ஒவ்வொரு யோகத்தின் சிறப்பையும் விளக்கும் கதைகள்:
கீதை ஜீவ – பிரம்ம ஐக்கியத்துக்கான பல வழிகளை பல யோகங்களைக் கற்பிக்கிறது. அந்த ஐக்கியம், இயேசு பிரான் கூறிய உருவகக் கதையான “ஊதாரி மகன்” கதையில், ஊதாரி மகன் மறுபடி நேச மிகுந்த தன் தந்தையின் வீட்டுக்குத் திரும்புவதைப் போன்றது. வாழ்க்கையின் கொந்தளிப்பிலிருந்து ஜீவன் விடுபட்டு தனது உண்மை இயல்பாகிய ஒப்பற்ற அமைதியை, ஆனந்தத்தை, மங்களத்தை அடைகிறது. அதுவே இறைவனின் தன்மையும் இயல்புமாகும்.
பிரபு கிருஷ்ணனால் கீதையில் உபதேசிக்கப் பட்ட பலவகை வழிகள் பின்வருமாறு:
-
- கர்மயோகம் (செயல்வழி)
நியமிக்கப்பட்ட கடமைகளை ஒருவன் முறை தவறாது ஆற்றவேண்டும். பலனில் ஆசை வைக்கலாகாது, செயல் முழுமையான திறமை கொண்டதாகவும், பூரணமாகவும் இருக்க வேண்டும். “யோக: கர்மஸுகௌஸலம்” என்று கூறப்படுகிறது. கர்மயோகி பற்றுதலில்லாது, அகங்காரமில்லாது, செயலையும் அதன் பயனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துச் செயல்படுகிறான். அவன் எப்போதும் சமூகத்தின் நலனுக்கும், எல்லோரின் நலனுக்குமாக, சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறான்.
-
- பக்தியோகம் – பக்தி வழி (பக்தியுணர்ச்சி வழி)
பக்தி யோகத்தில் ,கடவுளிடம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியால் மனிதன் தூண்டப்படுகிறான். பக்தன் உணர்ச்சிகள் மிகுந்தவன். ஆனால் அவனது எல்லா உணர்வுகளும் உணர்ச்சிகளும் அவனது பக்திக்குப் பாத்திரமான கடவுளையே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். கடவுளை வழிபடுவதில் அவன் மிகவும் ஆனந்தமடைகிறான். அவன் பக்தி முதிரும் போது அவனது கண்ணோட்டம் மாறுகிறது. உலகம் முழுவதும் இறைவனால் மட்டும் நிரம்பப் பெற்றுள்ளது என்பதைக் காண்கிறான்.
-
- ராஜயோகம்: (மனக்கட்டுப்பாட்டின் வழி) அல்லது(அறிவுணர்வின் வழி)
மனதை அசைவற்றிருக்கச் செய்வதன் மூலம், மனத்தின் கொந்தளிப்புகளை சமனப்படுத்துவதன் மூலம், ஆத்மாவை ஒரே முக நோக்குடன், தியானம் செய்வதன் மூலம், ஜீவன் கைவல்ய நிலையை அடைகிறான். தான் என்றும் பரிசுத்தமானவன், கவடில்லாதவன், மாறாதவன், நித்தியமானவன், பிரகிருதியினின்று வேறுபட்டவன் என்பதை அறிகிறான்.
-
- ஞானயோகம் (அறிவின்வழி)
ஞானயோகத்தில், தனது உண்மையிருப்பு என்ன என்று அறிவு விசாரிக்கத் தொடங்குகிறது. இதற்கு வலிமையான தீர்மானம்(will) வேண்டும். முதலில் ஒவ்வொன்றையும் நானில்லை என்று விலக்குகிறது. முடிவில் உண்மையிருப்பை ஆத்மாவை, சலனமற்ற
உள்ளுணர்வால் அனுபவிக்கிறது. அறிந்த ஞானி எல்லாவற்றிலும் தன்னையும், தன்னில் எல்லாவற்றையும் காண்கிறான். அவனைப் பொருத்தவரையில், அவனே ஆத்மா, இவ்வுலக முழுவதும் இவ்வுலகிலுள்ள அனைத்தும் ஆத்மாவே தவிர வேறல்ல; ஆத்மாவிலிருந்து, கடவுளிலிருந்து வேறுபட்டது வேறு எதுவுமே இல்லை.
மனிதர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலையும், வெவ்வேறு மனோபாவமும் கொண்டவர். ஆகவே பல்வேறு மக்களுக்குத் தகுந்தவாறான பல்வேறு வழிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சுறுசுறுப்பான தன்மையுள்ளவனுக்கு,கர்மயோகம் பொருத்தமானது. உணர்ச்சி வசப்படுபவனுக்கு, பக்தியோகம் பொருந்தும். ஆராயும் தன்மை உள்ளவனுக்கு ஞானயோகம் ஏற்றது. உணர்ச்சியும், அறிவுக் கூர்மையும் ஒருங்கு சேர அமைந்தவனுக்கு, ராஜயோகம் பொருத்தமாகலாம். யோகங்கள் அனைத்தும் ஓரிடத்தில் முடிகின்றன. அதுவே தெய்வீகப் பேருணர்வு அல்லது தன்னையறிந்த நிலை. இடைவழியில், முழுநிறைவு அடையாத போது, ஒரு யோகம் மற்றதைவிடச் சிறந்ததாகத் தோன்றும். ஆனால் முடிவான நிலையில் கர்மயோகியே பக்தனுமாவான், ஞானியுமாவான் .இதுபோலத்தான் ஒவ்வொருவரும்.