பத்ரம் புஷ்பம் – மேலும் படிக்க
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம் பக்த யுபஹ்ருதம் அஷ்னாமி ப்ரயதாத்மன:
(அத்.09, பதி.26)
பொருள்: பக்தியுடன் எவனொருவன் எனக்கு இலையோ, மலரோ, கனியோ, நீரோ அளிக்கிறானோ தூய மனம் கொண்ட அவனது பக்தியின் பொருட்டு நான் அதை ஏற்றுக்கொண்டு அருந்துகிறேன்.
அன்புடன் கடவுகளுக்கு அர்ப்பணிக்கப்படும் எளிமையானது எதுவாக இருந்தாலும் அதுவே இறைவனை மகிழ்விக்கும். இருப்பினும் முழுமையான, படைக்கப்பட்ட அனைத்துக்கும் முடிவுற்ற கொடைகளை வழங்கி வரும் இறைவனுக்கு நாம் எததகைய காணிக்கைகளை வழங்க இயலும்?மலர்களாயினும், இலையானாலும், கனிகளாயினும், நீரானாலும் நாம் அர்ப்பணிக்கும் எதுவாக இருந்தாலும் அது அவரது படைப்பேயன்றி வேறில்லை.
“நாம் அவருக்கு நம் கரங்களால் அல்ல, இதயங்களால் அர்ப்பணம் அளிப்போமாக: பக்தியும் மேன்மையும் ஆன எண்ணங்களான நம் மலர்களை! சுயநலமற்ற செயல்களான நம் கனிகளை! மற்றவரின் துன்பத்தைக் கண்டு இதயமுருகிப் பெருகும் கண்ணீராகிய நீரை நம் அன்பு இறைவனுக்கு அர்ப்பணம் செய்வோமாக! நீங்கள் எந்த அளவுக்கு இனிய உணவளித்தீர் என இறைவன் கணக்கிடுவதில்லை, மாறாக, எத்தனை இனிய வார்த்தைகளை நீங்கள் உச்சரித்திருக்கிறீர்கள், உங்கள் எண்ணங்களில் எந்த அளவு இனிமையை ஊட்டியிருக்கிறீர்கள் என்றே காண்கிறார். சந்தையில் கிடைக்கும் ஊதுவத்திகள் மூலம் நறுமணம் பரப்ப வேண்டுமென ஏன் முயல்கிறீர்கள்? தெய்வீக எண்ணங்கள் மற்றும் அனைவர் மீதும் கொள்ளும் அன்பாகிய நறுமணமாகிய புகை உங்களைச் சூழ்ந்தெழச் செய்யுங்கள்!” என நம் பேரன்புக்குரிய பகவான் கூறுகிறார்.
ஒருமுறை வாரணாசியில் உள்ள புனித கங்கையின் தீர்த்தத்தை பானையில் எடுத்துக் கொண்டு, பாரதத்தின் தென்கோடி முனையில், முக்கடல்கள் சங்கமிக்கும் இடத்தே உள்ள ராமேஸ்வரத்திற்குக் கொண்டு சென்று அங்கு குடி கொண்டுள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்விக்க வேண்டுமென புனித ஞானி ஏகநாதரும் அவர்தம் நண்பர்களும் முடிவு செய்தனர்.
அவர்கள் யாவரும் புனித தீர்த்தத்துடன் நூற்றுக்கணக்கான மைல்கள் கொண்ட நீண்ட தொலைவு நடந்தனர். நீண்ட யாத்திரையும் முடியும் தறுவாயில் இருந்தது. ஏகநாதர் கோயிலை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், தாகத்தினால் வறண்டு துன்புற்று இறக்கும் தறுவாயில் நெளிந்துகொண்டிருந்த கழுதை ஒன்றைக் காண நேரிட்டது. ஏகநாதர் உடனே அதனருகே சென்று வறண்டுபோய் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த அதன் வாயில் எவ்வித தயக்கமும் கொள்ளாமல் புனித கங்கையின் தீர்த்தத்தை ஊற்றினார். அந்த விலங்கின் கண்கள் தம்மைக் காப்பாற்றியவறை நோக்கி நன்றியுடன் ப்ரகாசித்தன.
ஏகநாதரின் நண்பர்கள் நீண்ட நெடும் பயணத்திற்குப்பின் தீர்த்த யாத்திரை முடியும் வேளையில் முறையின்றி, வழக்கத்தை முறியடிக்கும் வகையில் இவ்வாறு அவர் நடந்து கொண்டது கண்டு அதிர்ச்சியினால் உறைந்து போயினர்.
இருப்பினும் ஏகநாதர் பெரும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் கொண்டு, “இதன் நோக்கம் நிறைவேறியது. சிவனே கேட்டார், சிவனே பெற்றுக்கொண்டார். சிவனே நேரில் வந்து ஏற்றுக்கொண்டார்.” எனக் கூறினார்.
எத்தகைய சேவையானாலும் துன்புறும் ஜீவனுக்கு ஆற்றுகையில், அது இறைவனையே சென்றடைகிறது.