யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்
யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை செமிடிக் மதங்கள் என்ற பிரிவின் கீழ் வருகின்றன. செமிடிக் என்பதன் பொருள் யாதெனில், நோவாவின் மகன் ஷெம்’மின் வழித்தோன்றல்கள் என்பதாகும். இந்த மதங்கள் இறைத்தூதரின் தெய்வீக வழிகாட்டுதல்களை நம்புகின்றன. தாய் மதமான யூத மதத்திலிருந்துத் தோன்றிய மகள் கிறிஸ்தவ மதம். அதன் பின்னர் இஸ்லாம் பிறந்தது.
மோஸஸ், யூதர்களின் இறைத்தூதர் ஆவார். ஜெஹோவா கடவுளால் அவருக்கு விளம்பப் பட்ட பத்து கட்டளைகளை உள்ளது உள்ளபடி அவர்களுக்கு வழங்கினார். காலப்போக்கில் ஹிப்ரூக்கள்,தெய்வீக விதிகளின் உட்கருத்தை உணராமல், வெளிப்புற விழாக்களுக்கும், சடங்குகளுக்கும் முக்கியத்துவம் தர ஆரம்பித்தனர். இந்த காலக்கட்டத்தில், கிறிஸ்து தோன்றினார். அகத்தூய்மையே மதங்களின் நோக்கம், நமது வாழ்க்கை அன்பின் தத்துவம் கோலோச்சுவதாகவே இருக்க வேண்டும் என்று கூறினார். மனித குலத்திற்காக, தனது உயிரைத் தியாகம் செய்யும் அளவுக்குச் சென்றார். ஏசு, மோஸஸின், பழைய போதனைகளையும், யூத மதத்தின் உண்மையான உயிர்ப்பையும், மீளக் கொண்டுவர முயற்சித்தாலும், காலப் போக்கில் அது கிறிஸ்தவம் என்னும் புதிய மதமாக உருவெடுத்து விரைவில் பெருமதமாகியது.
7ஆம் நூற்றாண்டில் அரேபிய மக்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக மாறினார்கள். வெவ்வேறு சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றும் பல குடிகள் இருந்தார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் மற்ற பிரிவினருடன், இடையறாது போரில் ஈடுபட்டனர், இந்நிலையில் இறைத்தூதர் முகமது தோன்றி, இறைவனிடம், முழுமையான, ஒதுக்கீடற்ற சரணாகதியை போதித்தார். கிறிஸ்தவ மதத்தினைப் பூரணமாகவும், முழுமையாகவும் ஆக்கியதாக அவர் கூறினாலும், அவரது போதனைகள், ஒரு புதிய மதத்தின் தோற்றத்துக்கு வழி வகுத்தது. அதுவே இஸ்லாம்.
இந்த மூன்று மதங்களின் போதனைகள் கடைமுடிவில் ஒன்றேயாம். அவை ‘எல்லோருக்கும் தந்தை இறைவன்! “மனிதர் அனைவரும் சகோதரர்கள்’ என்பதை வலியுறுத்தின.









![அஷ்டோத்திரம் [55-108]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)











