இயற்கையின் பஞ்சபூதங்களை மனக்காட்சிப்படுத்துதல்:
உயிரினங்கள் உருவாகுவதற்கு அடிப்படை காரணமான பஞ்சபூதங்களை, அதாவது விண்வெளி, நீர், காற்று, நெருப்பு, நிலம் ஆகியவற்றை வழிபடுவது என்பது நமது இந்திய பாரம்பரியத்தின் முக்கிய அம்சமாகும். இவை ஐந்தும் உயிரை காப்பவனவாக நம்பப்படுகின்றன. ஆதலால் இவற்றிற்கு நாம் தகுந்த மதிப்பளிப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். “வாழ்வில் சமநிலையும், இயற்கையில் சமநிலையும் ஒன்றோடு ஒன்று பிணையப்பட்டது; முக்கியமானது”, என்று பாபா கூறுகிறார். இந்த சமநிலை நிறுவப்படும் பொழுது உலகில் அமைதி தவழும்.
வழிநடத்துதல் மூலம் மனக்காட்சி என்பது குழந்தைகளுக்கான தியானப் பயிற்சியில் ஒரு வகை எனலாம். ஏதாவது ஒரு பொருளையோ படத்தையோ காட்டி ஒரு ஆசிரியர் அல்லது பயிற்சியாளர் கற்பனை மூலம் மனக்காட்சியை வழி நடத்தலாம். ஒரு சித்திரத்தை காண்பித்து அல்லது ஒரு காட்சியை கற்பனை செய்யக் கூறி குழந்தைகளின் எண்ணங்களை வழிநடத்துதல் அல்லது அமைதியுடன் அமரச் செய்தல் என்று இதைக் கூறலாம். குழந்தைகள் விரும்பி ரசிக்கத்தக்க எல்லா விதமான பொருட்களும் இந்த கற்பனை வரம்புக்குள் இருக்கலாம். உதாரணம்:விண்வெளி, மேகக்கூட்டங்கள், பச்சை மரங்களுடன் கூடிய மலை, அமைதியான கடல், சூரிய உதயம், சந்திர உதயம், அந்திப்பொழுது, அழகிய தோட்டம், பூங்கா, வனம், நதி முதலியவை.
இப்படிப்பட்ட கற்பனையுடன் கூடிய மனக்காட்சி குழந்தைகளின் மன ஆற்றலையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவுகிறது மற்றும் வெற்றி, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, கீர்த்தி ஆகியவற்றை அடைவதற்கான உறுதியான ஒரு வழிமுறை ஆகும்.