பகவவத்கீதைக்குப் பொதுவான
முன்னுரை
அத்தியாயம் வாரியான சுருக்கவுரை
பகவத்கீதை பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் “யோகம்” என்ற சொல்லுடன் முடிவுறும். யோகம் என்ற சொல்லுக்கு “இறைவனுடன்” சேர்தல் என்றும் பொருள். “இறைவழி” என்றும் பொருள் கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொரு அத்தியாயமும், மனிதன் உய்யும் பொருட்டு பரிபூரணத்துக்கான வழியைத் தெரிவிப்பது’ என்று பொருள் கொள்ளவேண்டும். கீதை உலகத்துக்குப் பொதுவான மறைநூலாகும். அது, மனிதன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயினும், எத்தகைய மன வளர்ச்சி நிலையிலும் ஆன்மீக வளர்ச்சி நிலையிலும் இருப்பினும், அவனுக்கு உகந்த உபதேசத்தை அளிக்க வல்லதாகும். அது மனிதனுடைய அறநெறித் தேவைகளையும் அறிவு நாட்டத்தின் தேவைகளையும் ஆன்மீக நாட்டத்தின் தேவைகளையும் நிறைவிக்கிறது. வரலாற்றின் படி புராண காலத்தில் நடைபெற்ற மகாபாரதப் போரினைப் பின்னணியாகக் கொண்டு, நம் இதயத்தில் நல்நாட்டங்களுக்கும், தீய நாட்டங்களும் இடையே இடைவிடாது நிகழ்கின்ற போராட்டம் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. அப்போரின் துவக்கத்தில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நன்மையைச் செய்வதையே இடைவிடாத முயற்சியாகக் கொள்ள வேண்டும் என்றும், நமது செயல்களைப் பற்றுறுதியுடன் (Faith)புரிந்து அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்தல் வேண்டுமென்றும் நமது கடமைகளை அவற்றிற்குரிய ஒழுக்கத்துடனும், சமர்ப்பண பாவனையுடனும், பலனைத்தானே அனுபவிக்க வேண்டுமென்ற பற்றில்லாமலும், புரிய வேண்டுமென்றும் உபதேசித்தருளியுள்ளார், தவிர, இருக்கும் எல்லாவற்றுடனும், எல்லாவுயிர்களுடனும் கொண்டுள்ள ஒருமைத் தன்மையினை அறிந்து, புரிந்து, அனுபவிக்க முயல வேண்டும் என்றும் கூறுகின்றார். மகாபாரதப்போரில் கௌரவர்களும் பாண்டவர்களும் எதிரெதிராக அணிவகுத்து நின்றனர். கௌரவர்கள் தீய சக்திகளையும், பாண்டவர்கள் நல்ல சக்திகளையும் குறிப்பவராவர். (இவ்விரண்டு சக்திகளுக்கும் இடையே இடைவிடாத போராட்டம் நம் இதயத்திலும் நிகழ்கிறது. ஒவ்வொன்றும் மற்றதை வெல்வதற்கு இடைவிடாது முயல்கிறது.)
தீயவர் கூட்டமாகிய கௌரவர்களின் தந்தையும், அரசனுமான திருதராஷ்டிரன் பிறவிக்குருடர். அவரது ஊனக்கண்கள் மட்டுமல்ல, அறநெறி விழிகளும், ஆன்மீக விழிகளுமே குருடானவை. தமது தீய மக்களிடம் குருட்டுத் தனமாகப் பற்றுடனிருந்தார். (ஸ்வஜாதிய, விஜாதீய பேதங்கள்) ‘எனது’ ‘மற்றது’ என்ற வேறுபாடுகள் அவரது அறிவினைக் குருடாக்கின. இத்தகைய பற்றுதல், நீதியைக் காத்து நிலைநிறுத்த வேண்டிய அரசனது கடமையிலிருந்து அவரை வழுவச் செய்தது. “மாமகா: பாண்டவஸ்சை வ” – எனது மக்களுக்கும் பாண்டவர்களுக்கும் நிகழ்கின்ற போரில் நடப்பது என்ன என்று (எனது மற்றது என்ற மனவேறுபாட்டுடன்) சஞ்சயனைக் கேட்கின்றார். சஞ்சயன் அப்போது என்ன நடந்தது என்பதை வருணிக்கத் துவங்குகின்றார். போர் ஆரம்பிக்கும் தருணத்தில் ஏற்பட்ட அருச்சுனனின் மாபெரும் பிரச்சினையையும், தளர்ச்சியினையும் பற்றி விவரிக்கத் துவங்குகின்றார்.
போர் தொடங்கும் தருணம்; எல்லோரும் தயாராக இருக்கும் வேளை; தனது மதிப்பிற்குரிய பெரியோரும், உற்றாரும், உறவினரும் எதிரியின் படையில் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போரின் பயங்கரமான பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கும் போது, அருச்சுனனின் மனது துக்கத்தினால் பீடிக்கப்படுகிறது. “வெறும் மண்ணரசுக்கு ஆசைப்பட்டு, எனது உற்றார் உறவினருடன் போரிட்டுக் கொல்ல நேரிடுகின்றதே! சிறுவயதிலேயே தந்தையை இழந்த என்னைச் சீராட்டிப் பாராட்டி மடிமேல் வளர்த்து, என்னை உயர் மனிதனாக்கிய வணங்கத்தகுந்த பீஷ்மருடன் போரிடும்படி நேர்ந்துள்ளதே! தன் மகனைப்போன்று என்னைக் கருதி, மகனைவிட என்னை அதிகமாக நேசித்து, தான் கற்றவற்றையெல்லாம் எனக்குக் கற்பித்து, என்னைத் தலைசிறந்த வில்லாளியாக உருவாக்கிய வணங்கத்தகுந்த ஆசிரியரான துரோணரையே எதிர்த்துப் போரிட்டு அவரையே கொல்லும்படியாகக் கூட நேரிடுமே!” என்றிவ்வாறாகச் சிந்தித்து முழுவதும் மனங்குழம்பினான். தனது உற்றார் உறவினரிடமும், குருவினிடமும், நண்பர்களிடமும் அவன் கொண்ட பற்றுதல் அவனது அறிவைக் குருடாக்கி, தன் உயிரைக் கொடுத்தாவது நீதியை நிறுத்தவேண்டும் என்ற மன்னனின் (சத்திரியன்)கடமையிலிருந்து அவனை வழுவச் செய்தது. எது சரியானது, எது தவறானது என்பதை அறிந்து முடிவு செய்ய இயலாமல், அறிவுகுழம்பி, மனமுடைந்து, ஸ்ரீகிருஷ்ணபிரானின் பொற்பாத கமலங்களைச் சரணடைந்து, தனக்கு நல்வழி காட்டும்படி அவரை வேண்டினான். இறைவன், ஆற்றவேண்டிய கடமையின் ஒப்பற்ற சிறப்பினைப் பற்றிக்கூறி, எவ்வாறு பேருண்மையின் பின்னணியில் பற்றற்ற மனதுடன் செயல்புரிய வேண்டும். என்பதை விளக்கினார். இறைவனின் உபதேச மொழிகளைக் கேட்ட அருச்சுனன் மனம்தேறிப் புத்துணர்வு பெற்றுத் தனது கடமையினை இறைவனுக்கு அர்ப்பணமாக, இறைவனை அடைவதற்கான யோக சாதனமாகச் செய்யத் துணிந்தான். இறைவன், அருச்சுனனுக்கு அருளிய இந்த உபதேசம், எல்லோருக்கும் பொருந்துவது, எக்காலத்துக்கும் பொருந்துவதாகும். இந்த உபதேசமானது வியாசமுனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதத்தில் இடம்பெற்ற பகவத்கீதையாக அருளப்பட்டதாகும். கீதையானது பதினெட்டு அத்தியாயங்களும் 700 ஸ்லோகங்களும் கொண்டது. கீதோபதேசம் உபநிடதங்களின் சாரமாகும்.