நம் இந்திய தேசம், பல்வேறு ஞானியரும், ரிஷி முனிகளும், மனித உருவில் அவதரித்த தெய்வங்களும் நிறைந்த ஒரு தேசம். “இந்தியா (பாரதம்) ஒரு புண்ணிய பூமி (sacred land)” என்று ஸ்வாமி கூறியுள்ளார். இந்தியாவே, இவ்வுலகின் ஆன்மீக ரயில் வண்டியின் இயந்திரம் ஆகும். பிறநாடுகள், அந்த இயந்திரத்தில் கோர்க்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆகும். இந்த பூமியில்தான் ஞானிகளும், சாதுக்களும் இறைவனை வேண்டி தவம் இயற்றுகின்றனர். அவர்களுடைய பிரார்த்தனைக்கு மனமிறங்கி, இறைவன் இந்தப் புனித பூமியில் அவதரித்து, அருள்புரிகிறார். ஒவ்வொரு ஞானியும், பக்தரும், அவரவர்க்குரிய தனித்தன்மை வாய்ந்த வழியில் இறைவனிடம் அன்பும், பக்தியும் செலுத்தி இருக்கின்றனர்.
அத்தகைய சிறந்த ஞானியரின் வரலாற்றையும், அவர்களுடைய போதனைகளையும் பற்றி அறியவேண்டியது மாணவர்களின் முக்கிய கடமை. குருமார்கள் வகுப்பில், இந்த ஞானியரின் கதைகளை விளக்கி, அவர்கள் கடைப்பிடித்த பக்தி மார்க்கத்தையும் தெளிவுபடுத்தி, தினசரி வாழ்க்கையில், அந்த மார்க்கத்தைக் கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் தகுந்த உதாரணம் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.