இராமாயணம்– முன்னுரை
இதிகாசங்கள் எனப்படுவது இராமாயணம் மற்றும் மகாபாரதமும் ஆகும். இராமாயணம் என்பது ஒரு காவியமாகும். இதை முதலில் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியவர் ஆதிகவி வால்மீகி முனிவர். இவர் ப்ராசேதஸ் என்பவரின் மகனாவார். கல்வி அறிவே இல்லாத ரத்னாகரன் என்ற கொள்ளைக்காரர் இராம நாமத்தை நாரதரிடமிருந்து உபதேசமாகப் பெறவிரும்பினார். அவரால் இராம என்ற நாமத்தை உச்சரிக்க இயலவில்லை. உடனே நாரதர் அருகிலுள்ள ஒரு மரத்தின் பெயர் என்னவென்று கேட்டார். அவர் அதை மராமரம் என்றார். நாரதரும் அவரை மரா என்றே இடைவிடாது உச்சரிக்ககூறினார். அது தானாகவே இராமா என்று மாறியது. இராமரையே நினைத்து பல வருடங்கள் அன்ன ஆகாரமின்றி, ரத்னாகரன் ஜபம் செய்தார். அவர் மீது ஒரு புற்றே தோன்றியது. அது கூடத் தெரியாமல் அவர் தவமிருந்தார். வல்மீகம் என்றால் புற்று என்று பொருள். புற்றிலிருந்து அவர் வெளி வந்ததால் அவர் வால்மீகி முனிவர் ஆனார். ஒருநாள் அவர் தமஸா என்ற நதிக்குக் காலை வழிபாட்டுக்குச் செல்லும்போது அங்கு இரண்டு கிரௌஞ்சப் பறவைகள் (ஒரு வகை கொக்குகள்) சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தன. அச்சமயத்தில் ஒரு வேடன் அதில் ஒரு ஆண் பறவையை தன் அம்பால் அடித்துக் கொன்றான். இதைக்கண்ணுற்ற வால்மீகி மிகவும் வருந்தி தன்னை அறியாமல் ஒரு ஸம்ஸ்க்ருதப் பாடலை எழுதினார். இதுவே ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் காணப்படும் முதல் சுலோகம் எனக் கருதப்படுகிறது. பின்னர் அவர் பிரம்மாவின் அருளுடன் இராமாயணத்தை ஏழு காண்டங்களாக அதாவது பிரிவுகளாகப் பிரித்து எழுதினார். காண்டம் என்றால் கரும்பு என்றும் பொருள்.
இராமரின் சரித்திரம் பல திருப்பங்களைக்கொண்டாலும், கரும்பில் உள்ள இனிப்பு போன்று அதில் கருணா ரசம் நிரம்பி உள்ளது. ஏழு காண்டங்கள் : பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம். ராமாயணத்தில் 24000 ஸ்லோகங்களால் இயற்றினார். வால்மீகி, அதை காயத்ரி மந்திரத்தின் அடிப்படையில் அமைத்தார். ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்கு காயத்ரியின் ஒரு அக்ஷரத்தை வைத்து ஆரம்பித்து வைத்திருக்கிறார்.