அமைதி
அமைதி சத்தியத்தைத் தொடர்கிறது மற்றும் தர்மம் ஒரு அனுபவமாகும். மனிதன் அமைதியை உணர மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு எண்ணம் மற்றும் சொல்லில் சத்தியத்தையும், செயலில் தர்மத்தையும் பின்பற்றும்போது அது அமைதிக்கு வழிவகுக்கும்.
அமைதியைப் பெற மனிதன் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வேதங்கள் வலியுறுத்துகின்றன. மனதைக் கட்டுப்படுத்தும்போது அது அமைதி நிலையில் இருக்கும். அத்தகைய நிலையே உண்மையான அமைதியாகும்.
புறப்பொருட்களால் அடையப்பெறும் அமைதி அல்லது மகிழ்ச்சி நீடித்திருப்பதில்லை என்பதை தலைமுறைகளின் அனுபவங்கள் காட்டுகின்றன. இது மாயத்தோற்றம் போன்றதே. உண்மையான அமைதியின் ஆதாரம் உள்ளேயே இருக்கின்றது. அந்த உள்அமைதியே உண்மையான மகிழ்ச்சியைத் தரவல்லது. அமைதியின்றி ஆனந்தம் அடைய முடியாது என்பதை தியாகராஜ சுவாமிகள் தன் பாடல் ஒன்றின் மூலமாக உலகத்திற்கு அறிவித்து இருக்கின்றார்.
கோடாரி கொண்டு வெட்டும்போது கூட நறுமணத்தைப் பரப்பும் சந்தன மரத்தைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும். ஊதுபத்தியை ஏற்றினால் அது தன்னைத்தானே எரித்துக் கொள்கிறது. ஆனால் அது சுற்றிலும் நறுமணத்தைப் பரப்புகிறது. அதுபோன்றே ஒரு உண்மையான சாதகன், உண்மையான பக்தன் அனைத்து சூழலிலும் தன்னுடைய அமைதியைத் தக்க வைத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் பார்க்க வேண்டும்.
இங்கு பட்டியலிடப்பட்டுள்ள கதை கோபத்தை வெல்வது பற்றியதாகும். உள் எதிரிகளை வெற்றிகொள்வதைப் பற்றி வரக்கூடிய வருடங்களில் நாம் காணலாம்.
[ஆதாரம்: SSS அத்தியாயம் 18, ஸ்ரீசத்யசாய் பாலவிகாஸ் அமைப்பிற்கான வழிகாட்டுதல் மற்றும் கையேடு]