ஓம்காரத்தை ஓதுதல்
ஓம்காரம் உருவமற்ற பரம்பொருள் (அ) கடவுள். வேதங்களில் நான் பிரணவம் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பிரணவம் அல்லது ஓம்காரம், ஆதி மூலமான சப்தமாகும்.
சப்தம் எங்கும் நிறைந்துள்ளது. எல்லாச் சப்தங்களும் ஆதி சப்தமான பிரணவத்தின் விகாரங்களே (மாறுபாடுகளே). அகரம், உகரம், மகரம் இம்மூன்றும் சேர்ந்து ஓம்காரமாகிறது. அகரம் பிரம்மாவின் படைப்புத் தத்துவத்தையும், உகரம் விஷ்ணுவின் காப்புத் தத்துவத்தையும், மகரம் ருத்ரனுடைய அழிப்புத் தத்துவத்தையும் குறிக்கின்றன.
- ‘அ’ என்ற ஒலி தொண்டையில் எழுகிறது.
- ‘உ’ என்ற ஒலி நாக்கிலி ருந்து எழுகிறது.
- ‘ம்’ என்ற ஒலி உதடுகளிலிருந்து உண்டாகிறது.
அகர ஒலி யில் மெல்ல ஆரம்பித்து, உகர ஒலி-யில் சப்தம் அதிகரித்து, மகர ஒலியில் மெல்ல சப்தம் ஒடுங்கும்படி ஓத வேண்டும்.
தூரத்திலிருந்து வரும் விமான ஒலி மெல்ல மெல்ல அதிகமாகிப் பக்கத்தில் வரும்போது அதிகரித்து, பிறகு தூரச் செல்லும்போது கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து மறைந்து விடுவது போலப் பிரணவத்தை ஜபிக்கும்போது ஒலி எழுந்து அமையவேண்டும். ஓம்காரத்தை முறைப்படி ஓதும் பொழுது, சப்தம் நாபியிலிருந்து எழும்.
ஜீவ தத்துவத்தில், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து கோஸங்கள், மனம் உள்பட இருபத்தியொரு அம்சங்கள் உள்ளன.
ஓம்காரத்தை ஓதினால் இவை அனைத்தும் தூய்மைப்படுத்தப்படுகின்றன. ஆதலால் நாம் இருபத்தியொரு முறை ஓம்காரத்தை ஓதுதல் வேண்டும். எந்தச் செயலைத் தொடங்கும்போதும் ஓம்காரத்தை ஓதித் தொடங்க வேண்டும். செயல் முடியும்போது ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓத வேண்டும்.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் – உலக நீதி.
பிராணாயாமப் பயிற்சி
பதஞ்சலி- முனிவர் இயற்றிய ராஜயோகத்தில் (அ) அஷ்டாங்க யோகத்தில் எட்டு சாதனாக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பிராணாயாமம். சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதும், சீராக்குவதுமே பிராணாயாமம் ஆகும்.
மூன்று நிலைகள்:
- பூரகம்– மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்
- கும்பகம்– காற்றைத் தக்கவைத்தல்
- ரேசகம்– காற்றை வெளியே விடுதல்
இம் மூன்றையும் 1:4:2 என்ற விகிதத்தில் செய்ய வேண்டும். அதாவது பூரகம் 4 நொடிகள் எனின், கும்பகம் 16 நொடிகள் மற்றும் ரேசகம் 8 நொடிகள்.
செய்முறை:
- வலது கட்டை விரலால், வலது நாசித்துவாரத்தை அடைத்து இடது நாசித்துவாரம் வழியாக பூரகம். பின் கும்பகம்.
- அதற்குப்பின் இடது நாசித்துவாரத்தை அடைத்து வலது நாசித்துவாரம் வழியாக ரேசகம்.
- பின்பு வலது நாசித்துவாரம் வழியாக பூரகம். பின் கும்பகம்.
- பின் வலது நாசித்துவாரத்தை அடைத்து இடது நாசித்துவாரம் வழியாக ரேசகம்.
இவ்வாறு காலையில் 9 முறையும் மாலையில் 9 முறையும் செய்க.
குருவின் சீரிய கவனத்திற்கு: தகுதிவாய்ந்த குருவிடம் முறையாகப் பிராணாயாமப் பயிற்சி பெற்றபின், பால விகாஸ் குரு கற்றுக் கொடுக்கவும். எளிய அடிப்படைப்பயிற்சி போதுமானது. தவறான பயிற்சியை அளிக்கக் கூடாது.
நன்மைகள் :
- பிராணாயாமம் 72,000 நாடிகளையும் தூய்மைப்படுத்துகிறது (நாடி = பிராணன் செல்லும் பாதை).
- தியானம் மேற்கொள்ள இது அடிப்படைத் தேவையாகும்.
- மனம் சீராக இருப்பின் சுவாசம் சீராக இருக்கும். பொங்கும் கோபத்தின் பொழுது, சுவாச விகிதம் அதிகரிக்கிறது. சாந்தமாக இருக்கும் பொழுது சுவாச விகிதம் சீராகிறது.
- சீரான சுவாசம் ஆயுளை அதிகரிக்கிறது. நிமிடம் 1க்கு சுவாச எண்ணிக்கை குறையக் குறைய ஆயுள் அதிகரிக்கும். (உ.ம்) நிமிடம் 1க்கு 15 முறை சுவாசிக்கும் மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகள். ஆனால் நிமிடம் ஒன்றிற்கு 7 முறை சுவாசிக்கும் ஆமையின் ஆயுள் 200 ஆண்டுகள்.
- பனிமலையில் தவசி சூர்ய பிராணாயாமம் மூலம் வெப்பம் பெறுகிறார். கடுங்கோடையில், சந்திர பிராணாயாமம் மூலம் குளிர்ச்சி பெறுகிறார்.
சிந்தனை செய் மனமே!
- சைக்கிள் சக்கரத்தினுள் வட்டவடிவ ரப்பர் குழாய், காற்று நிரப்பப்பட்ட பின், 160 கிலோ எடையைச் சுமக்கிறது. இரும்பு அல்ல ரப்பர் குழாய். எப்படி?
கும்பகம் (காற்றைத் தக்க வைத்தல்) மகிமை. - சர்க்கஸில் பயில்வான் தரையில் படுத்துக்கொள்வார். அவர் மார்பு மீது மரப்பலகையை வைத்திடுவர். நான்கு டன் எடை கொண்ட யானை ஏறி இறங்கும். பயில்வானுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. எப்படி?
நீண்ட கால கும்பகப் பயிற்சி.