குடும்ப வேலைகளில் பங்கேற்றுக்கொள்ளுதல் வசுதேவ குடும்பகம் (இறைவனின் குடும்பம்)
உலக முழுவதும் இறைவனின் குடும்பம், இதுவே நமது மறை நூல்கள் போதிப்பதாகும். இதுவே ஏனைய மறை நூல்களும் போதிப்பதாகும் – இதுவே, இறைவன் தந்தையென்பதையும், மக்களனைவரும் சகோதரர் என்பதையும் தெளிவிக்கும் உண்மையுமாகும். பைபிளானது, மனித குலம் அனைத்துக்கும் முன்னோரொருவரே, அவரே “ஆதம் (Adam)” ஆவார் என்கிறது. எபிரேயமொழியில் அதற்கு மனிதன் என்று பொருள். (“ஆத்மிசொல்லுடன் ஒப்பிட்டுணர்க) இந்து தத்துவத்தில், முதல்மனிதன் ‘மனு’ எனப்பட்டார். சாதி, வகுப்பு இவற்றின் தனித்தன்மை, சந்ததிமரபு இவற்றின் வேறுப்பட்ட தன்மை, இவையெல்லாம் அடிப்படையில் உள்ள மனிதத் தன்மையின் ஒருமையை மறக்கச்செய்யவோ, மறைக்கவோ இயலாது. யூத ரப்பிமார்கள் (Rabbis-ஆசிரியர்கள்), மனித ஜாதியின் முதல் தோற்றம் ஒருவனாக இருந்தது ஏன்? என்று கேட்டுப் பின் ஏனெனில் ஒருவன்இன்னொருவனிடம் என் தந்தை உன் தந்தையை விட உயர்ந்தவர் என்றுக்கூறக் கூடாதல்லவா, அதனால்தான் என்று விடை கூறுவார். பைபிளும், “உன் அண்டை வீட்டுக்காரனையும், உன்னை நேசித்துக் கொள்வதுபோல நேசி” என்று கூறுகிறது.
இத்தகைய மறை நூல் உபதேசங்களைத் தற்கால நாகரிகத்தில் மூழ்கியுள்ள நாம், தீர்க்க தரிசிகளின் நிறைவேறாத ஆசைகளென்றோ, பகற் கனவென்றோ கருதி ஒதுக்கி விடுகிறோம். அதேசமயம் இயந்திர நுட்பமும், கருத்துப் பரிமாற்ற வசதியும் வியக்கத்தக்க அளவில் முன்னேறியிருக்கும் இக்காலத்தில், ஒன்றுபட்ட உலக சமுதாயத்தைத் தூல அளவில் உருவாக்குதற்குச் சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. நாடுகளுக்கிடையே உள்ள தொலைவு என்ற தடங்கல் மிகவும் சுருங்கிவிட்டது. ஆகாயவிமானங்கள் உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றன. செயற்கை கிரகங்கள் பூமியைச் சுற்றிச் சுழல்கின்றன. .கண்டங்களையும், கடல்களையும் தாண்டி ஒருவருக்கொருவர் நேராகப் பேசிக் கொள்ள முடியும். இத்தகைய சூழ்நிலைகளில் எல்லா நாடுகளும் சகோதர பாவத்துடன் வாழ்வதும், மக்கள் அனைவரும் சகோதரத் தன்மையுடன் ஒற்றுமையாக வாழ்வதும் இன்றியமையாததாக, நடைமுறையில் பயன் தருபவையாக, ஏன் கட்டாயமாகக் கூட மாறிவிட்டன. ஆயினும், இந்தப் பௌதிக நெருக்கமும், அருகாண்மையும், எண்ணப் பாங்கில் ஒற்றுமையை வளர்க்காவிட்டால், இதயப்பாங்கில் அன்பினையும், புரிந்துகொள்ளும் தன்மையினையும், ஒருவரையொருவர் மதிக்கும் பண்பினையும் வளர்க்காவிட்டால் ஒற்றுமையானது நீண்ட நாட்கள் இராது: நிலைத்தும் இராது. உயிர்களனைத்தினும், இருப்பனைத்தினும் உள்ள ஒருமைத் தன்மை, படைப்பு முழுவதுடன் கூடிய ஒருமை, ஆத்ம அறிவுணர் அனுபவம், போன்ற ஆன்மீக உண்மைகளைப் புரிந்து, கிரகித்து, உறுதியான நம்பிக்கைகளாக எல்லோரின் இதயத்திலும் நிலைகொண்டால் அன்றி உள்ள ஒருமை வேர்விட்டு, வேரூன்றுவது இயலாதது. இத்தகைய உண்மைகளே பகவத் கீதை போன்ற உயர் நூல்களில் போதிக்கப்பட்டுவந்தன. இதயத்தினைப் பண்படுத்திக் கோதுநீக்கிக் குற்றம்களைந்து, விரிவடையச் செய்தல் வேண்டும். மனமானது ஒருமைத் தன்மையினைக் காண கற்பிக்கப்படல் வேண்டும், அகக்காட்சியானது படைப்பெல்லாவற்றிலும் உள்ள ஒருமைத்தன்மையினையும், இசைவையும், ஒன்றிணைப்பையும் காணும்படி விசாலப்படுத்த வேண்டும். எல்லாரிடத்திலும் உள்ள இந்த தெய்வீக உணர்ச்சியினைத் தட்டியெழுப்புவதன் மூலம் ஏற்படுகின்ற ஒப்பற்ற உணர்ச்சியும், ஒப்பற்ற உணர்வறிவனுபவமும் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் , சொல்லிலும், செயலிலும், வாழ்க்கையில் உள்ள எல்லாக் காரியங்களிலும் வெளிப்படுதல் வேண்டும். அப்போதுதான் நாம் மறை நூல்களனைத்திலும் கூறப்பட்ட வாழ்க்கைப் பயனை நிறைவேற்றியவர்களாவோம். அப்போது தான் உலகில் அமைதியும், களிப்பும் அரசாளும். அப்போது தான் மனித சமுதாயம் உண்மையான சகோதரத்வத்துடன் ஒரே குடும்பமாக, வாசுதேவனின் குடும்பமாக, இறைவனின் குடும்பமாக ஒன்றாக வாழ இயலும்.
சொந்த இல்லமே, உலகப் பிரஜையாக மாறுவதற்கு ஒரு ஆரம்ப கட்டமாகும்
மேற்கூறிய இலட்சியமானது, உலகின் உண்மையான ப்ரஜையாக வாழ்வதற்கான ஒன்றாகும். இதற்கு ஒருவன் தன் முயற்சியினாலேயே உயர் மாற்றம் பெறுதல் வேண்டும். தமது வீடே அதற்கு ஆரம்பக் கட்டமாகும். முதலில் ஒருவன் தனி மனிதனாக வாழ்க்கையைத் துவங்குகிறான். முதலில் தன்னை வீட்டில் பொறுப்புள்ளவனாகப் பின்னிப் பிணைத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு குடும்பத்தில் பயனுள்ள அங்கத்தினராகப் புரிந்து நடந்து கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு வளர்ச்சி பெற்று சமூகத்துக்குப் பயனுள்ளவராகவும், நாட்டுக்குப் பயனுள்ளவராகவும்,உலகத்துக்குப் பயனுள்ளவராகவும் ஆக வேண்டும். இது முப்பரிமாண வளர்ச்சி ஆகும். இவ்வளர்ச்சியில் படிப்படியாக இதய மொட்டாகிய அன்பு மலர்ந்து விரிகின்றது. அறிவு ஒளி மிகுகின்றது, ஞானம் உதயமாகின்றது. ஆகவே இந்த முன்னேற்றத்துக்கு எல்லோருக்கும் அவரவர் தம் குடும்பமே ஆரம்ப கட்டம், முதல் பயிற்சிக் கூடம்.
சமூக நிறுவனங்கள் அனைத்திலும் மிகப் பழமையானது குடும்பமேயாகும் என்று கூறுவது முக்காலும் உண்மை. Home! Sweet Home! There is no place like home…“இல்லம்! இனிய இல்லம்! இல்லம்போல் இனிய இடம் வேறெதுவும் இல்லை!”
சமூகம், நட்பும், அன்பும் இறைவன் மனிதனுக்கு அருளினார். “Socieity, friendship and love bestowed upon man” என்று ஒரு கவி பாடினார். பறவைகளும் விலங்குளுங் கூட நம்மைப் போலவே தம் குடும்பத்தினரிடம் பற்று வைத்திருப்பது உண்மையே. ஆனால் அவற்றின் குழந்தைப் பருவமானது, மிகக் குறைந்த கால அளவினதாகும். தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் திறமை வந்ததுமே அவை பெற்றோரிடமிருந்து விலகிவிடுகின்றன. நம்மைப் பொறுத்த வரையில், மனித இனத்துக்குப் பச்சிளம் பருவமும் குழந்தைப் பருவமும் சிறிது காலம் கூடுதலாகவே உள்ளன. நாம் மனிதர்களாக வளரும் வரை, பெற்றோரின் உதவியும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன. ஆகவே குழந்தைகளை வளர்ப்பதற்கு மிகுந்த பொறுமையும், இளகிய தன்மையும் ,பொருந்தியதியாக உணர்வும் பெற்றோருக்குத் தேவைப்படுகிறது. ஆகவே தான், குடும்பத்தில் தான் பண்பாடு உருவாக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது. குடும்பத்தில் தான் மிகச் சிறு வயதில் நம் மனதில் பற்பல பதிவுகள் ஏற்படுகின்றன .அவை வலுவுள்ளவையாகக் கடைசி காலம் வரையில் தங்குகின்றன.குடும்பத்தில் தான் நாம் கீழ்ப்படிதல் கட்டுப்பாடு,நேர்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை, தியாக உணர்வு போன்ற சிறந்த நற்குணங்களையும் வாழ்க்கையின் மேம்பாடுகளையும்(உயர்நலன்களையும்) கற்றுக்கொண்டு, கிரகித்துக் கொள்கிறோம். ஆகவேதான், இல்லம் அல்லது குடும்பமானது சமூக நற்பண்புகளை வளர்ப்பதற்கான குழந்தை கல்விக் கூடம்” எனஅழைக்கப்படுகிறது. மனிதனின் ஆளுமைத் தன்மைக்கும் வேர் மூலங்கள் குழந்தைப் பருவத்தில் உள்ளன என்று கூறப்படுகின்றது. நாடு முன்னேற வேண்டுமானால் முதலில் குடும்பம் முன்னேற வேண்டும்.
ஸ்ரீ சத்திய சாயி பாபா ஒரு முறை கூறினார்;
இதயத்தில் தரும நெறி குடிகொண்டால்,
பண்பாட்டில் அழகு மிளிரும்.
பண்பாட்டில் அழகு மிளிர்ந்தால்,
வீட்டினில் இசைவு மலரும்.
வீட்டினில் இசைவு மலர்ந்தால்,
நாட்டினில் ஒழுங்கு நிலவும்
நாட்டினில் ஒழுங்கு நிலவ,
உலகில் அமைதி நிறையும்.
குழந்தை நல்வழியில் வளரக் கட்டுப்பாடும், முயற்சியும் தேவை. அதற்கு மேலாக பெற்றோரும் மற்றோரும் முன்னுதாரணமாக வாழவேண்டும். அப்போது குழந்தைகள் தாமாகவே வாழ்க்கையின் மேம்பாடுகளை (உயர் நலன்களை) தமக்குள் ஏற்றுக் கொண்டு, அதன் பயனாக வளரும் போது இலட்சியப் பிரஜைகளாக வளர்வர்.