முன்னுரை
Religion என்னும் சொல், “கட்டப்படுதல்” அதாவது இறைவனுடன் (மூலத்துடன்) கட்டப்படுதல் என்ற பொருள் கொண்ட Re-ligare என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். விளையாட்டை முடித்த குழந்தை,தாயின் அரவணைப்பையும், பாதுகாப்பையும் தேடி தாயிடம் திரும்பச்செல்வது போல்,மனிதனும் இறைவனின் கருணை, பாதுகாப்பு, அன்பு இவற்றிற்காக உறுதியான உட்கிடக்கையால் உந்தப்பட்டு ஏங்குகிறான்.
மதம் என்பது, காக்கின்ற தெய்வீக சக்தியிடம்,-ஒருவரின் நடத்தையில், நன்னெறியில், நல்லவனாக இருந்து, நல்லனவற்றையே செய்து, நல்லவற்றையே பார்க்க வைக்கும் தெய்வ ஆற்றல் மீது நம்பிக்கை வைப்பதாகும். பிரபஞ்சத்தில் ஒத்திசைவை பராமரிக்க மதம் நமக்கு உதவுகிறது.அனைத்து மதங்களும் படைத்தவனுக்கும், மனிதனுக்குமிடையே ஒரு பாலமாக உள்ளது. அனைத்து மதங்களும் இறைவனை, தமக்கு உரிய வழியில் விவரிக்க முயல்கின்றன. ஆனால், அந்த ஒரே கடவுளே அனைத்து மதங்களின் குறிக்கோளாக உள்ளார்.
சர்வ தர்ம ஒற்றுமை
பாபா கூறுகிறார்” மதம்(Religion) என்பது மனிதனின் மதியை(MIND ) நேராக்கவும், வலிமையானதாக்கவும் ஈடுபடுத்தப்படவேண்டும். அனைத்து மதங்களின் குறிக்கோள் என்பது, ஒரு தனி மனிதனின் மனதை கட்டுப்படுத்தவும் முக்தி பெறவும் உதவி செய்வதேயாகும். அனைத்து தனி மனிதரும் தத்தம் மனதை கட்டுப்படுத்தினால்,சரியான வழியில் சிந்தித்தால்,சமுதாயத்தில் அமைதி நிலவும்.
சாயி மதம்
மதங்களை ஸ்தாபித்து,அதனை பரப்பியவர்கள் அனைவருடைய கொள்கையும் ஒன்றே. அவர்கள் நல்லதையே செய்து, நல்லவராக இருந்து, நல்லவற்றையே கண்டு, மக்களை சமுதாயத்தின் உபயோகமான அங்கத்தினர்களாக இருக்கக் கற்பித்தார்கள்.இதற்கு, மனம், தூயதாகவும், கட்டுப்படுத்தப்பட்டதாகவும் சரியான பாதையில் திருப்பப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
பாபா கூறுகிறார்:
- உயர்ந்த மகான்களின் மத போதனைகளை நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்
- நாம் நமது குடும்பத்தினரை நேசிக்க வேண்டும். மேலும் நமது இல்லம், இசைவின் மையமாக மாறும்
- இறைவனின் “தந்தைமை, மற்றும் மனிதனின் சகோதரத்துவத்தில் நம்பிக்கைக் கொள்வது மிக முக்கியமானதாகும்.
- ஆணவம்,பேராசை, மற்றும் பொறாமை ஆகியவை, இதயத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்
- இறைவனின் சக்தியில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டு,எப்போதும் பொறுமையாக இருக்க வேண்டும்.
நமது சொந்த மதத்தின் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து,பரம்பொருளான இறைவனிடம் நம்பிக்கை வைத்து, இதர மதங்களை மதிக்க வேண்டும்.
இதுவே, சாயி மதம். அனைத்து மதங்களையும் ஏற்றும், அரவணைத்தும், பொதுவான உயர்க் கருத்துக்களை வலியுறுத்துவதுமாகும்.இந்த மதத்தை தைரியமாகவும்,சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொள்ளுங்கள்!