பின் தம்பி, நம் தந்தையார் முனிவரது கட்டளைகளைத் தவறாது பின்பற்றப் பணித்துள்ளார். எனவே அவரது விருப்பப்படி நடப்பது நம் கடமை,” என்று கூறி இலட்சுமணரை அமைதிப் படுத்தினார்.
அதன் பின்னர் அங்ஙனமே, இராம இலட்சுமணர் பின் தொடர விசுவாமித்திரர் மிதிலை நகருக்குப் பயணமானார்.
கேள்விகள்:
- தசரதர் இராம இலட்சுமணர்களை விசுவாமித்திர முனிவரோடு அனுப்ப ஏன் தயங்கினார்?
- அரச சபைக்கு வந்ததும், இராமர் ஏன் முதலில் அன்னை, அடுத்து தந்தை, பிறகு தம் குரு, இறுதியாக, சபைக்கு வந்துள்ள விசுவாமித்திரர் என்று அவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்கினார்?